June 2, 2023

பீகார் ஆக மாறும் தமிழ்நாடு

பீகார் மாநிலத்தின் பாகல்பூர்.. 1979 -1980 -விஷ்ணு தயாள் ராம் என்ற காவல்துறை கண்காணிப்பாளரின் பணிக்காலத்தில் பாகல்பூர் பகுதியில் குற்றங்களை குறைப்பதற்கு ஒரு குரூரமான முறை அமல்படுத்தப்பட்டது. அது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஊசி போடும் சிரிஞ்ச் வழியாக அமிலத்தை ஊற்றி அவர்களுடைய கண் பார்வையை நிரந்தரமாக பறிப்பது. அதன் மூலம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் பாவத்தை போக்குவது. அவ்வாறு சுமார் 33 நபர்களின் கண் பார்வை நிரந்தரமாக பறிக்கப்பட்டதாக அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உண்மை நிலவரம் கூடுதலாக இருந்திருக்கலாம். இந்த செய்தி அன்றைய நிலையில் நாட்டை உலுக்கியது. சர்வதேச ஊடகங்களில் இந்த வன்கொடுமை பேசப்பட்டது. நாடாளுமன்றத்தில் அனல் பறந்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தை அடைந்தபோது, நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்தனர். காவல்துறைக்கும், விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. காவல்துறை வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய முதல் வழக்கு இதுவாக இருக்கலாம். இச்சம்பவத்தில் சுமார் 10 காவல்துறையினர் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. ஆனால் ஒரேஒரு அடிப்படைக் காவலருக்கு (Constable) மட்டும் தண்டனை வழங்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு காவல்துறை இதற்கு ஏறக்குறைய இணையான ஒரு செயல்பாட்டில் இறங்கியுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களுடைய கை, கால்களை உடைத்து ஊனமாக்கும் செயலே அது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கழிவறையில் வழுக்கி விழுந்து கையோ, காலோ முறிந்துவிட்டதாக பதிவு செய்யப்படுகிறது. இங்கும் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் இதைக் கண்டும் காணாமலும் செல்கின்றனர். இப்போது இந்நிலை மேலும் சற்று முன்னேறி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வரும் நபர்களின் பல்லை உடைக்கும் அளவுக்கு மாறியுள்ளது. ஊடகங்களின் அழுத்தத்தை தொடர்ந்து கண்துடைப்பு நடவடிக்கைகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மட்டும் இந்த அவலம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கோரியுள்ளதாக தெரிகிறது. விசாரணைக்கு வந்த நபர்களின் பற்களைப் பிடுங்கிய ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே குற்றத்தை ஒரு தனிநபர் செய்திருந்தால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டிருப்பார். ஆனால் பல்வீர் சிங்கும் அவரது கூட்டாளிகளும் இதுவரை கைது செய்யப்படவில்லை. “இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களில் சமரசம் கிடையாது” என்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

பாகல்பூர் கண் பறிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து “கங்கா ஜல்” என்ற திரைப்படம் வெளிவந்தது. அஜய் தேவகன் நடித்து வசூலில் வெற்றிபெற்ற திரைப்படம் இது. இந்தப்படத்தில் சமூக விரோதிகளின் கண்களில் கதைநாயகன் அமிலத்தை ஊற்றுவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இங்கும் காவல்துறை வன்முறையை ஆதரித்து தேசபக்தர்கள் சிலர் குரல் கொடுக்கக் கூடும். காவல்துறை அத்துமீறலை நியாயப்படுத்தி “காக்க காக்க” போன்ற ஏராளமான திரைப்படங்கள் இங்கு வந்து விட்டன. இன்னும் பல படங்கள் வரலாம். ஆனால் நிஜ வாழ்வில் கோடிகோடியாக பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு, இயற்கை வளங்களை சூறையாடுபவர்களுக்கு, மத-இனக்கலவரங்களை தூண்டிவிட்டு அரசியல் லாபம் பார்ப்பவர்களுக்கு எதிராக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்து யாரும் பார்த்ததில்லை. மாறாக அத்தகைய நபர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பது அனைவருக்கும் தெரியும்.

பாகல்பூர் நகரில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் கண் பார்வை பறிக்கப்பட்ட சம்பவங்களின்போது அந்நகரின் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த திரு. விஷ்ணு தயாள் ராம் பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் காவல்துறை தலைவராக (Director General of Police) இருந்து பதவி ஓய்வு பெற்றார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கடந்த 2014 பொதுத்தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலம், பலமு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று மாண்புமிகு எம்.பி. ஆனார். அண்மையில் நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அவரே மீண்டும் அத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்று பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் காவல்துறை நடத்தும் காவல்நிலைய வன்முறைகளுக்கு எதிரான குரல்கள் எழும்பாத நிலையில் தமிழ்நாடும், விரைவில் பீகாராக மாறும். தமிழ்நாட்டிலிருந்தும் காவல்நிலைய வன்முறைகளில் ஈடுபடும் சீரும், சிறப்பும் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் உருவாகலாம். வாழ்க ஜனநாயகம்! வளர்க தமிழ்நாடு!!

பி.சுந்தரராஜன்