June 4, 2023

தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தன் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், இந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மணிகண்டன் இதுவரை வகித்து வந்த தகவல் தொழில் நுட்பத்துறை , வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆர். பி. உதயகுமார் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் சசிகலாவின் ஆதரவாளராக இருந்த மணிகண்டன், அதிமுக உடைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறினார். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சராக மணிகண்டன் இருந்தார். இந்நிலையில் திருவாடணை தொகுதியில் மணிகண்டன் – கருணாஸ் இருவருக்கும் இடையே தகராறு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

அத்துடன் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுடன் அமைச்சர் மணிகண்டன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.குறிப்பாக கேபிள் டிவி கார்ப்பரேசன் தலைவராக உள்ள உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு 2லட்சம் கேபிள் டிவி இணைப்புகள் உள்ளதாகவும். அதை ஏன் அரசு கேபிளில் இணைக்க வேண்டும்? என்றும் ஊரெல்லாம் கேபிளை இணைக்க கூறும் அவர் இதை செய்து முன்னுதாரணம் ஆகலாமே என்றும் மணிகண்டன் பேசினார். இத்துடன் முதல்வர் கேபிள் கட்டணத்தை குறைப்பது பற்றி அந்ததுறையின் அமைச்சரான தன்னுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் அமைச்சர் மணிகண்டனின் பேட்டிகளை பார்த்த முதல்வர் பழனிச்சாமி நேற்று இரவு அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை அதிரடியாக நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.