முரசு அஞ்சல் சென்னையில் வெளியீடு: முன்பதிவு பண்ணியாச்சா?

முரசு அஞ்சல்  சென்னையில் வெளியீடு: முன்பதிவு பண்ணியாச்சா?

முரசு அஞ்சல் அறிமுகமாகி நாற்பதாண்டுகள் ஆகின்றன. தொடர்ந்து முரசு அஞ்சல் உடன் பயணம் செய்வோருக்கு இது புதுச்செய்தியல்ல. 1985ஆம் ஆண்டு முரசு அஞ்சல் அறிமுகமான எம்எஸ் டாஸ் காலம் முதலே இதைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிந்துரைத்ததும் முரசு அஞ்சல் வெற்றியின் காரணங்களில் ஒன்று.

அச்சுத் துறையில் மறுலர்ச்சியை உண்டாக்கித் தொடர்ந்து விண்டோஸ் தனிக்கணினிகள், திறன்பேசிகள் என ஒவ்வொரு தொழில்நுட்ப மாற்றத்தின் போதும் முரசு அஞ்சல் தன்னை மேம்படுத்தி வந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் இருந்த தமிழ் உள்ளீட்டு முறையின் தேவையை நிறைவு செய்து அழகான தமிழ் எழுத்துருக்களை பயனர்களின் கரங்களுக்கு கொண்டு சேர்த்தது. காலம் பல ஆனாலும் கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் தன்னை புதுப்பிக்க முரசு அஞ்சல் ஒரு போதும் தவறியதில்லை. யூனிக்கோடு நடைமுறைக்கு வந்தபோது அதற்கான மேம்பாடுகளை உடனே வழங்கியது முரசு அஞ்சல். விண்டோஸ் 2000த்தில்தான் யூனிகோடு முதன்முதலில் அறிமுகம் கண்டது. அதற்கு முன்னதாகவே முரசு அஞ்சல் எழுத்துருக்கள் யூனிகோடுக்கு மாற்றம் கண்டன.

இப்படி எல்லா விதத்திலும் முன்னோடியாக இருக்கும் முரசு அஞ்சல், திறன்பேசி உலகத்திலும் முன்னோடியாகத்தான் இருந்திருக்கிறது. கைப்பேசிகளில் தமிழைத் தட்டெழுத உதவிய செல்லினம், திறன்பேசிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது வசதிகளைச் சேர்த்துக்கொண்டே வந்தது. செல்லினத்தின் அடிப்படையும் முரசு அஞ்சலே. இந்த ஒளிமயமான வரலாற்றைப் பார்க்கும்போது, பயனர்களுக்கு புதுவித தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறது முரசு அஞ்சல் என்பதை நாம் அறிய இயலும்.

 

இத்தகைய முரசு அஞ்சல் இவ்வாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட உள்ளது. இது வெறும் மேம்பாடு அல்ல, முழுமையான மறு உருவாக்கம் என்றே கூறிவிடலாம். நீங்கள் ஆசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர், மாணவர், காணொளி கலைஞர், கணித்தமிழைப் பயன்படுத்தும் தமிழ் ஆர்வலர் என யாராக இருந்தாலும் இந்த வெளியீடு உங்களுக்காகத்தான்.

ஆம்.. இன்னும் இரண்டு நாடுகளில் வெளியீடு காணவுள்ளது முரசு அஞ்சல். பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த முரசு அஞ்சல் புதிய பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான இணைய முன்பதிவு தொடங்கியிருக்கிறது.

1985 காலக்கட்டத்தில் தமிழைக் கணினியில் ஏற்றி அச்சிடுவதென்பது எளிதான ஒன்றல்ல. இணையத்தளங்களிலும் அந்தச் சவால் தொடர்ந்தது. அந்த சிக்கல்கள் அனைத்தையும் களைந்து, எங்கும் தமிழின் பயன்பாட்டைக் கொண்டுவரும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது முரசு அஞ்சல். அந்த நோக்கத்தை அடைந்து, இந்த நாற்பது ஆண்டுக்கால பயணத்தில், பிற வடிவங்களில் பரிணமித்து வெற்றிநடை போட்டுவருகிறது. அதற்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் முரசு அஞ்சலில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களே முக்கியமான காரணம்.

முரசு அஞ்சல் விசைமுகம் ஏற்கெனவே இயல்புநிலை விசைமுகமாக மெக், விண்டோஸ் போன்ற இயங்குதளங்களில் இருக்கிறது. ஐபோன், ஆண்டிராய்டு கருவிகள் அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றவாறு வேறு என்ன புதிய கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன என்கிற எதிர்பார்ப்பு பயனர் மத்தியில் இருக்கிறது.

முரசு அஞ்சல் மறு உருவாக்கம் காணப்போவதாக சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். அது இப்போது இணைய முன்பதிவு என்ற அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறது. ஆம், முரசு அஞ்சல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கான இணைய முன்பதிவு தொடங்கியிருக்கிறது. நீண்டகால முரசு அஞ்சல் பயனர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சலில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது.

முரசு அஞ்சல் பயனர்களுக்கு வந்த மின்னஞ்சல் அழைப்பின் மூலம் எழுத்தாளர்கள், மொழியியல் வல்லுநர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அதிகாரிகள், தமிழ் ஆர்வலர்கள் எனப்பல தரப்பினரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்துவருகின்றனர். முன்பதிவு தொடங்கிய வேகத்தில் ஏறக்குறைய பாதி இடங்கள் நிறைந்துவிட்டன. மலேசியா ஐம்பது விழுக்காட்டினைத் தாண்டியுள்ள நிலையில் சிங்கப்பூரும் சென்னையும் நாற்பது விழுக்காடு முன்பதிவைக் கடந்துள்ளன. முன்பதிவு செய்யும் வாய்ப்பு தற்போது அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. நீங்களும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலாக இருந்தால், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி உடனே முன்பதிவு செய்யுங்கள்.

இந்த வெளியீட்டு நிகழ்ச்சியானது மூன்று நாடுகளில் மூன்று வெவ்வேறு நாள்களில் நடைபெறவிருக்கிறது. முதல் வெளியீடு ஜூன் 27 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது.அந்த விழாவின் பிரதான மற்றொரு அங்கமாக, தமிழ் நாட்டின் பிரபல எழுத்தாளர் கோகிலா எழுதிய முத்து நெடுமாறனின் வாழ்க்கை சம்பவங்களையும் கணினி உலகில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் விவரித்து ‘மெட்ராஸ் பேப்பர்’ என்ற இணைய ஊடகத்தில் எழுதிய கட்டுரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘உரு’ என்ற நூலும் வெளியீடு கண்டுள்ளது.மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருளை நிகழ்ச்சிக்கு வருகை தந்த 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் முரசு அஞ்சலின் பயனர்களை வைத்தே வெளியீடு செய்துள்ளது பாராட்டத்தக்க ஒன்றாகும்.

அடுத்த நிகழ்ச்சி சிங்கப்பூரில் ஜூலை 5 அன்று நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நிகழ்ச்சியானது சென்னையில் ஜூலை 12ஆம் தேதியில் நடைபெறுகிறது. தமிழ் மென்பொருள் ஒன்று, இத்தகைய மாபெரும் வெளியீடு காண்பது பெருமைக்குரிய செய்தி.

இந்நிகழ்ச்சிகளில் முரசு அஞ்சலின் புதிய பதிப்பு வெளியிடப்படவுள்ளது. அறிவார்ந்த உள்ளீட்டு முறைகளும் அழகுத் தமிழ் எழுத்துருக்களும் இப்பதிப்பில் உள்ளன. அது மட்டுமல்லாமல் செல்லினம், முரசு அஞ்சலின் வடிவமைப்பாளரான முத்து நெடுமாறனின் நாற்பதாண்டுக்கால பயணத்தை விவரிக்கும் உரு என்கிற நூலும் வெளியிடப்படவுள்ளது. மூன்று பகுதிகளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் தேநீர், சிற்றுண்டியுடன் நிறைவு பெறும். அந்தந்த நாட்டு நேரப்படி மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற உள்ளன.

நிகழ்ச்சியில் பங்கேற்போர் அனைவருக்கும் விதவிதமான பரிசுகள் காத்திருக்கின்றன. இக்கொண்டாட்டத்தில் பங்குகொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

பதிவு செய்யும் இணைப்பு

  • மு. இசக்கிமுத்து