இனி வரும் 4 நாட்களில் யார் அல்லது எவை செயல்படும்? சென்னை கார்ப்பரேசன் விளக்கம்!

இனி வரும் 4 நாட்களில் யார் அல்லது எவை செயல்படும்? சென்னை கார்ப்பரேசன் விளக்கம்!

“தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவின்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் உத்தரவுகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலின் தற்போதைய நிலை குறித்து தமிழ்நாடு முதல்வரால் 24.4.2020 அன்று ஆய்வு செய்யப்பட்டது. கிராமப் புறங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், நகர்ப்புறங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்தத் நோய்த் தொற்றுத் தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்றுப் பரவ வாய்ப்பு உள்ளதால், இது குறித்து மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப் பட்டதில், நகர்ப்புறங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே, இந்த நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளையும், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 26.04.2020 ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி முதல் 29.04.2020 புதன்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க் கண்ட நடைமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

1.மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் செயல்படும்.

2. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

3. இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவைப்படும் 33 சதவீதப் பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

4. அம்மா உணவகங்கள், ஏடிஎம் இயந்திரங்கள் வழக்கம் போல் செயல்படும்.

5. பொது விநியோகக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகள், எஃப்.சி.ஐ. கிடங்குகள் மற்றும் அவற்றின் சரக்குப் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.

5. பெட்ரோல், டீசல் பங்க்குகள் காலை 8 முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.

6. பால் விநியோகம், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மற்றும் குடிநீர் வழங்கல் வழக்கம் போல் செயல்படும்.

7. உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

8. முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவிபுரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

9. ஆதரவற்றோருக்காக மாவட்ட நிர்வாகங்கள், சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

10. ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

11.·கோயம்பேடு போன்ற மொத்த காய்கறிச் சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். அதேபோல், காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும். மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி இல்லை. மேற்கண்ட நாட்களில் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

12. இறப்பு மற்றும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சைகளுக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ள இணையதளத்தின் வழியே மட்டுமே விண்ணப்பித்து அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதர காரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

13. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழக்கம்போல் செயல்படலாம்.

மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட இதர அரசு அலுவலகங்கள் செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.

இக்காலகட்டத்தில் நோய்த் தடுப்புப் பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படும். மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் என்பதால், இதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும்

error: Content is protected !!