தமிழை ஆங்கில எழுத்துகளால் எழுதவே கூடாது!

தமிழை ஆங்கில எழுத்துகளால் எழுதவே கூடாது!

நீயா நானாவில் கலந்துகொண்டு ஓராண்டுக்குமேல் ஆயிற்று. இடையிடையே அவர்கள் அழைத்துமிருந்தனர். இரண்டோ மூன்றோ வாய்ப்புகளை என்னால் ஏற்க இயலவில்லை. தொடர்ச்சியான கடும்பணிச்சுமையால் தவிர்த்துவிட்டேன். இம்முறை தமிழ்சார்ந்த தலைப்பு என்பதால் ‘எப்படியாவது வந்துவிடுகிறேன்… இத்தலைப்பில் நான் கலந்துகொண்டு பேசியாகவேண்டும்’ என்று ஒப்புக்கொண்டேன்.

தமிழில் பிறமொழிக் கலப்பு என்பது நேரடியாக எப்போதும் நிகழாது. காலத்திற்கேற்ப அது வெவ்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டுதான் வரும். வரலாற்றுக் காலத்தில் அது வேறு வேறு காரணங்களைப் பற்றியது. தற்காலத்தில் அது மொழியறியாமை, மொழியறிவின் இளநிலை, ஆங்கிலத்தின் பொதுப்பரவலாக்கத்திற்குத் துணைபோகும் நம் ஒவ்வொருவரின் மொழி விழிப்புணர்வின்மை, கருவிப் பயன்பாட்டு எளிமை, பெருநிறுவனப் பன்மொழிச் சூழல், பிறமொழிவழிக் கல்வி போன்றவை வழியாக நுழையப் பார்க்கிறது.

மொழிக்கு இரண்டு வடிவங்கள் உள்ளன. ஒன்று ஒலிவழிப்பட்டது. பேச்சு மொழி. ஒலிதான் முதன்மையாக மொழி. அதன் நோக்கம் மக்கள் தங்களோடு பேசிக்கொள்வதுதான். பேச்சுக்காகத் தோன்றியதுதான் மொழி. அதனால்தான் மொழி உயிர்ப்போடு வாழுமிடம் மக்களின் நாக்கு என்பேன். மொழியின் இன்னொரு வடிவம் எழுத்து. எழுத்து என்பது அம்மொழியின் அனைத்துச் செயல்பாடுகளின் பதிவு வடிவம். குறிப்பு வடிவம். அதுவும் இன்றைக்குப் பயன்பாட்டு வடிவமானதுதான் படிநிலைவளர்ச்சி.

உலகிலுள்ள ஆறாயிரம் மொழிகளில் பேச்சு வடிவத்தோடு நின்றுவிட்ட மொழிகளே பெரும்பான்மை. பப்புவா நியூகினியாக் (பப்புவா புதுக்கினியா என்றாவது சொல்லவேண்டும்.) காட்டுப் பகுதியில் பல்வேறு இனக்குழுக்களால் பயன்படுத்தப்படும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மொழிகட்கு எழுத்து வடிவம் இல்லை. ஆங்கிலத்தார் அப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு அம்மொழிகட்கு ஆங்கில எழுத்துகளையே கொடுத்து ஓரளவுக்கு எழுத்து வடிவாக்கியுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் தொன்மொழிகள் பலவற்றுக்கும் எழுத்து வடிவம் இல்லை. ஆள்வதற்கு வந்த ஐரோப்பியர்கள் தத்தம் மொழிகளின் எழுத்து வடிவத்தைத் திணித்துள்ளனர். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் மொழியெழுத்துகள் யாவும் ஆங்கிலமாகத் திகழ்வதை அங்கே சென்றவர்கள் பார்த்திருப்பர்.உலகில் ஒலிவழிப்பட்ட பேச்சு வடிவமும், பதிவுவழிப்பட்ட எழுத்து வடிவமும் இணையாகவே வளர்ந்து செம்மையுற்ற மொழிகளே தலைசிறந்த மொழிகளாகும். அவையே முதன்மைச் செம்மொழிகளுமாம்.

தமிழ் தன் மக்கட்பயன்பாட்டு வழக்காலும், அதனினும் பேரளவு எழுத்து வழக்காலும் தன்னிகரற்று வளர்ந்து நிற்கும் செம்மாந்த மொழி. இதன் எழுத்து வடிவத்தில் பொதிந்திருப்பவையே இம்மொழியின் அனைத்துச் செல்வங்களுமாகும். தமிழின் எழுத்துக்குப் பேச்சு வன்மையைவிடவும் மிகவுயர்ந்த ஆற்றலும் உணர்ச்சிப் பெருக்காக்கும் வலிமையும் உண்டு. தொல்பொருள்களில் கீறல்களாக, கல்வெட்டுகளாக, செப்பேடுகளாக, ஓலைச்சுவடிகளாக, அச்சுப் பதிப்புகளாக… எங்கெங்கும் கடல்போல் பரந்திருக்கும் தமிழின் செல்வங்கள் யாவும் அதன் எழுத்து வடிவங்களே. மொழி மக்களாகிய நாமே அவ்வெழுத்துகளைத் தாங்கிச் செல்லவேண்டும்.

அத்தகைய எழுத்து வடிவத்தைப் புறந்தள்ளி தமிழ்ச்சொற்களை ஆங்கில எழுத்துகளால் எழுதுவது நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது. அத்தகு செயலுக்கு ஒருபோதும் துணைபோகக்கூடாது. எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அரிதினும் அரிதாகவோ, தற்செயலாகவோ ஒன்றை எழுதுவது வேறு. ஆனால், எப்போதும் அவ்வடிவத்திலேயே தமிழை எழுதுவது கடுமையான குற்றம். தமிழ் மொழி எழுத்துகளைப் புறந்தள்ளி ஆங்கில எழுத்து வழியிலேயே பலவற்றையும் செய்வதால் நேர்ந்துள்ள கேடுகளை யாவரும் அறிவோம்.

நாளிதழ்களில் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட தமிழ்ச்சொற்கள் கொண்ட விளம்பரங்களை வெளியிடக்கூடாது. காசு கண்டு கமுக்கமாக இராமல், நாளிதழ்களே அவற்றுக்குக் கடுமை காட்டவேண்டும். அரசுச் செயல்பாடுகளில் இத்தகு கலப்புகள் யாவும் தவிர்க்கப்படவேண்டும். ‘Namma Chennai’ என்று அரசே சொல்லக்கூடாது. ஒரு காணொளியில் ஒரு பாடல்வரியை எழுத்தில் காட்ட வேண்டியிருப்பின் தமிழ் எழுத்துகளால்தான் காட்டவேண்டும். ஆங்கில எழுத்துகளால் எழுதிக் காட்டக்கூடாது. திரைத்துறையினர் செய்கின்ற பெருங்குற்றம் இது. ஊர்ப்பெயர்கள், வழிகாட்டி அறிவிப்புகள் என எங்கெங்கும் தமிழ் எழுத்துகளே நிறைந்திருக்கவேண்டும். இரண்டாமிடத்தில்தான் ஆங்கிலம் இருக்கவேண்டும். நடைமுறையில் ஆங்கிலம் முதலிடத்திலும், தமிழ் இரண்டாமிடத்திலும் இருக்கிறது. இந்த வரிசை முறையிலேயே பெரிதான அரசியல் இருக்கிறது. ஒரு காலத்தில் ஒரு கருவி வாங்கினால் அதன் பயன்பாட்டுக் குறிப்பேட்டில் (User Manual) தமிழும் இருக்கும். இப்போது இருக்கிறதா சொல்லுங்கள். ஆங்கிலத்தோடு அதன் குறிப்பேடு முடித்துக்கொள்கிறது. அதன் பயன்பாட்டுக் குறிப்புகளை இணையத்தில் சென்று பெற்றாலும் தமிழில்லை. இன்னும் இன்னும்… சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழை ஆங்கில எழுத்துகளால் எழுதவே கூடாது. உரிய தொடக்கத்தை நம்மிடமிருந்தே தொடங்குவோம்.

– கவிஞர் மகுடேசுவரன்

CLOSE
CLOSE
error: Content is protected !!