இன்னாது.. தாஜ் மகால் பளிங்குகளோட பால் கலர் பச்சையா மாறுதா?: காரணம் கண்டறிய உ.பி. சி எம் ஆர்டர்
இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள உலகப் பிரசித்திப் பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மகால் கட்டட வேலையானது 22,000 வேலையாட்களைக் கொண்டும், 1000 யானைகளைக் கொண்டும் 1631 – ஆம் ஆண்டு தொடங்கி 1653 -ஆம் ஆண்டு வரை நடந்தது. இதைக் கட்டி முடிக்க அன்றைய மதிப்பில் 32 கோடி செலவிடப்பட்டது. இக்கட்டிடத்தை கட்டிய கலைஞர்களின் கைகள் இதைவிட சிறந்த பிரிதொரு கட்டிடத்தை உருவாக்காதிருக்கும் பொருட்டு வெட்டப்பட்டதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாஜ்மகால், பாரசீக, மத்திய ஆசியா மற்றும் முன்னைய முகலாய கட்டிடக்கலை மரபுகளை உள்ளடக்கிக் கட்டப்பட்டுள்ளது. தாஜ்மகால் முழுவதும் வெண்ணிற சலவைக் கற்களை பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதி வெள்ளை சலவைக்கற்களாலான சமாதி கட்டிடத்தைக் கொண்டது. தாஜ்மகாலின் நுழைவாயில் இதன் ஐந்து சிறப்பம்சங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த நுழைவாயிலை கட்டிமுடிக்க ஆறு ஆண்டு காலம் பிடித்தது. இது பளிங்கு கற்களிலேயே விலை உயர்ந்த கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இதனிடையே தாஜ் மஹாலின் வெண்ணிற பளிங்குக் கற்கள் மீது படிந்திருக்கும் பச்சை நிற படிமங்களுக்கான காரணங்கள், அவற்றைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, லக்னெளவில் அரசு செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை கூறியதாவது: ” தாஜ் மஹாலின் வெண்ணிற பளிங்குக் கற்கள் மீது படிந்திருக்கும் பச்சை நிற படிமங்களுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் கண்டறியு மாறு ஆக்ரா மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர், பொதுப் பணித் துறை அதிகாரிகள், தொல்லியல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு ஆகியோருக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். உலகின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பாதுகாப்பதிலும், அதனைப் பராமரிப்பதிலும் சமாஜவாதி அரசு இயன்ற அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
முன்னதாக, தாஜ் மஹாலின் மீது படிந்து வரும் பச்சை நிறப் படிமங்களால் அதன் அழகு சீர்குலைந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்தப் பச்சை நிறப் படிமங்களுக்கு சிரினோமிட்ஸ் என்ற பூச்சியினங்களின் கழிவுகள் காரணமாக இருக்கலாம். அந்தப் பூச்சியினங்கள், அருகில் உள்ள யமுனை நதியில் பல்கிப் பெருகி, அந்த நதியையும் மாசுபடுத்தியுள்ளன. இதனிடையே, தாஜ் மஹாலைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய சுற்றுச்சூல் துறை அமைச்சகம், உத்தரப் பிரதேச அரசு, அந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.


