புதிய குடியரசு தலைவராக ராம் நாத் கோவிந்த் பொறுப்பேற்றார்!

புதிய  குடியரசு தலைவராக ராம் நாத் கோவிந்த் பொறுப்பேற்றார்!

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 24ந்தேதி திங்கள்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது. அதனால், 25ம்தேதி செவ்வாய்கிழமை 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். இன்று அதிகாலையில் ராம்நாத் கோவிந்த் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அக்பர் சாலையில் உள்ள ராம்நாத் கோவிந்தின் வீட்டிற்கு குடியரசு தலைவரின் ராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் அனில் கோஸ்லா வந்து, குடியரசு தலைவர் மாளிகைக்கு தனது துணைவியாருடன் வரும்படி ராம்நாத் கோவிந்தை கேட்டுக்கொண்டார். ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்து சேர்ந்ததும், அங்கிருந்து முன்னாள் உள்ள அணிவகுப்பு மைதானத்திற்கு பிரணாப்பும், ராம்நாத் கோவிந்தும் சென்றனர்.

இதனிடையே குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள ராணுவ பிரிவு பிரணாப் முகர்ஜிக்கு கடைசியாக சலுட் அடித்து, மரியாதை செய்து அனுப்பி வைத்தது. பிரணாப்புடன் ராம்நாத் கோவிந்த் உடன் இருந்தார். குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து குடியரசு தலைவர் வழக்கமாக பயன்படுத்தும் கருப்பு காரில் இருவரும் புறப்பட்டனர். காருக்கு முன்னும் பின்னும் குதிரைப்படை வீரர்கள், குதிரையில் அணிவகுத்து சென்றனர். கார் சென்ற வழி நெடுகிலும் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர். வரவேற்பு நாடாளுமன்ற வளாகத்தை கார் சென்றடைந்ததும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை தலைவர் பிரணாப்பையும், ராம்நாத் கோவிந்தையும் வரவேற்று பதவியேற்பு விழா நடைபெறும் மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேடையில் இருவரும் ஏறியதும், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். உடனடியாக பதவி பிரமாண நிகழ்ச்சி துவங்கியது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கெஹர் சிங் 14வது இந்தியக் குடியரசுத் தலைவராக இந்தி மொழியில் ராம்நாத் கோவிந்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.பதவி பிரமாணம் முடிந்ததும் 21 குண்டுகள் முழங்கின. ராம்நாத் கோவிந்த் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றதை குண்டு வெடிப்புகள் சுட்டிக்காட்டின. பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்தை அழைத்து தன்னுடைய இருக்கையில் அமரும்படி செய்தார்.

பின்னர், பதவி பிரமாண பதிவேட்டில் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து மிகவும் சுருக்கமாக இந்தியில் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்தப் பேச்சு அவரது கன்னிப் பேச்சாகும்.அவர் பேசுகையில், பாராளுமன்றத்திற்குள் இன்று நான் நுழைகையில் என்னுடைய மனதில் அதிகமான பழைய எண்ணங்கள் ஓடியது… பாராளுமன்றம் பல்வேறு விவாதங்கள், ஆலோசனைகள் மற்றும் தேசத்தை முன்னெடுத்து சென்ற இடமாகும். சில நேரங்களில் ஏற்றுக்கொண்டிருக்கலாம், மறுத்திருக்கலாம். எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன். 125 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். 125 கோடி மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருந்து செயல்படுவேன். ஜனாதிபதியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்.

ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி என முன்னாள் ஜனாதிபதிகள் காட்டிய வழியில் செயல்படுவேன். வேற்றுமைகள் பல இருந்தாலும் ஒற்றுமையாக செயல்படுவதே நம்முடைய பலமாகும். முன்னெறி செல்ல ஒற்றுமையை காட்டவேண்டும். நாம் அமைதியான தேசம், தேசம் முன்நோக்கி செல்ல நாம் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்… நம்முடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம். உலகிற்கு இந்தியாவின் திறனை காட்டவேண்டிய நேரமாகும்.

தேசத்தின் கட்டமைப்பை அரசு மட்டும் செய்வதில்லை, ஒவ்வொரு குடிமகனும் தேசத்தை கட்டமைக்கிறான். இன்று பெண்களும், ஆண்களும் கடினமாக உழைக்கிறார்கள், அனைத்து நிலைகளிலும் தோளோடு தோள் கொடுத்து நிற்கிறார்கள். நாம் அனைவரையும் பெருமையடைய செய்ய நம்முடைய விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சிறப்பான கல்வியை வழங்கும் ஆசிரியர்கள், நாம் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம் என்பதை உறுதிசெய்யும் பாதுகாப்பு படையினரால் நாம் பெருமையடைகிறோம்”என்றார்.

விழா நடந்த நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் தேவகெளடா, மன்மோகன் சிங், மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், முன்னாள் உதவி பிரதமர் எல்.கே. அத்வானி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஏராளமான பிரமுகர்கள் விழாவில் பங்குகொண்டனர்.தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்குகொண்டனர்.

Related Posts