கொடைக்கானலில் இரோம் ஷர்மிளா பதிவுத் திருமணம் நடந்தாச்சு!
மணிப்பூரை சேர்ந்த போராளியான இரோம் சர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக அம்மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தார். அதன் பிறகு தனது போராட்டத்தை கைவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் தோல்வியடையவே பொது வாழ்வில் இருந்து விடுபடப்போவதாக கூறி பல்வேறு ஊர்களுக்கு சென்றார்.அதன் ஒரு பகுதியாக கடந்த 3 மாதமாக கொடைக்கானலில் தங்கியுள்ளார்.

அங்கு லண்டனைச் சேர்ந்த தேஸ்மந்த் கொட்டின்கோ என்பவரை (கொடைக்கானலில் தங்கியிருந்து ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர்) திருமணம் செய்ய முடிவு செய்து கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் இவர்களது திருமணத்தை கொடைக்கானலில் நடத்தக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி, உழவர் உழைப்பாளர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தனி நபர் திருமண சட்டத்தின் கீழ் உரிய விளக்கம் அளிக்க மறுத்ததால் அனைத்து ஆட்சேபனை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து இன்று சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொள்ள வந்தனர். பின்னர் இருவரும் சார்பதிவாளர் முன்பு ஆஜராகி பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அவரது நண்பர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக தன் திருமணத்துக்காக இரோம் சர்மிளா தன் இல்லத்திலிருந்து பதிவாளர் அலுவலகத்துக்கு 1 கி.மீ. தூரம் வரை நடந்தே வந்தார். பின்னர் பதிவு அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இரோம் சர்மிளாவின் காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோ கூறுகையில், ‘குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ளோம். பொதுப் பிரச்னைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்’ என்றார். பின்னர் பேசிய இரோம் சர்மிளா, ‘தமிழகம் அமைதி நிலவும் மாநிலம் என்பதால்தான் இங்கு வந்தேன். ஆனால், இங்கு சிலரால் சிறு பிரச்னைகள் ஏற்படுகிறது. அதைக் களைய வேண்டும். எனக்கு பொதுமக்களும் ஆதிவாசி மக்களும் தொடர் ஆதரவு அளித்துவருகின்றனர்’ என்றார்.


