வெறுமனே விரதமுறை+உணவு முறை+மூலிகைகள் மட்டுமே புற்றுநோய்க்கு சிகிச்சையாகாது!

வெறுமனே விரதமுறை+உணவு முறை+மூலிகைகள் மட்டுமே புற்றுநோய்க்கு சிகிச்சையாகாது!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்ஜோத் சிங் சித்து மனைவி திருமதி நவ்ஜோத் கவுர் சித்து அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட்டிருக்கிறது. அன்னார் மயக்கமருந்தியல் துறை மருத்துவராவார். மார்பகப்புற்று நோய்க்கு சிகிச்சையாக புற்றுக் கட்டி இருக்கும் மார்பகங்களை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அதனுடன் புற்று நோய் கட்டி செல்களை அழிக்கவல்ல கதிரியக்க சிகிச்சை ( ரேடியோதெரபி) வழங்கப் பட்டிருக்கிறது. இதனுடன் புற்று நோய் செல்களை அழித்தொழிக்கும் கீமோ தெரபி எனும் மருந்துகள் கொண்டு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. அன்னாருக்கு இத்துடன் சேர்த்து பால் மற்றும் சர்க்கரையை அறவே நிறுத்தும் குறை மாவு உணவுமுறையும் விரதமும் மஞ்சள், வேம்பு உள்ளிட்ட மூலிகைகளும் வழங்கப்பட்டுள்ளன.இந்த சிகிச்சையில் நோயர் முன்னேற்றம் கண்டநிலையில் சித்து அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கூறும் போது தனது மனைவி குணமானதற்கு ,பாலை நிறுத்தியதும் சர்க்கரையை நிறுத்தியதும் , விரதமுறையும் மஞ்சளும் ஆப்பிள் சிடர் வினிகரும் வேம்பும் காரணம் என்று பேசி இருக்கிறார்.

அதில் அவர் மனைவிக்கு அளித்த அறுவை சிகிச்சை + ரேடியோ தெரபி + கீமோதெரபி போன்றவற்றைப் பற்றி பெரிதாக பேசவில்லை. அதாவது இந்த செய்தியைப் பார்க்கும் பொதுமக்களுக்கு அவரது மனைவி , வெறுமனே மஞ்சள் + வேம்பு + ஆப்பிள் சிடர் வினிகர் + விரதமுறை + உணவு முறை ஆகியவற்றால் மட்டுமே அவர் புற்றுநோயில் இருந்து மீட்சி பெற்றது போன்ற கருத்து உண்டாகும். இது பார்ப்பவர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு உள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் என்பவை உலகம் முழுமைக்கும் பொதுவானவை. புற்றுநோயை வகைப்படுத்துதலில் இருந்து அவற்றின் பரவலைப் பார்த்து அதை தரம் பிரிப்பது வரை அவற்றுக்கு வழங்கப்படும் அறுவை சிகிச்சை , கீமோ தெரபி , ரேடியோ தெரபி என அனைத்துமே தொடர்ந்து அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகளில் வெற்றி பெறும் மருந்துகளும் சிகிச்சை முறைகளும் மட்டுமே மக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

இந்நிலையில் புற்று நோய்க்குத் தேவையான அத்தனை அறிவியல் பூர்வமான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு அவற்றைப் பற்றி சிறு வார்த்தை கூட பேசாமல் அறிவியல் பூர்வமாக ஆணித்தரமாக நிரூபணம் ஆகாதவற்றை முதன்மைப்படுத்திப் பேசும் போது அதை மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? இதைப் பார்க்கும் எளியோர் தங்களுக்கு வரும் புற்று நோய் அறிகுறிகளைப் புறந்தள்ளி ,உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டிய சிகிச்சைகளை தாமதிக்கும் வாய்ப்பும் அசட்டை செய்யும் வாய்ப்பும் உள்ளது. புற்று நோய் கட்டி என்பது வேறெந்த இடத்துக்கும் பரவாமல் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் போது அறுவை சிகிச்சை மட்டுமே போதுமானது. தாமதித்தால் அருகில் இருக்கும் நினநீர் கழலைகளுக்குப் பரவும் . இப்போது அறுவை சிகிச்சை செய்து கட்டி , கட்டியிருக்கும் உறுப்பையும் கூடவே கழலைகளையும் அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட்டு கதிரியிக்க சிகிச்சை அளிக்க வேண்டும் .இன்னும் தாமதித்தால் அருகே உள்ள எலும்பு தசைகளுக்குப் பரவும் தன்மை இருக்கும் .இப்போது அறுவைசிகிச்சை + ரேடியோதெரபி+ கீமோதெரபி மூன்றும் தேவைப்படும். இந்த நிலையில் இருந்து இன்னும் தாமதித்தால் புற்று செல்கள் உடல் முழுவதும் பரவி தூரத்து உறுப்புகளையும் பாதிக்கும். இது இறுதி நிலையாகப் பார்க்கப்படுகிறது .

பல புற்று நோய்களில் ஆரம்ப கட்ட நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே சில மாதங்கள் மட்டுமே நோயாளிக்கு நேரம் இருக்கும் . இந்தப் பொன்னான நேரத்தையும் , இது போன்ற காணொளிகளைக் கண்டு முறையான மருத்துவ சிகிச்சை பெற எத்தனிக்காமல் அசட்டை செய்து தாமதித்தால் அதனால் நஷ்டம் அந்த நோயருக்கும் கூடவே அவரது உறவினர்களுக்கும் தான் என்பதை மக்களால் பெரிதும் பின்பற்றப்படும் பெரியோர்கள் சிந்திக்க வேண்டும். நவ்ஜத் சிங் சித்து அவர்கள் அவரது மனைவிக்கு முயற்சி செய்து பார்த்து பலன் கண்ட குறை மாவு இனிப்பற்ற உணவு முறை விரத முறை மூலிகைகள் பற்றிக் கூறியது வரவேற்கத்தக்க ஒன்றே.ஆனால் அவர் அவரது மனைவிக்கு செய்த முக்கியமான அறிவியல் பூர்வமாக நிரூபணமான அறுவை சிகிச்சை , கீமோ தெரபி , ரேடியோ தெரபி போன்றவற்றை முதலில் பேசி அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விட்டு பிறகு மேற்கூறியவற்றை பேசியிருந்தால் அது சரியானது.

வெறுமனே விரதமுறை + உணவு முறை + மூலிகைகள் ஒருபோதும் புற்றுநோய்க்கு சிகிச்சையாகாது ஆனால் புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள் இவற்றையும் சேர்த்து செய்தால் நல்ல பலன் கிடைக்கிறது என்று கூறியிருந்தால் அது சரியானது. இந்தப் படத்திலேயே சித்து அவர்களின் மனைவிக்கு டாக்சோரூபிசின் எனும் சிவப்பு நிற கீமோதெரபி மருந்து வழங்கப்படுவது புலனாகிறது. அவரும் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை + கீமோ தெரபி + ரேடியோ தெரபி ஆகியவற்றை வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார்.அன்னாரது மனைவி நல்ல உடல்நலத்துடன் பூரணமாக குணமாகி மீண்டும் தனது மருத்துவப் பணிக்குத் திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்வோம்.

எனதருமை சொந்தங்களே, எப்போதும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்குட்பட்டு நிரூபணமான சிகிச்சைகளையும் மருத்துவ முறைகளையும் கடைபிடிப்பதே சரியான வழியாகும். புற்று நோய் வேகமாக வளரும் .அதை விட வேகமாக அதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே புற்று நோயை வெல்ல முடியும்.
விழித்துக் கொள்வோம்.பிழைத்துக் கொள்வோம்.

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

error: Content is protected !!