பாட ஆரம்பித்து ஐம்பது ஆண்டு ஆன எஸ் பி பாலசுப்பிரமணியனின் மகிழ்ச்சியூட்டிய நிகழ்ச்சி

பாட ஆரம்பித்து ஐம்பது ஆண்டு ஆன எஸ் பி பாலசுப்பிரமணியனின் மகிழ்ச்சியூட்டிய நிகழ்ச்சி

கடந்த 1966 -ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாடகராக தன் பயணத்தை தொடங்கிய எஸ்.பி.பி.க்கு, இசை உலகில் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1960 -களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம், 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். இவர் தமிழில் “ஹோட்டல் ரம்பா’ திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதலில் பாடினார். தன் திரை இசைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, தன் குடும்பத்தில் ஒருவராக கருதும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு அவர் பாத பூஜை மரியாதை செலுத்தினார். தன் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கே.ஜே.ஜேசுதாஸ் -பிரபா தம்பதியினருக்கு பாதபூஜை செய்தார்.

spb dec 31

பின்னர் எஸ்.பி.பி. பேசிய போது “இசை உலகில் 50 -ஆவது ஆண்டை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் என் இசை முன்னோடிகள் அனைவருக்கு மரியாதையை செலுத்திக் கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், உதவியாக இருந்த இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலான ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு இசை மேதைக்கு நிறைய கௌரவம் கிடைக்கிறது என்றால், அது அவனால்தான் சாத்தியம் என்றால் அது முட்டாள்தனம். என் வளர்ச்சியில் என் பங்கும் இருந்தாலும், என் பயணத்துக்கு உதவியவர்கள் பலர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

என் மனதுக்கு மிகவும் பிடித்தவர் பாடகர் முகம்மது ரஃபி. அதன் பின் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என் அண்ணன் ஜேசுதாஸ். இந்த தருணத்தில் அவரிடம் ஆசி வாங்க வேண்டும் என்று நினைத்தேன். என் ஆசையை ஏற்றுக் கொண்ட அவர் வந்ததற்கு நன்றி. இந்தக் கடனை எந்த ஜென்மம் எடுத்தாலும் தீர்க்க முடியாது.என்னால் என்ன முடியுமோ, என் அறிவால் எந்த உயரத்தை எட்ட முடியுமோ அதை எட்டியிருப்பதாக நினைக்கிறேன். இனி செய்வதற்கு எந்தப் புதுமையும் இருப்பதாக நினைக்கவில்லை.

இப்போதும் திறமையாளர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் நாளுக்குநாள் வளர்ந்து வருகிற தொழில்நுட்பம் அவர்களைச் சரியாக பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கி விடுகிறது. இதை தடுக்க முடியாது.இருந்தாலும், நன்றாக பாடுகிறவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான இடத்தை அளிக்க வேண்டும்” என்றார் எஸ்.பி.பி.

அதனைத் தொடர்ந்து பேசிய பாடகர் யேசுதாஸ் “எஸ்.பி.பி என்னுடைய தம்பி மட்டுமல்ல. நாங்கள் இருவரும் ஒருவரே. இசையால் ஒன்றிணைந்திருக்கிறோம். சரஸ்வதி தாயால் ஆசிர்வதிக்கப்பட்டவர் எஸ்.பி.பி. அவர் எப்போதுமே இசையில் தனக்கு எதுவும் தெரியாது என சொல்கிறார். அவர் அவ்வாறு சொல்லத் தேவையில்லை.

ஜென்ம ஜென்மமாக பல்வேறு அனுபவங்கள் மூலமாக விஷயங்களை கற்றுக் கொண்டு இசையில் இந்நிலைக்கு உயர்ந்துள்ளார். தனது சாதனையை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளார். ஆகையால் அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லக் கூடாது. அனைவருக்குமே அவர் எவ்வளவு பெரிய பாடகர் என்பது தெரியும். (யேசுதாஸ் பேசும் போது பல இடங்களில் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்தார் எஸ்.பி.பி.) இங்கு எனது பாலுவுக்காக மட்டுமே கலந்து கொண்டுள்ளேன். எனது மன ஆழத்தில் இருந்து பாலுவின் குடும்பத்தை ஆசிர்வதிக்கிறேன். அவர் இன்னும் பல்லாண்டு காலங்கள் இசைக்காக வாழ வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்புக்கு ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நினைவுகூர விரும்புகிறேன்.

பாரீஸில் ஒரு கச்சேரி முடிந்தவுடன், யாருமே இல்லை. தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பாடும் இல்லை. எனது வாழ்க்கையில் சாப்பாடு இன்றி 3 நாட்கள் வரை இருந்துள்ளேன். பாரீஸில் அன்றிரவு ஒரே ஒரு ஆப்பிளை சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டேன். அப்போது என் அறைக்கு வெளியே ‘ரூம் சர்வீஸ்’ என்று சத்தம் கேட்டது. அது பாலுவின் சத்தம்தான் என எனக்குத் தெரியும். நான் அறையைத் திறந்தவுடன் சாதம், ரசத்துடன் பாலு நின்று கொண்டிருந்தார். இன்னொரு கர்ப்பத்தில் பிறந்தால்தான் தம்பியாக முடியுமா என்ன?. அந்த அளவுக்கு நேர்மையானவர் என் பாலு. அந்த சாப்பாட்டை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு ருசி நிறைந்தது. எனக்கு நிறைய தம்பிகள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு ரொம்பப் பிடித்த தம்பி என் பாலு. இன்னும் மேலும் பல ஆண்டுகள் வலுவாகவும், சந்தோஷமாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்” என்று பேசினார் பாடகர் யேசுதாஸ்.