June 4, 2023

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை – சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசனம் தீர்ப்பு!

`ல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், பீட்டா அழுத்ததால் நீதிமன்ற உத்தரவு ஒன்றால் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து தமிழக மக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து, அப்போதைய தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் காரணமாக தற்போது தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கின் விசாரணையின் போது ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர் என்றும் விலங்குகள் நல அமைப்புகளால் வாதிடப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு. பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால் விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.

இந்த மனுக்களை விசாரித்து வந்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டது. பின்னர் இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் சாசனம் அமர்வு இன்று வழங்குவதாக அறிவித்தது.

அதன்படி சுப்ரீம் கோர்ட்அரசியல் சாசன அமர்வு, “ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாச்சாரமாக இருந்தாலும் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை.. அதனால் ஜல்லிக்கட்டை எதிர்த்து தொடரபட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி. எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.