குஜராத் :பட்டேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய் ! ஆனா.. பாருங்க..?
சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்தார் பட்டேல் சிலையைக்காண விமானம் மூலம், பார்வை யாளர்கள் வந்துசெல்வதற்காக கிட்டத்தட்ட 300 முதலைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ் நிலையில் படேல் சிலையால் அரசுக்கு ரூ.18.47 கோடி வருவாய் பெறப் பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சர்தார் சரோகவர் அணை பகுதியில் கட்டப்பட்டுள்ள, பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை காண, நாள் தோறும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர்.
உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சிலை , சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. முன்னதாக சிலையின் கட்டுமானத்திற்கும், அதன் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கும் உள்ளூர் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இச்சிலையைச் சுற்றி ஏராளான இயற்கை, செயற்கை நீர் நிலைகள் உள்ளன. சர்தார் சரோவர் அணை நிரம்பினால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இந்த நீர் நிலைகளில் சேகரிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் அரசுக்கு ஜனவரி 27ம் தேதி வரை ரூ.18.47 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது. படேல் சிலை மூலம் அரசுக்கான வருவாய் தொடர்பாக மக்களவையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையேதான் சிலை உள்ள பகுதியில் நீரில் விமானம் வந்திறங்கும் வசதிக்காக சிலை வளாகத்திற்கு அருகிலுள்ள நீர் தேக்கத்திலிருந்து முதலைகளை வேறு இடத்திற்கு மாற்றும் பணியை இந்திய அதிகாரிகள் தொடங்கி விட்டனர்.
9 அடி வரை நீளமுள்ள முதலைகள் சிலவற்றை உலோக கூண்டுக்குள் அடைத்து குஜராத்தின் மேற்கு பகுதிக்கு இவை அனுப்பி வைத்துள்ளனர்.லாரி, டிரக் போன்ற வாகனங்கள் மூலமாக, இதுவரை 12 முதலைகள் வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, நாட்டின் வனஉயிர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது என்ற எதிர்ப்பு குரலை சட்டை செய்ய ஆளில்லை என்பதுதான் சோகம்.