தமிழ் குரல் / AI Voice
இயற்கையின் கோரத் தாண்டவங்களில் மிகவும் ஆபத்தானதும், கண் இமைக்கும் நேரத்தில் ஊர்களைக் கடலுக்குள் இழுத்துச் செல்வதுமான ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி குறித்த விழிப்புணர்வை உலகெங்கும் ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 5 ஆம் நாள் உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான இந்த நாளின் அதிகாரப்பூர்வ கருப்பொருளாக சுனாமிக்குத் தயாராகுங்கள்: மீள்தன்மை உங்களிடமிருந்து தொடங்குகிறது – Be Tsunami Ready: Resilience Starts With You என்ற வாசகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தனி மனித விழிப்புணர்வு மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சியே பேரிடர் காலத்தில் உயிரைக் காக்கும் முதற்கவசம் என்பதை இந்தக் கருப்பொருள் ஆழமாக வலியுறுத்துகிறது.
சுனாமி தோன்றுவதற்கான அறிவியல் காரணங்கள்
பூமிக்கு அடியில் உள்ள டெக்டோனிக் தட்டுகள் எனப்படும் பாறைப் பாளங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும்போதோ அல்லது நழுவும்போதோ ஏற்படும் நிலநடுக்கங்களால் சுனாமி உருவாகிறது. குறிப்பாக, கடலுக்கடியில் ஏற்படும் பாரிய நிலநடுக்கங்கள், கடல் அடியில் நிகழும் எரிமலை வெடிப்புகள் மற்றும் பிரம்மாண்டமான நிலச்சரிவுகள் ஆகியவை கடலின் அடியில் திடீர் நீர் இடப்பெயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த இடப்பெயர்ச்சி ராட்சத அலைகளைத் தோற்றுவித்து, கரையோரப் பகுதிகளை நோக்கி அதிவேகத்தில் நகர்கிறது. திறந்த கடலில் இந்த அலைகளின் உயரம் குறைவாக இருந்தாலும், கரை நெருங்க நெருங்க நீரின் ஆழம் குறைவதால் அலைகளின் உயரம் பன்மடங்கு அதிகரித்து ஊருக்குள் பாய்ந்து பேரழிவை ஏற்படுத்துகிறது.

வரலாற்றுச் சுவடுகளும் பாடம் கற்றலும்
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி மற்றும் 2011 ஆம் ஆண்டு ஜப்பானின் தோஹுக்கு பகுதியில் ஏற்பட்ட சுனாமி ஆகியவை மனிதகு வரலாற்றில் அழிக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திய பேரழிவுகள் ஆகும். குறிப்பாக 2004 டிசம்பர் 26 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமி, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளின் கடற்கரைகளைத் தாக்கி லட்சக்கணக்கான மனித உயிர்களைக் பறித்ததுடன், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளையும் நாசமாக்கியது. இந்தத் துயரச் சம்பவங்களே உலக நாடுகளை சுனாமி எச்சரிக்கை மையங்களை உருவாக்கவும், பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை தீவிரப்படுத்தவும் உந்தித்தள்ளின.
சுனாமியின் முன் எச்சரிக்கை அறிகுறிகள்
இயற்கை மனிதனுக்கு எப்போதுமே சில எச்சரிக்கை சைகைகளைக் கொடுத்தே விடுகிறது. அந்த வகையில் சுனாமி தாக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இயற்கையில் சில அரிய மாற்றங்கள் நிகழும். திடீரென கடல் நீர் உள்வாங்கி, வழக்கமான அளவை விட பல நூறு அடிகள் பின்னோக்கிச் சென்று கடலின் தரைப்பகுதி வெளியே தெரியும். அப்போது கடலுக்குள்ளிருந்து வழக்கத்திற்கு மாறான முழக்கமோ அல்லது ஹெலிகாப்டர் பறப்பது போன்ற பயங்கர சத்தமோ கேட்கலாம். மேலும், கடற்கரைப் பகுதிகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு, அது பல விநாடிகளுக்கு நீடித்தால், அது சுனாமி வருவதற்கான மிக முக்கிய அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மக்கள் எவ்விதத் தாமதமும் இன்றி உயர்ந்த இடங்களுக்குத் தப்பியோட வேண்டும்.
மீள்தன்மை உங்களிடமிருந்து தொடங்குகிறது – தற்காப்பு நடவடிக்கைகள்
இந்த ஆண்டின் கருப்பொருள் சுட்டுவது போல, பேரிடரை எதிர்கொள்ளும் மீள்தன்மை ஒவ்வொரு குடிமகனின் கைகளில் தான் உள்ளது. அரசாங்கத்தின் எச்சரிக்கை அமைப்புகள் ஒருபுறம் இருந்தாலும், தனிமனித விழிப்புணர்வே முதல் பாதுகாப்பாகும். கடற்கரைப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான உயரமான இடங்கள் மற்றும் வெளியேறும் வழிகள் குறித்த விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும். அவசர கால உணவு, குடிநீர், முதலுதவி பெட்டி மற்றும் முக்கியமான ஆவணங்கள் அடங்கிய சிறிய பையை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் சுனாமி காலங்களில் எவ்வாறு தப்புவது என்பது குறித்த மாதிரி பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
நம் கடமை
இயற்கையின் பேரழிவுகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்பது உண்மையே, ஆனால் உரிய விழிப்புணர்வும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தால் உயிரிழப்புகளை நம்மால் முழுமையாகத் தவிர்க்க முடியும். சுனாமி விழிப்புணர்வு தினமான இன்று, இயற்கை சக்திகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் வாழ்வோம் என்றும், நம் சமூகத்தை மீள்தன்மை கொண்ட பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு உறுதியேற்போம் என்றும் சபதம் ஏற்போம். பேரிடரை எதிர்கொள்ளத் தயாராவோம், உயிரைக் காப்போம்.
நிலவளம் ரெங்கராஜன்
