தமிழ் குரல் / AI Voice
சர்வதேச அளவில் பெரியண்ணாவாக கருதப்படும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் போக்கை மாற்றி அமைக்கும் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 மக்களவை இடங்கள், 100 செனட் இடங்களில் 35 இடங்கள் மற்றும் 36 மாகாணங்களுக்கான ஆளுநர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில், வாக்குப்பதிவு முடிவடைந்த கையோடு வாக்கு எண்ணிக்கையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று நவம்பர் 4 அதிகாலை முதலே வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கிய நிலையில், ஆரம்ப கட்டத்தில் இருந்தே ஜனநாயகக் கட்சி தனிப்பெரும் ஆதிக்கத்தைச் செலுத்திப் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அவைகளைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி: எண்கள் சொல்லும் உண்மை
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு மக்களால் பேரடி கொடுக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபை எனப்படும் மக்களவையின் 435 இடங்களில், ஜனநாயகக் கட்சி 224 இடங்களைக் கைப்பற்றி அபார பெரும்பான்மை பெற்றுள்ளது. மாறாக, குடியரசுக் கட்சியால் 133 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
இதேபோல, நாடாளுமன்றத்தின் மேல் அவையான செனட் சபையிலும் ஜனநாயகக் கட்சி 53 இடங்களைக் கைப்பற்றி அதிக்கம் செலுத்துகிறது. அதிபர் ட்ரம்பின் கட்சி வசம் தற்போது 42 இடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. மேலும், 36 மாகாண ஆளுநர் தேர்தல்களில் 25 மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், குடியரசுக் கட்சி 19 இடங்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடிந்தது.

வாக்கு வங்கியைப் பாதித்த ஈரான் போரும் கடுமையான பணவீக்கமும்
இந்தத் தேர்தலில் நேரடியாக அதிபர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், நாட்டின் அடுத்தகட்ட சட்ட வரைவுகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்பதால் இத்தேர்தல் முடிவுகள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு, அவர் அமல்படுத்திய தீவிர வரி விதிப்புக் கொள்கைகள் (Tariffs) மற்றும் ஈரானுக்கு எதிராகத் தொடுத்த போர் ஆகியவை அமெரிக்கப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்தன. இதனால் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த பொருளாதார நெருக்கடியும் அதிருப்தியுமே வாக்காளர்களின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணம் என்று பொருளாதார மற்றும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
வாஷிங்டன் அதிகார மையத்தில் ஏற்படும் மாற்றங்கள்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி முழுமையாகக் கைப்பற்றியுள்ளதால், வாஷிங்டனின் அதிகார மையம் தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இனி அதிபர் ட்ரம்ப் தனது தன்னிச்சையான முடிவுகளையோ, புதிய திட்டங்களையோ, வரவு செலவுத் திட்டங்களையோ நேரடியாக நிறைவேற்ற முடியாது. அரசின் செலவினங்கள், முக்கிய நிர்வாக முடிவுகள் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளின் நியமனங்கள் ஆகிய அனைத்தையும் ஜனநாயகக் கட்சியினரால் தீவிரமாகக் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் எதிர்க்கவும் முடியும்.
பெரு நிறுவனங்கள் மற்றும் சிலிக்கான் வேலி மீது பாயும் விசாரணை வளையம்
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் வரித் தளர்வுகள், கட்டுப்பாடற்ற வர்த்தகச் சூழல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகளை அனுபவித்து வந்த தனியார் ஈக்விட்டி (Private Equity) நிறுவனங்களும் பெரு வங்கிகளும் இத்தேர்தல் முடிவால் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் பண பலம் மற்றும் வரி ஏய்ப்பு முறைகேடுகள் குறித்து ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் தீவிர விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல, செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்கு அளிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான சலுகைகள், ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட பெருமளவிலான வேலையிழப்புகள், காளான்கள் போல பெருகிவரும் தரவு மையங்களால் (Data Centers) ஏற்படும் மின்தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கணைகள் தொடுக்கப்படவுள்ளன.
குறிப்பாக, அதிபர் ட்ரம்புடன் நெருக்கம் காட்டிப் பல சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் மெட்டா, கூகுள், ஓபன் ஏஐ, அமேசான், ஆப்பிள், டெஸ்லா மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற சிலிக்கான் வேலியின் முன்னணித் தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரும் இனி நாடாளுமன்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
‘அதிகாரம் என்னிடமே!’ – ட்ரம்பின் பிடிவாதமும் வீட்டோ அதிகாரமும்
தேர்தலில் தொடர் பின்னடைவைச் சந்தித்த போதிலும், நாட்டின் உச்சகட்ட அதிகாரம் எப்போதும் தனக்கேய உரியது என்பதில் அதிபர் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார். இத்தேர்தல் முடிவுகள் குறித்துப் பதிவிட்டுள்ள அவர், நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், ஒருவேளை தான் களத்தில் இருந்திருந்தால் குடியரசுக் கட்சி இமாலய வெற்றியப் பெற்றிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் முடிவுகளுக்கு ஈரான் போரும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டதுடன், ஈரான் விவகாரத்தில் தான் எடுத்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் நாடாளுமன்றத்தின் முடிவுகளைத் தடுப்பதற்கு அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள ‘வீட்டோ’ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி, வரவிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிருத்விராஜ்
