இந்தியாவில் மனிதர்கள் வாழத் தகுந்த நகரம் ஒன்று கூட இல்லை!

இந்தியாவில் மனிதர்கள் வாழத் தகுந்த நகரம் ஒன்று கூட இல்லை!

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்று கூட இடம்பிடிக்கவில்லை. முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் பிடித்துள்ளது.

உலக அளவில் அச்சமின்றி வாழத்தகுந்த 140 நகரங்களை லண்டனைச் சேர்ந்த தி எகனாமிஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தின் துணை அமைப்பான எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு கருத்துக் கணிப்பு மூலம் பட்டியலிட்டுள்ளது. பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா மற்றும் கனடாவின் வேன்கூவர் ஆகிய நகரங்கள் உள்ளன. பாகிஸ்தானின் கராச்சி 134வது இடத்திலும், வங்கதேசத்தின் டாக்கா 137வது இடத்திலும் உள்ளன.

இந்த கணக்கெடுப்பு, உலக அளவில் தீவிரவாதம் மிக வேகமாக வளர்ந்து வருவதைக் காட்டுவதாக கூறுகிறது. மேலும், இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் காரணமாக, அந்நாடுகளில் உள்ள நகரங்கள் அச்சமின்றி வாழ ஏதுவான நகரங்களாக மக்களுக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஈராக், லிபியா, சிரியா மற்றும் துருக்கி உள்ளிட்ட மேலும் பல நாடுகளில் ஆண்டு முழுவதும் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. அதனால் மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழவே முடியாத நாடுகளாக உள்ளது என்று அந்த அமைப்பு கூறுகிறது.

எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட்-ன் கணக்கெடுப்பின்படி, உலகில் அமைதியாக மக்கள் வாழும் இடங்கள், கடந்த 5 ஆண்டுகளில் 0.8 சதவீதம் குறைந்துள்ளதாக கூறுகிறது.

நகரங்களின் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் உலக அளவில் மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் எந்த நகரமும் இடம் பிடிக்கவில்லை. ஆனால் வங்கதேச தலைநகரான டாக்காவும், பாகிஸ்தான் தலைநகரான கராச்சியும் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.