சென்னையில் நடைபாதைகள் நடப்பதற்கேவா?

சென்னையில் நடைபாதைகள் நடப்பதற்கேவா?

சென்னையில் நடைபாதை என்று தனியாக அமைக்கப்பட்ட தெருக்களில் நிம்மதியாக நடக்கவே முடிவதில்லை.குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் படும் சிரமம் அதிகம்.நடைபாதை நடப்பதற்கே என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் மட்டும் இருக்கும்.நடைபாதையில் இரண்டு சக்கர,ஏன் நான்குச் சக்கர வாகனங்கள் கூட நிறுத்திவைக்கப்படுகின்றன. நடைபாதை வியாபாரிகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். திடீர் திடீரென்று நடமாடும் மற்றும் நிரந்தர கடைகள் ஆக்கிரமித்திருக்கும். நடைபாதையை ஒட்டிய கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் விரிவாக்கப் பகுதியாகத் தீர்மானித்து அங்கும் கடையின் பொருள்களை பரப்பியிருப்பார்கள்.

நடைபாதை ஒட்டி டீக்கடை இருந்தால் அதன் வாசலில் பத்து பேர் நடைபாதையை மறித்து நின்றபடி சிகரெட் பிடித்து அரட்டை அடிப்பார்கள்.நாய்கள் தூங்கும். குப்பைகள் குவிந்திருக்கும். மழை நீர் வடிகால் அமைப்பின் மூடிகள் சரியாக மூடப்படாமல் தூக்கிக்கொண்டு இருக்கும். தலை குனிந்து எச்சரிக்கையாக பார்த்து நடக்கவில்லை என்றால் காயப்படுத்தும்.இத்தனைப் பிரச்சினைகளால் மக்கள் நடைபாதையை ஒட்டிய சாலையில்தான் நடக்க நேரிடுகிறது.

சாலைகளிலோ நெருப்பு அணைக்க செல்லும் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் வேகத்தில்தான் எல்லா வாகனங்களும் விரையும். அரை இஞ்ச் இடைவெளியில் அல்லது உரசியபடிதான் செல்வதால்..முழு கவனத்துடன் சர்க்கஸ் வீரனின் சாகசத்துடன் நடக்க வேண்டும். இல்லையேல் பேண்டேஜுடன்தான் வீடு திரும்ப நேரிடும்.

இத்தனைக்கும் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல இடங்களில் தடுப்புக்களை ஏற்படுத்தியுள்ளதால் பாதசாரிகளின் பாதுகாப்பை பற்றி கவலை கொள்ளாமல், இரு சக்கரவாகன ஓட்டிகள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதாகவும், பாதசாரிகள் பயன்பாட்டுக்கான நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரைகள் இல்லை எனவும் கூறப்பட்டிருந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது தனிக் கதை.

முன்பெல்லாம் விழித்திறனற்ற மாற்றுத் திறனாளிகள் குச்சியைத் தட்டி எவர் உதவியுமில்லாமல் நடை பாதைகளில் தனியாக நடப்பதைப் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் அப்படி யாராவது நடந்து பார்த்ததில்லை. இந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளையும், அவலங்களையும் டிராஃபிக் துறை தீவிரமாக இறங்கி சரிசெய்தாலே சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் குறையும். அல்லது ஒன்று செய்யலாம். நடைபாதை நடப்பதற்கே என்கிற அர்த்தமற்ற அறிவிப்புகளை நீக்கிவிடலாம்.

பட்டுக் கோட்டை பிரபாகர்

error: Content is protected !!