🎬ஐந்து மொழிகளில் தயாரான ’45’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான ‘45′ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சுராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள ’45’ படத்தின் டிரெய்லரை, பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

டிரெய்லர் தரும் எதிர்பார்ப்பு
இந்தியத் திரையுலக ரசிகர்கள் இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான காட்சிகளுடன், ரசிகர்களை ஒரு ஃபேன்டஸி உலகிற்குள் அழைத்துச் செல்லும் விதமாக ’45’ படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது.
-
கதாப்பாத்திரங்களின் அறிமுகம் அசத்தலாக இருக்க, பின்னணியில் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடலான ‘ராஜாவின் பார்வையில் ராணியின் பக்கம்’ இடம்பெற்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
ட்ரெய்லரைப் பார்த்த காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங், “‘45’ திரைப்படம் காவல் துறைக்கு நல்ல செய்தியைக் கூறுகிறது. முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால், இப்படம் வசூலில் மாபெரும் வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விழாவில் படக்குழுவினர் உரை:
விழாவில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி, இயக்குநர் அர்ஜுன் ஜான்யா, நடிகை சுதாராணி, நடிகர் பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் அர்ஜுன் ஜான்யா:
இசையமைப்பாளராக இருந்து இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அர்ஜுன் ஜான்யா பேசுகையில், “சிவண்ணா (சிவராஜ்குமார்) ஊக்குவிக்கவில்லை என்றால் நான் இயக்குநராகியிருக்க முடியாது. உபேந்திரா ஒரு இயக்குநர் ஐகான்; அவரிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன். இந்தப்படம், நாம் மறந்துவிட்ட சில உண்மையான மதிப்புமிக்க விஷயங்களைப் பேசுகிறது. மூன்று ஹீரோக்களுடன், தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டியே நான்காவது ஹீரோ” என்று கூறினார்.
டாக்டர் சிவராஜ்குமார்:
’45’ தனது 129வது படம் என்று குறிப்பிட்ட சிவராஜ்குமார், “என் முதல் படமான ‘ஆனந்த்’ செய்தபோது இருந்த அதே பயமும் பக்தியும் இந்தப் படத்திலும் எனக்கு இருந்தது. அர்ஜுன் ஜான்யாவின் கதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ‘45’ என்பது ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு விநாடி என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அது உங்களை ஆச்சரியப்படுத்தும். இது அனைவரையும் இணைக்கும் படம். கிளைமாக்ஸ் காட்சிகளைப் படமாக்கும்போது நான் கீமோதெரபியில் இருந்தேன். இயக்குநரின் கனவை முழுமையாக்கியுள்ளோம். இப்படம் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்” என்றார்.
நடிகர் உபேந்திரா:
உபேந்திரா பேசுகையில், “இந்த படத்திற்குத் திரைக்குப் பின்னால் மூன்று ஹீரோக்கள் இருக்கிறார்கள் – தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, இயக்குநர் அர்ஜுன் ஜான்யா, ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே. ‘ரசிகர்களே கடவுள்’ என்று கூறிய டாக்டர் ராஜ்குமாரை நினைவுகூர வேண்டிய தருணம் இது” என்று நெகிழ்ந்தார்.
நடிகர் ராஜ் B. ஷெட்டி:
ராஜ் B. ஷெட்டி, தான் சிவராஜ்குமார் மற்றும் உப்பேந்திராவின் ரசிகர் என்று குறிப்பிட்டு, “என் சமீபத்திய படம் ‘சு ஃப்ரம் ஸோ’ மூலம் லாபமாக பெற்ற முதல் ஆயிரம் ரூபாயை, இயக்குநர் அர்ஜுன் ஜான்யா மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி ஆகியோருக்குத் தலா 500 ரூபாய் வீதம் வழங்கினேன்” என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த ’45’ திரைப்படம், ஜனவரி 1, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.


