June 1, 2023

மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சூர்யாவுக்கு சில கேள்விகள்!

ஒரு விஷயத்தைப் பற்றி யார் சொல்லுதை நம்ப வேண்டுமோ, அதை விட்டுவிட்டு விவரம் தெரியாத வர்களும், சுயநலக்காரர்களும் சொல்லுதை நம்புவது நல்லதல்ல. உடம்பு சரியில்லாத வர்கள் டாக்டரிடம் போகாமல் இஞ்சினியரிடம் போவது எவ்வளவு முட்டாள்தனமானதோ அதை விட அதிக முட்டாள்தனமானது கல்விக் கொள்கைப் பற்றி சினிமாக்காரர் போன்றோர் சொல்லுவதைக் கேட்பது. அந்த சினிமாக்காரரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் – வரைவு கல்விக் கொள்கையை அவர் படித்து விட்டுப் பேசவில்லையாம்; சிலர் அவருக்குச் சொல்லியதைக் கேட்டுவிட்டுப் பேசுகிறாராம்!

யார் அந்த சிலர்? நாடு வளர்வதைக் கொஞ்சங்கூட விரும்பாத சில போராளி (?) கும்பல், திட்ட மிட்டுப் பல சூழ்ச்சிகளைச் செய்து வருகிறது. அவர்கள் பரப்பும் விஷக்கிருமிகளை சினிமாக்காரர் களை வைத்தும் பரப்புகிறார்கள். அந்தக் கும்பலின் சூழ்ச்சியில் சில சினிமாக்காரர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்; சிலர் தெரிந்தே உடன்படுகிறார்கள், தங்களின் சுயநலத்திற்காக. ‘நான் பேசினால் அது நிறைய மக்களிடம் போய் சேரும் என்பதால் பேசுகிறேன்’ என்று சொல்லும் நடிகர் சூர்யா, சில மணி நேரம் செலவு செய்து அந்த வரைவு அறிக்கையைப் படித்துப் பார்த்திருக்க வேண்டாமா? மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சூர்யா, அந்த மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் கல்விக் கொள்கையைப் படித்துப் பார்க்க ஒரு சில மணி நேரம் கூட செலவழிக்க விரும்பவில்லையா?

17, 18 வயது கொண்ட பிஞ்சு மாணவ, மாணவிகள் முன் பேசுகிறோம் எனும் குறைந்தபட்சப் பொறுப்புணர்வு கூட இல்லாமல் கெட்ட வார்த்தையெல்லாம் பேசும் சூர்யாவா சமூக நலன் பற்றியும் மாணவர் நலன் பற்றியும் பாடமெடுப்பது? சினிமாக்காரர்களும், so called போராளிகளும் மக்கள் உணர்ச்சிவசப்படும் அளவுக்குக் குரலை உயர்த்திப் பேசி, இல்லாதப் பொல்லாத விஷயங் களை எல்லாம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். அதற்கு ஊடகங்கள் வெளிச்சம் கொடுத்து விடுகிறார்கள். அதன் விளைவாக, பொய்யான விஷயங்களை உண்மை என்று நம்பிவிடுறார்கள் மக்கள். உண்மையைக் கொண்டு செல்வதற்குத் தான் தொடர் முயற்சியும் கடின உழைப்பும் தேவைப்படுகிறது… இப்போது சூர்யா சொன்ன ஓரிரு பொய்களுக்கு மட்டும் இங்கே உண்மையைச் சொல்லுகிறேன்.

புதிய (வரைவு) கல்விக் கொள்கை, மாணவர்கள் கம்மியாக இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களை மூடிவிடச் சொல்லுவதாக சொல்லுகிறார் சூர்யா. அது முற்றிலும் தவறு. புதிய கல்விக் கொள்கை யில் அப்படி எங்கேயும் சொல்லப்படவில்லை. 3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்புகளில் எல்லாம் நடத்தப்படும் தேர்வுகளைக் கடுமையாக விமர்சிக்கிறார் சூர்யா. அந்தத் தேர்வுகள் எல்லாம் Pass / Fail தேர்வுகள் அல்ல; மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அறிந்துகொள்ள உதவும் தேர்வுகள் மட்டுமே. அவை மாணவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது, மாறாக அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

மாணவர்களின் இடை நிற்றல் (Drop outs) பற்றி பேசுகிறார். இடை நிற்றலைக் குறைக்கத் தொடர்ந்து பல முயற்சிகள் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர் கல்வியில் அதிகப்படியான மாணவர்களைச் சேர்க்கவும் பல்வேறு தொடர் முயற்சிகள்  மே ற்கொள்ளப் படுகிறது. ஆராய்ச்சியை மேம்படுத்தப் பொருளாதார உதவிகளும் பெருமளவு வாரி வழங்கப்பட்டு வருகிறது. உண்மைத் தெரியாமல் பேசக் கூடாது.

நீட் தேர்வைப் பற்றி பேசும்போது அவ்வளவு ஆவேசமாகப் பேசும் சூர்யா, தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகள் அடித்துவந்தக் கொள்ளையைப் பற்றி மட்டும் ஏன் பேச மறுக்கிறார்? எது அவரைப் பேசத் தடுக்கிறது?எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவர்களும் பெற்றோர்களும் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையைத் தயாரித்தக் குழுவின் தலைவர், அமெரிக்காவின் மிகச் சிறந்த விஞ்ஞான அமைப்பான NASAவுக்கு இணையான நம் பாரத நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISROவின் முன்னாள் தலைவரும் உலகறிந்த விஞ்ஞானியுமான டாக்டர் கஸ்தூரிரங்கன் (இந்த ISROவில் நமது அப்துல் கலாம் ஐயா பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). அவரைப் போலவே, Princeton Universityயின் பேராசிரியர், Jawaharlal Nehru Universityயின் பேராசிரியர் உள்ளிட்ட பல உண்மையானக் கல்வியாளர்களைக் கொண்டு மிகவும் அக்கறையோடு தயாரிக்கப்பட்டது இந்தக் கல்விக் கொள்கை.

ஆகச் சிறந்த இந்தக் கல்விக் கொள்கையை Anna Universityயின் துணை வேந்தர், IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான நபர்களைத் தேர்வு செய்யும் UPSC (Union Public Service Commission) என்றழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர், C, C++, Java, Numerical Analysis உள்ளிட்ட பல அருமையானப் புத்தகங்களை எழுதியவர் முதலியப் பல்வேறு பெருமைகளைப் பெற்ற நமது தமிழகத்தைச் சார்ந்த டாக்டர் E. பாலகுருசாமி   வரவேற்கிறார்.

யார் அறிவாளிகள்? நாடறிந்த விஞ்ஞானி கஸ்தூரிரங்கனா, நடிகர் சூர்யாவா? பல்கலைக்கழகத் துணை வேந்தரா, படிக்காமல் பேசும் சூர்யாவா?நாம் யார் சொல்லுவதைக் கேட்கப் போகிறோம் என்பதைப் பொறுத்துத் தான் நமது இளந்தலைமுறையினரின் எதிர்காலம் இருக்கிறது. யோசித்து முடிவெடுங்கள்.

வைத்தியநாதன்