சதுப்பு நிலப் பராமரிப்பில் அலட்சியம்:தமிழகத்திற்கு ஆண்டுக்கு ₹19,000 கோடி பொருளாதார இழப்பு!
இயற்கையின் சிறுநீரகங்கள் என்று அழைக்கப்படும் சதுப்பு நிலங்கள் (Wetlands), சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் இவை வேகமாக அழிந்து வருவது சுற்றுச்சூழல் பாதிப்பைத் தாண்டி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் பாதிப்பதாக மாநிலத் திட்டக் குழுவின் சமீபத்திய அறிக்கை எச்சரித்துள்ளது. சதுப்பு நிலங்களை மீட்டெடுக்கத் தவறுவதால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 19,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
குறைந்த முதலீடு; கோடிகளில் லாபம்
தமிழகத்தில் உள்ள 61 உள்நாட்டுச் சதுப்பு நிலங்களைச் சீரமைக்க வெறும் ₹5.4 கோடி மட்டுமே செலவாகும் என மதிப்பப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சிறிய முதலீட்டைச் செய்வதன் மூலம், நீர்நிலைகள் அழிவதால் ஆண்டுக்கு ஏற்படும் ₹13,081 கோடி பொருளாதார இழப்பைத் தவிர்க்க முடியும் என மாநிலத் திட்டக் குழு தெரிவித்துள்ளது. தற்போது விவசாயப் பயன்பாடு குறைந்து வருவதால், இந்த நீர்நிலைகளை நிலத்தடி நீர் செறிவூட்டல், மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலாத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் வகையில் பல துறைகள் ஒருங்கிணைந்த புதிய நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் என அறிக்கை வலியுறுத்துகிறது.

100 நாள் வேலைத்திட்டமும் சுற்றுச்சூழல் மீட்பும்
சதுப்பு நிலங்களை மீட்டெடுக்கும் பணிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MGNREGA) நிதியைப் பயன்படுத்திக் கொள்ள இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதுடன், குறைந்த செலவில் இயற்கையை மீட்டெடுக்க முடியும். இந்த நீர்நிலைகள் வெறும் உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் உதவும் விலைமதிப்பற்ற சொத்துக்கள் என்பதால் இவற்றை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார இழப்பின் பின்னணி:
சதுப்பு நிலங்கள் இயற்கையாகவே வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திறனும், நிலத்தடி நீரைச் செறிவூட்டும் தன்மையும் கொண்டவை. இவை அழிக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள் மற்றும் வறட்சியைச் சமாளிக்க அரசு பெரும் தொகையைச் செலவிட வேண்டியுள்ளது. விவசாய உற்பத்தி பாதிப்பு, மீன்வளம் குறைதல் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் அழிதல் போன்றவற்றால் ஏற்படும் மறைமுகப் பொருளாதார இழப்புகளைக் கணக்கிடும்போது, அது 19,000 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட தொகையை எட்டுகிறது.
இயற்கை உள்கட்டமைப்பும் இலக்குகளும்:
சதுப்பு நிலங்கள் வெறும் நீர்நிலைகள் மட்டுமல்ல, அவை ஒரு மாநிலத்தின் ‘இயற்கை உள்கட்டமைப்பு’ (Natural Infrastructure) ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (Sustainable Development Goals – SDGs) அடைவதற்குச் சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு மிக அவசியமானது. சுத்தமான குடிநீர், காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் நிலவாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் போன்ற பல இலக்குகள் இந்த நீர்நிலைகளுடனேயே பிணைக்கப்பட்டுள்ளன.
பல்லுயிர் பெருக்கமும் வாழ்வாதாரமும்:
தமிழகத்தின் கடலோர மற்றும் உள்நாட்டுச் சதுப்பு நிலங்கள் ஆயிரக்கணக்கான உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் மீன்பிடித் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு வாழ்வாதாரமாக விளங்குகின்றன. இவற்றின் அழிவு, அந்தப் பகுதிகளைச் சார்ந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதுடன், மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தியிலும் (GSDP) தொய்வை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பது என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல, அது ஒரு பொருளாதாரத் தேவையாகவும் மாறியுள்ளது. 19,000 கோடி ரூபாய் இழப்பைத் தவிர்க்க வேண்டுமானால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த திட்டங்களை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இயற்கையைப் பாதுகாப்பதில் நாம் செய்யும் முதலீடு, எதிர்காலப் பொருளாதாரப் பேரிடர்களில் இருந்து நம்மைக் காக்கும் அரணாக அமையும்.
நிலவளம் ரெங்கராஜன்


