தலைநகரம் 2 – விமர்சனம்!
2006-ம் வருஷம் டைரக்டர் சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான படம் ‘தலைநகரம்’. சுராஜ் டைரக்ஷனில் உருவான அந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் சுந்தர்.சியுடன் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வடிவேலுவின் ‘நாய் சேகர்’ கெட்டப் மற்றும் காமெடி பெரும் பிரபலமானது. அந்த ‘தலைநகரம்’ படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதையை எழுதியிருக்கும் இயக்குநர் வி.இசட்.துரை மூன்று வில்லன்களை வைத்து, அவர்களுக்கும் சுந்தர்.சி-க்கும் இடையே மோதலை உருவாக்கி அதன் மூலம் மொத்த படத்தையும் கொலை களமாக கையாண்டிருக்கிறார். ”உயிரோடு மண்ணுக்குள்ள இறக்கிடுவேன்”, “குடலை உருவிடுவேன்” என்று படங்களில் வசனம் தான் பேசுவார்கள். ஆனால், இயக்குநர் வி.இசட்.துரை அந்த வசனங்களை காட்சிகளாக வடிவமைத்து மிரட்டியிருப்பதோடு, எப்படி எல்லாம் ஒருவரை கொடூரமாக கொலை செய்யலாம் என்று பாடமே நடத்தியிருக்கிறார்.

கதை என்னவென்றால் கதை, ரவுடி தொழிலை கைவிட்டு விட்டு நண்பர் தம்பி ராமையாயுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுகிறார் ரைட் என்ற நாமகரணம் கொண்ட சுந்தர் சி. இந்நிலையில் நடிகை பாலக் லால்வானியை சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். இந்தப் பிரச்சனையில் தேவையில்லாமல் தம்பி ராமையா சிக்குகிறார். அவரை இந்த சிக்கலிருந்து விடுவிக்க சுந்தர் சி மீண்டும் ரவுடியாக மாறுகிறார். சென்னையை ஆட்டிப்படைக்கும் மூன்று பிரபல ரவுடிகளுக்கும், சுந்தர். சிக்கும் இடையேயான மோதல்களும், இறுதியில் யார் வெல்கிறார்கள்? என்பதும் தான் தலைநகரம் 2 படத்தின் திரைக்கதை.
சுந்தர்.சி, இந்த இரண்டாம் பாகத்தில் அதே ரைட்டாக இருந்தாலும் ரிட்டயர்ட் ரவுடியாக வருகிறார். ஆரம்பத்தில் அமைதியாக இருப்பவர் திடீரென்று விஸ்வரூபம் எடுத்து மீண்டும் ரைட்டாக களத்தில் இறங்கி கொத்து கொத்தாக கொலை செய்கிறார். முதல் பாகம் போல் இதில் சுந்தர்.சி-க்கு காதல் பாடல்களோ அல்லது காமெடி காட்சிகளோ இல்லை. கொடூரமாக கொலை செய்வதும், மிருகத்தனமாக அடிப்பதை மட்டுமே படம் முழுவதும் செய்கிறார்.
இ.கிரிஷ்ணசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சண்டைக்காட்சிகளிலும், கொலை காட்சிகளிலும் கேமராவின் கோணம் மிரட்டுகிறது.ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அமர்க்களமாக இல்லை என்றாலும் அளவாக இருக்கிறது. ஆர்.சுதர்சனின் படத்தொகுப்பு படத்தை நேர்த்தியாகவும், வேகமாகவும் நகர்த்தி செல்கிறது. அதே வேகத்தையும், நேர்த்தியையும் இரண்டாம் பாதியில் மிஸ் பண்ணியது ஏன் என்று தான் தெரியவில்லை.
ஒரு ரவுடி படங்களில் இருப்பதை போலவே இந்த படத்திலும் அடிதடி, சண்டை, வன்முறை, ரத்தம் சொட்டும் காட்சிகள் எல்லாம் இருக்கிறது ஆனால் அவை எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன், தெனாவட்டு நடை கேரக்டரை தாங்கி எதிராளிகளை தார் ஊற்றி உயிருடன் கொளுத்துவது,நெஞ்சில் கத்தியை இறக்குவது இப்படி பல.படத்தில் பல வன்முறை காட்சிகள் நம்மை ஐயோ போதும், போதும் என்று சொல்ல வைக்கிறது.
டைரக்டர் துரை சில காட்சிகளை தான் கவரும் வகையில் கொடுத்திருக்கிறார். படத்தில் கதை என்பதே இல்லாமல் வன்முறையை நியாயப்படுத்தும் சீன்கள் மட்டுமேஇருப்பதுதான் சோகம்
மார்க் 2.5/5


