ஐ பி எல் பாணியிலான ‘தமிழ்நாடு பிரிமீயர் லீக்’ இன்று தொடக்கம்!.

ஐ பி எல் பாணியிலான ‘தமிழ்நாடு பிரிமீயர் லீக்’ இன்று தொடக்கம்!.

ஐ பி எல் பாணியில் தமிழக அளவில் கிரிக்கெட்டில் இன்று முதல் ‘தமிழ்நாடு பிரிமீயர் லீக்’ தொடங்குகிறது. அடிமட்டத்தில் உள்ள திறமையான வீரர்களையும் அடையாளம் கண்டு வெளி உலகுக்கு கொண்டு வருவதே இந்த போட்டியின் அடிப்படை நோக்கமாகும். அந்த வகையில் இளம் வீரர்களுக்கு இந்த பிரிமீயர் லீக் ஒரு வரப் பிரசாதம் என்றால் மிகையாகாது. முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கம், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி (திண்டுக்கல்), நெல்லை ஐ.சி.எல். மைதானம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகின்றன.

tpl aug 24

மொத்தம் 31 ஆட்டங்கள் இடம் பெறுகின்றன. மாலை 6.50 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்.டி, விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. அனைவரும் வாங்கும் வகையில் டிக்கெட்டுகள் ரூ.50, ரூ.100 விலைகளில் விற்கப்படுகிறது.தொடக்க ஆட்டத்திற்கு முன்பாக மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை சினிமா நட்சத்திரங்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நடிகர்கள் தனுஷ், மாதவன், நடிகைகள் எமி ஜாக்சன், ஆன்ட்ரீயா, தன்ஷிகா, பாடகர் கார்த்தி, இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ஆடல், பாடல் மூலம் ரசிகர்களை குதூகலப்படுத்த இருக்கிறார்கள்.

இதில் தமிழகம் முழுவதும் 8 நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், காஞ்சி வாரியர்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

கிட்டதட்ட ஐ.பி.எல். பாணியிலேயே இந்த தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் குறிப்பிட்ட தொகைக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள். வளரும் நட்சத்திரங்களுடன் ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்), பத்ரிநாத் (காரைக்குடி), முரளிவிஜய் (கோவை), தினேஷ் கார்த்திக், எல்.பாலாஜி (தூத்துக்குடி) உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும், ஆர்.சதீஷ், தலைவன் சற்குணம், யோ மகேஷ் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) போன்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய அனுபவம் வாய்ந்த வீரர்களும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் அங்கம் வகிக்கிறார்கள்.

இன்றைய தொடக்க லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், தூத்துக்குடி பேட்ரியாட்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சந்திக்கின்றன