மரபியல் விதிகளின் தந்தை கிரிகோர் மெண்டல்: புறக்கணிக்கப்பட்ட மேதை!
விஞ்ஞானி என்பது வெறும் பட்டம் அல்ல; அது ஒரு தீராத தேடல். சலிப்பில்லாமல் தன் வாழ்நாள் முழுவதையும் புதிய விதிகளையும் உண்மைகளையும் கண்டறிய அர்ப்பணிப்பவரே உண்மையான விஞ்ஞானி. அந்த வரிசையில், உலகம் இன்று கொண்டாடும் மரபியல் விதிகளின் தந்தை (Father of Genetics) கிரிகோர் மெண்டல் ( Gregor Mendel)நினைவு நாள் இன்று (ஜனவரி 6).
பிறப்பும் ஆரம்பகால போராட்டமும்
ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் (இன்றைய செக் குடியரசு) 1822-ல் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் மெண்டல் பிறந்தார். அவரது படிப்புக்காகப் பெற்றோரும் சகோதரியும் கடுமையாக உழைத்தனர். மெண்டலும் சளைக்காமல் தோட்ட வேலைகள் செய்து வருமானம் ஈட்டி தன் கல்வியைத் தொடர்ந்தார். 1843-ல் மடாலயத்தில் சேர்ந்து பாதிரியாரான மெண்டல், பின்னர் வியன்னா பல்கலைக்கழகத்தில் கணிதமும் அறிவியலும் பயின்றார்.
பட்டாணிச் செடியும் 8 ஆண்டு தவமும்
இயற்கையை நேசித்த மெண்டல், ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது ஒரு கேள்வியை எழுப்பினார்: “ஒரே குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஏன் ஒரே சாயலில் உள்ளனர்?” இதற்கு விடை காணத் தன் மடத்தின் தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை வளர்த்து ஆராய்ந்தார்.

சுமார் 8 ஆண்டுகள், சலிப்பில்லாமல் 28,000 செடிகளை வளர்த்து, அவற்றின் உயரம், பூக்களின் நிறம், விதைகளின் வீரியம் என ஒவ்வொன்றையும் புள்ளிவிவரங்களாகச் சேகரித்தார். இதன் விளைவாக, பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு எப்படிக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்க ‘மெண்டலின் விதிகள்’ உருவாயின.
புறக்கணிக்கப்பட்ட ஆய்வு: ஒரு விஞ்ஞானியின் சோகம்
1865-ல் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். வீரியம் மிக்க மரபணுக்களே பண்புகளைத் தீர்மானிக்கின்றன என்று அவர் உரக்கச் சொன்னார். ஆனால், 19-ஆம் நூற்றாண்டு அந்த மேதையைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
மெண்டல் தனது ஆய்வு முடிவுகளைத் தனது சமகாலத்தவரான சார்லஸ் டார்வினுக்கு அனுப்பினார். ஆனால், டார்வின் அந்தப் பேப்பரைத் திறந்து கூடப் பார்க்கவில்லை. தான் கண்டுபிடித்த உண்மைகளை உலகம் கண்டுகொள்ளாதது ஒரு விஞ்ஞானிக்கு நேர்ந்த ஆகப்பெரும் கொடுமை. மனமுடைந்த மெண்டல், சாகும் வரை துறவியாகவே வாழ்ந்தார். அவருக்கு இருந்த ஒரே நிம்மதி அவரது பட்டாணிச் செடிகள் மட்டுமே.
மரணத்திற்குப் பின் கிடைத்த அங்கீகாரம்
மெண்டல் 1884, ஜனவரி 6-ல் தனது 62-வது வயதில் மறைந்தார். அவர் மறைந்து 30, 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 20-ஆம் நூற்றாண்டில் மூன்று வெவ்வேறு விஞ்ஞானிகள் மெண்டலின் விதிகள் உண்மை என்று நிரூபித்தார்கள். உலகம் அவருக்கு ‘மரபியலின் தந்தை’ எனப் பட்டம் சூட்டியது. ஆனால், அந்த அங்கீகாரம் அவர் உயிரோடு இருந்தபோது கிடைக்கவில்லையே என்பதுதான் வரலாற்றின் ஆறாத வடு.
இறுதிகாலத்தில் பாதிரியாராக இருந்துகொண்டே தேனீக்களில் கலப்பினம், வானியல் எனப் பல துறைகளில் தடம் பதித்த மெண்டல், இன்றும் உயிர் அறிவியலின் அடிப்படை நாயகனாகத் திகழ்கிறார். விடாமுயற்சியும், நுணுக்கமான ஆய்வும் ஒரு மனிதனை காலங்கள் கடந்தும் வாழவைக்கும் என்பதற்கு மெண்டலின் வாழ்வே சாட்சி.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


