June 7, 2023

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்!

வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க் கிழமை இரவு காலமானார். கடந்த 2016-இல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற் கொண்டு இருந்த அவர் நலமுடன் இருந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

1953-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஹரியானாவில் பிறந்தார் சுஷ்மா ஸ்வராஜ். அவரது தந்தை ஹர்தேவ் ஷர்மா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர். சுஷ்மா ஹரியானாவில் உள்ள சனாதன் தர்மா கல்லூரியில் சமஸ்கிருத்தை முதல் பாடமாக்கக்கொண்டு பொலிட்டிகல் சயின்ஸ் படிப்பை முடித்துள்ளார். மேலும் பஞ்சாப் பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பையும் நிறைவுசெய்துள்ளார். 1973-ம் ஆண்டு காலகட்டதில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். இதையடுத்து அவர் தம் 25-வது வயதில் 1977- 82 வரை ஹரியானா மாநில அமைச்சராக இருந்தார். இளம் வயதிலே அமைச்சரான பெருமை அவருக்கு உண்டு. பா.ஜ.கவின் ஹரியானா மாநிலத்தலைவராக இருந்தார். 1998-ம் ஆண்டு டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக 52 நாள்கள் பணியாற்றினார். 7 முறை மக்களவை எம்.பியாகவும் இருந்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர், இரண்டாவது முறையாக மோடி தலைமை யிலான பா.ஜ.க பதவி ஏற்றபோது, உடல்நிலை பாதிப்பு காரணமாக அமைச்சர் பதவியை மறுத்து இருந்தார்.

சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, உலகின் மூலை முடுக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அவரிடம் சுட்டுரை மூலம் உதவி கோரினால், சம்பந்தப்பட்ட வெளி நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் வாயிலாக, அவர்கள் நாடு திரும்புவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வார். இதனால், மக்கள் எளிதில் அணுகக்கூடிய தலைவராக விளங்கினார்.

இந்நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை மாலை பதிவிட்டிருந்தார். இந்த அறிவிப்பை பார்ப்பதற்குத்தான் என்வாழ்வில் இத்தனைக் காலம் காத்திருந்தேன் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இதுவே பொதுவாழ்வில் அவர் வெளியிட்ட கடைசி செய்தியாக அமைந்தது. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுஷ்மா மறைவு குறித்து ராகுல் காந்தி“மிக சிறந்த அரசியல் தலைவர், பேச்சாளர் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரான சுஸ்மா ஸ்வராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றேன்” என்று  ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அத்துடன், “இந்த துக்கமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் இளைபாறட்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.