டிஆர்பி வேட்டை…நலிந்துபோகும் ஊடக அறம்- கைகட்டிப் பார்க்கும் NBDSA!
இந்திய ஊடகத் துறையில் தார்மீக விழுமியங்களைக் காக்க வேண்டிய சுயக்கட்டுப்பாட்டு அமைப்புகள் எந்தளவுக்குச் சுதந்திரமாகவும், வேகமாகவும் செயல்படுகின்றன என்பது விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையத்தின் (NBDSA) செயல்பாடுகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம்.. தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் NBDSA (News Broadcasting & Digital Standards Authority), கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கிய தீர்ப்புகள் குறித்த ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆய்வு முடிவுகள், இந்திய ஊடகத்துறையின் ஒரு கருப்புப் பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளன.

விதிமீறல்களின் தலைநகரம்: புள்ளிவிவரங்களின் நேரடி சாட்சியம்
கடந்த மூன்று ஆண்டுகளில் (ஜனவரி 1, 2023 – டிசம்பர் 31, 2025) NBDSA வழங்கிய மொத்த உத்தரவுகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நிகழ்ச்சிகளுக்கு எதிரானவை.
-
மொத்த உத்தரவுகள்: 54.
-
மதத் துவேஷம்: இதில் 32 வழக்குகள் மத ரீதியான பாகுபாடுகளை (Religious Stereotypes) முன்னிறுத்தியவை.
-
தண்டனை விகிதம்: 54 புகார்களில் 43 வழக்குகளில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டுத் தண்டனை (Penalised) வழங்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டு பரப்பப்படும் ‘ஜிகாத்’ சொல்லாடல்கள்
9 வழக்குகள் சிறுபான்மையினரோடு தொடர்புடைய ‘மக்கள்தொகை வெடிப்பு’ அல்லது ‘மக்கள்தொகை மாற்றம்’ (Demographic change) குறித்த போலி பிம்பங்களை முன்னிறுத்தின. இதில் இரண்டு வழக்குகளில் “Land Jihad” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மேலும், “Love Jihad” என்ற பெயரில் கலப்புத் திருமணங்களைச் சதியாகச் சித்தரித்த 9 வழக்குகளும், உணவு தொடர்பான “Thook (spit) Jihad” குறித்த 2 வழக்குகளும் ஆணையத்தால் தண்டிக்கப்பட்டுள்ளன.
பல் இல்லாத அமைப்பு: பெயரளவிலான அபராதங்கள்
விதிமீறல்களை ஒப்புக் கொள்ளும் NBDSA, அதற்கான தண்டனைகளை வழங்குவதில் மெத்தனமாகவே உள்ளது. 2024 டிசம்பரில் திருத்தப்பட்ட விதிகளின்படி, நான்காவது முறை விதிமீறலுக்கு ஒரு சேனலின் வருவாயில் 1 சதவீதம் அல்லது 25 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க அதிகாரம் இருந்தும், அது பயன்படுத்தப்படவில்லை.
-
அபராதத் தொகை: கடந்த 3 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட மொத்த அபராதமே வெறும் 3.2 லட்சம் ரூபாய் தான்.
-
2025-ல் பூஜ்ஜியம்: 2025-ல் பிறப்பிக்கப்பட்ட 19 உத்தரவுகளில் ஒரு முறை கூட நிதி அபராதம் விதிக்கப்படவில்லை.
-
தண்டனை முறை: பெரும்பாலும் “வீடியோவை நீக்குங்கள்” என்ற உத்தரவோடு ஆணையம் ஒதுங்கிக் கொள்கிறது. 54 வழக்குகளில் 37-ல் மட்டுமே வீடியோவை நீக்க உத்தரவிடப்பட்டது.
தாமதமாகும் நீதி… பலனற்றுப் போகும் நோக்கம்!
ஒரு புகார் அளிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வரச் சராசரியாக 11 முதல் 12 மாதங்கள் ஆகின்றன. இந்த ஓராண்டு காலத்தில், விஷமத்தனமான அந்த வீடியோக்கள் பொதுவெளியில் (Public Domain) தடையின்றிப் பகிரப்பட்டு, சமூகப் பதற்றத்தை ஏற்கனவே ஏற்படுத்தி விடுகின்றன.
குற்றவாளிக்கூண்டில் நிற்கும் ‘முன்னணி’ நிறுவனங்கள்
அதிகப்படியான ‘வீடியோ நீக்கம்’ உத்தரவுகளைப் பெற்ற நிறுவனங்கள்:
-
Times Now Navbharat: 16 உத்தரவுகள் (இதில் ஒரு வழக்கில் ரூ. 1 லட்சம் அபராதம் – இதுவே கடந்த 3 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட அதிகபட்சத் தொகை).
-
News18 India: 8 வீடியோ நீக்கம் மற்றும் 4 அபராதங்கள்.
-
Zee News: 5 வீடியோ நீக்க உத்தரவுகள்.
தேர்தல் விதிமீறலும்… அரசியல் சார்பும்!
2025 டெல்லி தேர்தலின் போது, “ராமரின் செல்வாக்கு பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்தியது” எனப் பேசிய ‘News18 India’ நிகழ்ச்சி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகத் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தண்டிக்கப்பட்டது. மேலும், குயர் (Queer) சமூகம், சாதி மற்றும் பழங்குடியினரை இழிவுபடுத்துதல், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான செய்திகள் குறித்தும் புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
தலைமையின் விளக்கம்: மழுப்பலா? உண்மையா?
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான இந்த ஆணையம், ஒன்பது உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தைப் பெற வேண்டியிருப்பதாலேயே தாமதம் ஏற்படுவதாகக் கூறுகிறது. எம். குணசேகரன் (Sun News), வைஷாலி சூட் (NDTV), ரஞ்சித் குமார் (Times Now Navbharat), யாதகிரி ரெட்டி (Sakshi TV) உள்ளிட்ட ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும், தங்கள் நிறுவனம் சார்ந்த விசாரணைகளில் அவர்கள் பங்கேற்பதில்லை என விளக்கப்பட்டுள்ளது.
ஆந்தை பார்வையில்…
டிஆர்பி போதையில் இருக்கும் செய்தி நிறுவனங்களுக்கு, சில லட்சங்கள் அபராதம் என்பது ஒரு பொருட்டே அல்ல. நத்தை வேகத்தில் நடக்கும் விசாரணையும், பலவீனமான அபராதங்களும் ஊடக நிறுவனங்களுக்கு ஒருபோதும் அச்சத்தை ஏற்படுத்தாது. சுயக்கட்டுப்பாட்டு அமைப்புகள் தங்கள் ‘பற்களை’ கூர்மையாக்காத வரை, வெறுப்பு அரசியல் எனும் விஷத்தை விதைப்பதை ஊடகங்கள் நிறுத்தப் போவதில்லை.
நிலவளம் ரெங்கராஜன்


