இந்தியாவில் அறிமுகமானது – ரோபோ போலீஸ்!

இந்தியாவில் அறிமுகமானது – ரோபோ போலீஸ்!

நாட்டின் பெரும்பாலான காவல் நிலையங்களில்  கட்டப் பஞ்கசாயத்துகள் நடப்பதாகவும், அதனால் தேவையற்ற பல பிரச்னைகள் உருவாவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தபடிதான் உள்ளது. இதையடுத்து நம் தமிழக அரசு உள்துறை இலாகா மூலம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன் ஒரு பகுதியாக அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக புகார் பெற்றுக் கொண்டதற்கான ரசீது வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட புகார் தங்கள் போலீஸ் ஸ்டேஷன் எல்கையின் கீழ் வரவில்லை என்றாலும் புகாரைப் பெற்று சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிற்கு மனுவை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகளும் தங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கூறி வந்ததிலும் பல போலீஸ் ஸ்டேஷன்களில் இது நடைமுறைக்கு வரவே இல்லை. அதே சமயம்  உலகிலேயே முதன்முறையாக இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் காவல் துறையில் டிசம்பர் 28ஆம் தேதி ரோபோ போலீஸ் அறிமுகம் செய்யப்பட்டது. தெலங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் ரோபோ போலீஸ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

நகரின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஆதரவளிக்க இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹைதரா பாத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகிய சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதனால், அவற்றைக் கண்காணித்து புகார்களைப் பதிவு செய்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காக ரோபோ நியமிக்கப்பட்டுள்ளது. 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட ரோபோவில் கேமரா மற்றும் உணர்வு கருவியுடன் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளன. உலகிலேயே துபாய்க்கு அடுத்தபடியாக இந்த சாதனையை தெலங்கானா செய்துள்ளது.

இந்த ரோபோ ஹைதராபாத்தில் உள்ள ‘எச்.பாட்ஸ்’ ரோபோடிக் என்ற நிறுவனம், தாய்லாந்தின் ‘அமிகோ’ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

எல்லா இடங்களுக்கும் நகர்ந்து செல்லும் ரோபோ மக்களிடமிருந்து புகார்களைப் பெற்று பதிவு செய்யும். அவர்களிடம் விசாரணை நடத்தி, கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும். அவசர புகார்களை ரோபோ போலீஸ் மூலம் வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயலிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரோபோவின் செயல்பாடுகளை 16 பேர் கொண்ட குழுவினரால் ஆறு மாதங்கள் கண்காணிக்கப்பட்டன. இது ரோந்து பணிக்கு மட்டுமல்லாமல், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கும் இது உதவும்.

இதுகுறித்து ‘எச்-பாட்ஸ்’ நிறுவன உரிமையாளரும், இதற்கு மூளையாகச் செயல்பட்ட ஆர்யா மற்றும் பி.எஸ்.வி. கிஷான் ஆகியோர் கூறுகையில், “இந்த ரோபோ மனிதர்களுக்குப் பதிலாக உருவாக்கப்படவில்லை. கூடுதல் பணிக்காக உருவாக்கப்பட்டது. போலீஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் முக்கியமான இடங்களிலும் இவற்றைப் பயன்படுத்த முடியும். இத்தகைய ரோபோவை தயாரிக்க ஒன்பது ஆண்டுகள் ஆனது.

இதைத் தயாரிக்க ‘எச்-பாட்ஸ்’ நிறுவனம் ரூ.45 லட்சம் முதலீடு செய்துள்ளது. இவற்றின் விற்பனை விலை ரூ.5 லட்சம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 38 போலீஸ் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் போலீஸ் பணியைத் தொடங்கும்” என்று கூறினார்கள்.

Related Posts