“தடை அதை உடை” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா: உண்மைச் சம்பவத்தின் உழைப்பு!

“தடை அதை உடை” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா: உண்மைச் சம்பவத்தின் உழைப்பு!

காந்திமதி பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “தடை அதை உடை”. 1990-களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அங்காடித்தெரு மகேஷ் மற்றும் திருக்குறள் குணாபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரை பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

நிகழ்வில் பிரபலங்களின் பேச்சுகள்:

இசையமைப்பாளர் சாய் சுந்தர்:

“இது என்னுடைய முதல் படம், முதல் மேடை. என்னுடைய பாடல்களும் இசையும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பாடிய சின்னப்பொண்ணு அக்கா, காளிதாஸ், சர்வேஷ் அண்ணன் உட்பட அனைவருக்கும் நன்றி. இயக்குநர் அறிவழகன் சார்தான் அனைத்துப் பாடல்களையும் மிக அழகாக எழுதியுள்ளார். இந்த வாய்ப்பு எனக்கு அளித்த அவருக்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.”

நடிகர் குணா பாபு:

“எங்களுடைய டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ஒரு சின்ன டீமாக எல்லோரும் சேர்ந்து உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அருள்தாஸ் அண்ணன் விக்ரம் படத்தில் எனக்கு சீனியராகப் பணியாற்றியவர். அவருடைய நடிப்பு பிரமிக்க வைக்கும். கேடி என்கிற கருப்புதுரை படம் பார்த்துவிட்டுத்தான் பாரி அண்ணன் என்னை அறிவழகன் சாருக்கு அறிமுகப்படுத்தினார். திரைக்கதையைப் படிக்கும்போது அதில் அத்தனை நுணுக்கங்கள் இருந்தன. ‘முயன்றே எழுவோம், விழுந்தே எழுவோம்’ என்றொரு வரி இந்தப் படத்தில் வருகிறது. அது அனைவருக்கும் ஊக்கம் கொடுக்கும் வரிகள். அனைவரும் திரையரங்குக்கு வந்து படம் பாருங்கள்.”

நடிகர் அருள்தாஸ்:

“இந்தப் படக்குழுவில் சிலரை மட்டும்தான் எனக்குத் தெரியும். இயக்குநர் வெளிநாட்டில் வேலை பார்த்து, சொந்தமாகச் சம்பாதித்த பணத்தில் இந்தப் படத்தை அவரது சொந்த ஊரிலேயே எடுத்துள்ளார். வாய்ப்புத் தேடும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். எல்லோருமே திறமையானவர்கள். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இந்தப் படத்தின் முயற்சி வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.”

திருக்குறள் படத்தின் இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன்:

“இந்தப் படத்தின் தலைப்பான ‘தடை அதை உடை’ மிக முக்கியமானது. உலக அளவில் பார்த்தால் எழுத்து, நாடகங்கள், சினிமா என எல்லாவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தப் படம் ஜெயிக்க என் வாழ்த்துக்கள். என் ‘திருக்குறள்’ படத்தில் குணாபாபு குதிரைச் சவாரியில் உயிரைப் பணயம் வைத்து நடித்தார். அவருடைய அர்ப்பணிப்பு பெரியது. புதிய குழுவின் உழைப்பில் உருவான இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகள்.”

இயக்குநர் அறிவழகன் முருகேசன் (தயாரிப்பாளர் & இயக்குநர்):

“இந்த விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. இங்கு எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் படப்பிடிப்பில் எல்லோரும் இரத்தம் வரும் அளவு உழைத்துள்ளனர். ஷூட்டிங்கில் இருந்த என் அப்பா, ‘விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டமாக இருக்கிறதே’ என்றார். எடுப்பதே கஷ்டம் என்றால், 36 மணி நேரம் நடிப்பது எவ்வளவு கஷ்டம்! அவர்களுக்கு என் நன்றிகள். சொந்தப் பணத்தைப் போட்டு எடுத்ததற்காக ஊரார் என்னைத் திட்டினாலும், மக்கள் நல்ல படைப்பை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால், நிச்சயம் ஜெயித்து விடுவோம்.

பாடலாசிரியருக்குச் சம்பளம் தர வேண்டுமே என்று நானே பாடல்கள் எழுதிவிட்டேன். அடுத்த படத்தில் புதிய பாடலாசிரியருக்கு வாய்ப்புத் தருவேன். இந்தப் படம் 1 மணி நேரம் 53 நிமிடங்கள் மட்டுமே. பரபரவெனப் போகும், கண்டிப்பாகப் பிடிக்கும். சினிமாவை வாழ விடுங்கள். சினிமா ஒரு பிசினஸ் அல்ல, அது பல குடும்பங்களின் வாழ்வாதாரம். விமர்சகர்கள் தயவுசெய்து சினிமாவை வாழவிடுங்கள். இந்தப் படம் உங்களை யோசிக்க வைக்கும், உங்கள் வாழ்க்கையை மாற்றும். அனைவரும் திரைக்கு வந்து பாருங்கள், நன்றி.”

Related Posts