June 4, 2023

வாளாக சுழற்றி அடிக்கும் செங்கோல் ..!

“செங்கோல் விவகாரத்தில் whatsapp பல்கலைக்கழக தகவல்களை வைத்துக்கொண்டு கதை அளந்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.ஆட்சி மாற்றத்தின் அடையாள என செங்கோலை நேருவிடம் மவுண்ட் பேட்டர்ன் பிரபு கொடுத்ததற்கான அரசு ஆவணம் எதுவும் இல்லை” – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொல்லுகிறார் என்றால் திருவாவடுதுறை ஆதீனம் நேருவிடம் செங்கோல் கொடுத்தார் என்று. செங்கோலின் மகத்துவத்தை தெரியாமல் நேரு அதை ஒரு வாக்கிங் ஸ்டிக் போல கருதி அலகாபாத் மியூசியத்திற்கு கொடுத்துவிட்டார் என்பதும் அமித் ஷாவின் குற்றச்சாட்டு

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு ஆட்சி மாற்ற அடையாளமாக நேருவிடம் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றதாக இப்போதைய திருவாவடுதுறை ஆதீனம் சொல்கிறார். ஆனால் அவரும் செங்கோலை மவுன்ட்பேட்டன் பிரபு நேருவிடம் கொடுத்தார் என்று சொல்லவில்லை. பிரச்சனை எங்கு வெடிக்கிறது என்றால், மதச் சின்னத்தின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது என்று கருதிய நேரு அதை அலகாபாத் மியூசியத்திற்கு கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

செங்கோல் பற்றி “புதிய சரித்திரங்களை” அரசின் பத்திரிகைக் குறிப்பாக வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என ஆரம்பித்து, பிரபல எழுத்தாளர் Ramanan Vsv நேற்று அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் பகுதிகள்.

…சிம்மாசனம், வெண்கொற்றக்குடை, கீரிடம் செங்கோல், எதுவுமில்லாத தேசத்தில், புதிதாகத் தயாரித்த செங்கோலை மடாதிபதி மவுன்ட் பேட்டனிடம் கொடுத்து அதை அவர் நேருவிடம் கொடுத்ததாகப் போகிறது புதுக்கதை. அப்படி நிகழ்ந்திருந்தால் புதிய இந்தியாவின் முதல் சரித்திரச் சான்றாக அது பதிவு செய்யப்பட்டிருக்கும், அந்தப் புகைப்படம் ஆவணப்படமாக நிரந்தரமாக இடம் பெற்றிருக்கும்.உண்மையில் செங்கோல் யாரால் எப்போது கொடுக்குப் பட்டது? அதை நேரு என்ன செய்தார்? என்பதை என்னுடைய நேருவின் ஆட்சி -பதியம் போட்ட 18 ஆண்டுகள் புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்..”- என்று சொல்லிவிட்டு விவரத்தை வெளியிடவில்லை.

ராஜாஜி விருப்பத்தின் பேரில் ஒரு மடம் அப்போது ஒரு நகைக்கடையில ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டு நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு செங்கோலை, அரசின் சுதந்திர நிகழ்வு ஆவணமாக ஏன் நிறுவ முற்படுகிறார்கள் என்பது தான் பாஜக எதிர்ப்பாளர்கள் சுழற்றி அடிக்கும் ஒரே கேள்வி.

ஆட்சி மாற்ற அடையாளமாக ஜவஹர்லால் நேருவிடம் மவுண்ட் பேட்டன் பிரபு செங்கோலை ஒப்படைத்தாரா? அப்படி ஒப்படைத்திருந்தால் அது தொடர்பான அரசின் ஆவணம் எங்கே?

யாரிடம் இருக்கிறது இதற்கான விடை?

ஏழுமலை வெங்கடேசன்