தமிழரின் கம்பீரம்: சர்வதேச வேட்டி தினம் – ஒரு சிறப்புக் பார்வை!

தமிழரின் கம்பீரம்: சர்வதேச வேட்டி தினம் – ஒரு சிறப்புக் பார்வை!

“ஆள் பாதி ஆடை பாதி” என்பார்கள். ஆனால், இன்றைய சூழலில் ஒரு மனிதனின் ஆளுமையை அவன் உடுத்தும் ஆடையே முழுவதுமாகத் தீர்மானிக்கிறது. நாகரீகச் சுழற்சியில் பல ஆடைகள் வந்து போனாலும், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு. அந்த வகையில், தமிழகத்தின் ஈடுஇணையற்ற பாரம்பரிய அடையாளமாகத் திகழ்வது ‘வேட்டி’.

வேட்டி தினத்தின் பின்னணி: இரு ஆளுமைகள்

தமிழகத்தில் வேட்டி அணியும் வழக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஜனவரி 1 முதல் 6-ஆம் தேதி வரை ஒரு வார காலம் வேட்டி விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஜனவரி 6-ஆம் தேதி ‘சர்வதேச வேட்டி தினமாக’ கடைபிடிக்கப்படுவதற்கு மிக முக்கியக் காரணங்களாக இரண்டு ஆளுமைகள் திகழ்கின்றனர்:

  1. ஏகாம்பரநாதன்: தென்காசி மாவட்டம் பாப்பான்குளத்தில் பிறந்த இவர், நெசவுத் தொழிலுக்கே மேன்மை தரும் வகையில் ‘அம்பர் ராட்டை’ (Amber Chakra) எனும் நூற்புக் கருவியைக் கண்டுபிடித்தவர். இவரது பிறந்தநாளான ஜனவரி 6-ஐப் பெருமைப்படுத்தும் விதமாக இந்நாள் உருவானது.

  2. உ. சகாயம் இ.ஆ.ப.: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்தபோது, பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘வேட்டி நாள்’ கொண்டாடுவோம் என்கிற ஆலோசனையை முன்னெடுத்து, இளைஞர்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர்.

வேட்டி: சமத்துவத்தின் மொழி

மற்ற ஆடைகளுக்கும் வேட்டிக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. பேண்ட், சட்டை, டீ-சர்ட் என எடுத்தால் அதில் நூற்றுக்கணக்கான ரகங்களும் பெயர்களும் உண்டு. ஆனால், வேட்டி என்பது எப்போதும் வேட்டிதான். கூலி வேலை செய்யும் தொழிலாளி கட்டினாலும், அவருக்கு வேலை தரும் முதலாளி கட்டினாலும் அதன் பெயர் மாறுவதில்லை. உடுத்துபவரின் பொருளாதார நிலையைப் பொறுத்து நிறமோ தரமோ மாறலாமே தவிர, அந்த ஆடைக்கான பொதுவான பெயரிலும் மரியாதையிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

இழிவாகப் பார்த்த நிலை மாற்றப்பட்டது

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வேட்டி அணிந்து செல்வது ஏதோ நாகரீகம் அற்றது போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. சில கிளப்கள் மற்றும் மன்றங்களில் வேட்டி அணிந்து வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அநீதியை எதிர்த்து, தமிழ்நாடு அரசு ‘வேட்டி அணிந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கும் மன்றங்களின் உரிமம் பறிக்கப்படும்’ என்று அதிரடியாகச் சட்டம் இயற்றியது. அதன் பின்னரே வேட்டி அணிவது ஒரு பெருமிதத்திற்குரிய விஷயமாக இளைஞர்களிடையே மாறியது.

வேரூன்றி வளர்ப்போம்!

நமது உணவிலும் வாழ்வியலிலும் இயற்கையைத் தேடும் நாம், உடையில் மட்டும் ஏன் செயற்கையான ரெடிமேட் ஆடைகளில் தஞ்சம் புக வேண்டும்? அண்டை மாநிலமான கேரளாவில் இன்றும் கோயில்களில் வேட்டி கட்டாயம் என்ற நிலை இருப்பதைப் போல, நாமும் நம் பாரம்பரிய உடையை விரும்பி அணிய வேண்டும்.

நாம் அணியும் ஒவ்வொரு வேட்டியும், அதை மட்டுமே நம்பி வாழும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். வருடத்திற்கு ஒருமுறை கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களிலும் வேட்டியை கம்பீரமாக உடுத்தி நம் பாரம்பரியத்தைக் காப்போம்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts