காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம்!- கொட்டும் மழையில் ராகுல்!
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலும் ராகுல்காந்தி நடைபயணத்தைத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் ராகுல்காந்தி பங்கேற்ற யாத்திரைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் மைசூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மகாத்மா காந்தி போராடியது போல, காந்தியை கொன்ற சித்தாந்தத்துடன் இன்று நாம் போராடி வருகிறோம் என்று ராகுல்காந்தி கொட்டும் மழையில் நனைந்தபடியே பேசினார். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட ராகுல்காந்தி, இந்தியாவை இணைக்கும் முயற்சியில் தங்களை எதுவும் தடுக்க முடியாது என்றுm கூறியுள்ளார். இதனிடையே கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில், ராகுல் காந்தியுடன் சேர்ந்து சோனியா காந்தி நடைபயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, வரும் 8ம் தேதியன்று பிரியங்கா காந்தியும் நடைபயணத்தில் இணைவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து, மைசூருவில் நேற்று ஒரு பொதுக் கூட்டத்தில் மழையில் நனைந்த படி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஒரு நதியைப் போல, இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாயும். புயலோ மழையோ எதுவும் அதன் ஓட்டத்தை நிறுத்தாது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் பரப்பும் வெறுப்பு மற்றும் வன்முறையை தடுக்கும் நோக்கில், நடத்தப்படும் இந்திய ஒற்றுமை யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது.
நமது இந்திய ஒற்றுமை நடைபயணம், மகாத்மா காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம். காந்திஜி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடியது போல், காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் இன்று நாம் போராடுகிறோம். இந்த சித்தாந்தம் கடந்த எட்டு ஆண்டுகளில் சமத்துவமின்மை, பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது. பலத்த மழையிலும் என்னுடைய பேச்சைக் கேட்டு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றி என்றார்.
ராகுல் காந்தி கனமழையில் நனைந்தபடி பேசிய வீடியோவை, காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.