பாலஸ்தீனத்தை தனிநாடாகப் போவதாக நடக்கும் நாடகம்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரானின் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் அறிக்கைகள் சில நாட்களாக மாஸ் மீடியாக்களிலும், சமுக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் உண்மையில் மெக்ரானின் இந்த அறிவிப்பு சாவதேச சமூகத்தை திசை திருப்பும் முயற்சியின் ஒரு பாகமே. சந்தேகமிருப்பவர்கள் இம்மானுவேல் மெக்ரானின் எக்ஸ் வலைதளத்திற்கு சென்று பார்வையிடவும். மத்திய கிழக்கின் சில பகுதிகளை எண்ணெய் மற்றும் எரிவாயு வள கொள்ளைக்காகவும், ஆப்பிரிக்காவின் பல பகுதிகளை தங்கம் மற்றும் கனிம வள கொள்ளைக்காகவும் தனது காலனிய கொடுக்குப் பிடியில் வைத்திருக்கும் பிரான்ஸின் அதிகார வர்க்கம் பாலஸ்தீன மக்களுக்காக வடிப்பது நீலிக்கண்ணீர் என்பதையும், பாலஸ்தீன விடுதலைக்காக அவர்கள் ஆடுவது கபட நாடகம் என்பதையும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்னெடுப்பவர்களால் தெளிவாக புரிந்து கொள்ள இயலும்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது கூட்டாளிகளான சில ஐரோப்பிய நாடுகளின் திட்டப்படி ஹமாஸை நிராயுபாணியாக்கினால் மட்டுமே பாலஸ்தீனத்திலுள்ள எண்ணெய், எரிவாயு வள சுரண்டல்களை தங்கு தடையின்றி மேற்கொள்ள முடியும். அதனால் தான் ஹமாஸையும், பாலஸ்தீன போராளிக் குழுக்களையும் நிராயுத பாணிகளாக்க வேண்டும் என அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலும் அவர்களது கூட்டாளிகளும் தொடர்ந்து முழங்கி வருகிறார்கள். அச்சு பிசகாமல் அதே முழக்கத்தை தான் இம்மானுவேல் மெக்ரானும் முன்வைத்துள்ளார். ஆனால் வேறு வகையில் கூறியுள்ளார் அவ்வளவு தான்.
உண்மையில் இவர்களுடைய நோக்கம் (அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், ஃபிரான்ஸ்) பாலஸ்தீன போராளிகளை நிராயுதபாணிகளாக்கி பாலஸ்தீன மக்களின் மீதான அடக்கு முறைக்கு எதிரான குரலையும், எண்ணெய், எரிவாயு வள கொள்ளைக்கு எதிரான குரலையும் அடக்குவதே. அதன் பின்னர் துரோகி மம்மூத் அப்பாஸின் பாலஸ்தீன அதிகார சபைக்கு கீழ் காஸாவையும் கொண்டு வந்து தங்களுக்கு எதிரான (மேற்குலக ஆக்ரமிப்பிற்கு எதிரான) எதிர்ப்பு அச்சுக்களை இல்லாமல் ஆக்குவதே.
எதார்த்தத்தில் சர்வதேச பாலஸ்தீன ஆதரவாளர்களை திசை திருப்பும் முக்கிய பணியை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் கையிலெடுத்துள்ளார். ஆகவே இம்மானுவேல் மெக்ரான் போன்ற ஆக்ரமிப்பு கொள்ளைக்கு ஆதரவான துரோகிகளின் அறிக்கைகள் அரசியல் புரிதலற்ற அப்பாவிகளை வேண்டுமானால் ஏமாற்ற பயன்படலாமே தவிர பாலஸ்தீன போராளிகளை ஒரு போதும் இவர்களால் ஏமாற்ற இயலாது.
பாலஸ்தீன மண்ணில் அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் போன்ற ஆக்ரமிப்பு கொள்ளைக்காரர்களின் நோக்கம் ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை. காஸா மண்ணிலிருந்து ஒட்டு மொத்த இஸ்ரேலிய ஆக்ரமிப்புகளை வெளியேற்றும் வரையிலும், ஒட்டு மொத்த நிலத் திருடர்களிடமிருந்தும் நிலங்களை மீட்டெடுக்கும் வரையிலும், ஒட்டு மொத்த மேற்கு கரை பாலஸ்தீனத்தையும் மீட்டெடுக்கும் வரையிலும் பாலஸ்தீன போராளிகளின் போராட்டங்கள் தொடரும்.


