‘தண்டகாரண்யம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாச் செய்திகள்!

‘தண்டகாரண்யம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாச் செய்திகள்!

மூகப் பிரச்சனைகளைத் துணிச்சலுடன் கையாளும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ரித்விகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தண்டகாரண்யம்”. இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினருடன், பல திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

படக்குழுவினர் பகிர்ந்துகொண்டவை

நடிகை ரித்விகா: இயக்குநர் அதியன் ஆதிரையுடன் இது எனக்கு இரண்டாவது படம். இந்த படத்தில் ஒரு புதிய களத்தில், ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வித்தியாசமான இடத்தில் நடைபெற்றது. அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உழைப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், திரை விமர்சகர்கள் படத்திற்கு ஆதரவளித்து, அதை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் கலையரசன்: இயக்குநர் அதியன் ஒரு குழந்தை போன்றவர். தினேஷ், வின்சு மற்றும் மற்ற நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். ரித்விகா எனக்கு அண்ணியாக நடித்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களில் எப்போதும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கும். ‘தண்டகாரண்யம்’ என் திரைப்பட வாழ்க்கையில் ஒரு முக்கியப் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகர் தினேஷ்: இயக்குநர் அதியன் உணர்ச்சிவசப்படக்கூடியவர், அதே சமயம் அவரது படம் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்ற கவனத்துடன் செயல்படுபவர். இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டின் வந்த பிறகு, படம் இன்னும் பிரமாதமாக மாறியுள்ளது. எனது கடந்த மூன்று படங்களில் நான் வாழ்க்கையின் அனுபவங்களைக் கொண்டு நடித்தேன். உதாரணத்திற்கு, ஒரு மனிதன் எப்படி மூச்சுவிடுகிறான் என்பதைக்கூட யோசித்து நடித்தேன். அதனை மக்கள் ரசித்தது மகிழ்ச்சி. ‘ரப்பர் பந்து’ படத்திற்கு மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. காற்று, மலை என அனைத்தும் பொதுவானது என்று அவர் குறிப்பிட்டார்.

இயக்குநர் அதியன் ஆதிரை: மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஏன் தாமதமாக வந்தார், சீக்கிரம் வர வேண்டும் என்று திரௌபதி குரல் எழுப்புவது போன்ற விஷயங்கள் பல ஆண்டுகளாக நாடகங்களிலும், தெருக்கூத்துகளிலும் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால், பாரதியார் எழுதிய ‘பாஞ்சாலி சபதம்’ துச்சாதனன் திரௌபதியின் உடையை உரிக்கும்போது, சுற்றியிருந்தவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று கேள்வி எழுப்பியது. அந்த கேள்வியை கருப்பொருளாகக் கொண்டுதான் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. முதலில் இந்தப் படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கவிருந்தார், ஆனால் திடீர் காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதால், தினேஷ் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தத் திரைப்படம் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பாடகர் அறிவு பாடியுள்ள ஒரு பாடல், கதையின் மையக்கருத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது என்று தெரிவித்தார்.

இயக்குநர் பா. ரஞ்சித்: கடந்த 13 வருடங்களாக என் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சாய் வெங்கடேஸ்வரன் என்னுடைய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர். நாங்கள் இங்கு பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டு வரவில்லை, சமூகத்தை சீர்திருத்த வேண்டும் என்ற முனைப்புடன் வந்திருக்கிறோம். நான் இயக்குநராக வந்தபோது வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே நீடிப்பேன் என்று நினைத்தேன், ஏனென்றால் என் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன். இருப்பினும் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டனர். முன்னெல்லாம் இடதுசாரிகள் அதிக அளவில் இருந்தார்கள், ஆனால் இப்போது சென்சார் போர்டில் வலதுசாரிகள் அதிகமாக இருக்கிறார்கள். நேபாளத்தில் நடந்த கலவரத்திற்கு ராப் இசை கலைஞர்களும் ஒரு வகையில் காரணமாக இருந்தனர். தொடர்ந்து நீலம் புரொடக்ஷனில் இருந்து ‘வேட்டுவம்’, ‘பைசன்’ போன்ற படங்கள் மற்றும் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்று அவர் கூறினார்.

error: Content is protected !!