June 2, 2023

சூப்பர் டூப்பர் – விமர்சனம்!

சினிமா-ன்னா ரொம்ப புதுசான கதையை யோசிச்சு, ஆறேழு கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்ணி, டாப் ஆர்டிஸ்டிங்களைக் கமிட் பண்ணி இன்னும் என்னவென்னவோ தகிடுத்தத்தம் பண்ணி எடுக்கறது-ன்னு நெனச்சா ரொம்ப தப்பு. சகலருக்கும் புரியற அல்லது விரும்பற ஒரு கதையை செலக்ட பண்ணி அந்த கதைக்கு தோதாக நியூ ஆர்டிஸ்டா இருந்தா கூட கமிட் பண்ணி  ஸ்கிரீன் பிளேக்கு கொஞ்சம் முளையை கசக்கி ஜஸ்ட் ஃபன்னா படம் பார்க்க வந்தவங்க மனசு விட்டு சிரிச்சிட்டு போற மாதிரி எடுக்கறதும் சினிமா. அப்படி தயாரான படம்தான் ’சூப்பர் டூப்பர்’ படம்.

சின்ன சின்ன திருட்டு புழைப்பு செய்து வாழ்க்கையை ஓட்டி வரும் ஹீரோ துருவாவும், அவருக்கு மாமா ரோலில் வரும் ஷாராவும், போலீஸ் ஆபீசர் மகள் இந்துஜாவை கடத்தி அவரது தந்தையிடம் பணம் பறிக்க திட்டம் போட்டு செயலில் இறங்கிறார்கள். அதன் படி, அவர்கள் பணம் வாங்க போகும் போது இந்துஜாவின் அப்பா கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை அடுத்து, இந்துஜா மீது லவ் -விடும் துருவா, காதலிக்காக அவரது அப்பாவை கொலை செய்தவர்கள் யார்? என்பதை கண்டறிய களத்தில் இறங்குகிறார், அச்சமயம் பல கோடி மதிப்புள்ள போதை மருந்து துருவாவிடம் கிடைக்கிறது. அந்த போதை மருந்தை தேடி துருவாவையும், இந்துஜாவையும் ஒரு கூட்டம் துரத்துகிறது. அவர்களிடம் சிக்கும் துருவா, இந்துஜா இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள். போதை மருந்து கடத்தல் கூட்டத்தின் கதி என்ன என்பதை காமெடி கலந்து கட்டி சொல்லி இருப்பதுதான் ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் கதை.

நாயகன் துருவா, தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருப்பதோடு, ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருப்பதை நிரூபித்திருக்கிறார். அப்படியே நடனத்திலும் சற்று கவனம் செலுத்தினால், கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர சான்ஸ் உண்டு.இந்துஜா கண்களினாலேயே பாதி நடிப்பை வெளிப்படுத்திவிடுகிறார். கூடவே குத்து பாட்டுக்கு அஜால்…குஜால்… ஆட்டம் போட்டு கவர்கிறார்..நாயகன் மாமாவாக வரும் சிவ ஷா வாயை திறந்தாலே காமெடிதான். வில்லன்களாக வரும் ஆதித்யா, ஸ்ரீனி இருவரும் தனிக் கவனம் பெறுகிறார்கள். இசை அமைத்துள்ள திவாகரா தியாகராஜனின் பாடல்கள் ரொம்ப சுமார் ரகம். அதே சமயம் பின்னணி இசை திரைக்கதைக்கு தனி பலம் சேர்த்திருக்கிறது. தளபதி ரத்தினம் மற்றும் சுந்தர் ராம் ஆகியோரது ஒளிப்பதிவு பர்ஃபெக்ட்.

இயக்குநர் ஏ.கே -க்கு இது முதல் படமாம்.. ஆனால் சாதாரண கதையை, கொஞ்சம் புதுசான திரைக்கதையில் கொடுத்து தன் புத்திசாலித்தனத்தை நிரூபித்து இருக்கிறார். அவ்வப்போது வரும் திடீர் திருப்பம் சர்ப்பிரைஸாகவும், படத்திற்கு பலமாகவும் இருக்கிறது..சில இடங்களில் குழப்பம் ஏற்பட்டிருந்தாலும் காமிக்ஸ் ஸ்டைலில் காட்சிகளை விவரித்து ரசிகனை கவர்ந்து விட்டார்.

மொத்தத்தில், ‘சூப்பர் டூப்பர்’ ஓ கே ரகம்

மார்க் 2.75 / 5