ஷாட்.. பூட்.. த்ரீ.. விமர்சனம்
சர்வதேச அளவில் வெறிநாய்க்கடி ரேபீஸ் பாதிப்பால் ஆண்டுக்கு 85 ஆயிரம் பேர் வரை இறப்பதாகவும், ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் 2 முதல் 5 பேர் வரை இறப்பை சந்திப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வளரும் நாடுகளில்தான் இந்த பாதிப்பு மிக அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள் என வெறிநாய்க்கடி பாதிப்பில் முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் தெருநாய்களால் கடிபட்டு ரேபீஸ் நோய் தாக்கத்துக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் நாய்க்கடியால் பலியாகும் அப்பாவிகளின் எண்ணிக்கையும் அதிகம். 2019ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி விலங்குகள் கடித்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் முதலிடம் பிடித்திருப்பது உத்தரபிரதேசம், 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்று சேதி வந்த நிலையில் விலங்குகளிடம் இரக்கம் காட்ட வேண்டும், அவைகளும் ஒரு உயிர் தான் என்ற கருத்தை ஆழமாகச் சொல்ல முனரிருக்கும் டைரக்டர் அதற்காக அதிகமாக தெரு நாய்களின் துன்பங்களை இந்த ‘ஷாட் பூட் த்ரீ’ படத்தில் விரிவாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார். ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு தொல்லை அளிக்கும் தெருநாய்கள், பன்றிகள் ஆகியவற்றை பிடித்து அவற்றில் ரேபீஸ் பாதிப்புள்ள விலங்குகளை அழித்தும், மற்றவற்றுக்கு தடுப்பூசி போட்டும் வந்தன. உள்ளாட்சி அமைப்புகளின் இந்த நடவடிக்கைக்கு விலங்குகள் நல அமைப்புகள் பெரும் தடையாக அமைந்தன. அவற்றின் முட்டுக்கட்டையால் இன்று தெரு நாய்கள் பிரச்னை பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில் இப்படி ஒரு கதையை வழங்கி கடுபேற்றி இருக்கிறார்கள்..
கதை என்னவென்றால் ஐடியில் ஒர்க் செய்யும் வெங்கட் பிரபு – சினேகா தம்பதிக்கு ஒரே மகன் கைலாஷ் ஹீட். அப்பா,, அம்மா இருவருமே எந்த நேரமும் ஒர்க் பிசியில் பரபரப்பாக இருப்பதால், தன்னுடன் பழகுவதற்கும், நேரல் செலவிடுவதற்கும் நாய் ஒன்றை வாங்கி வளர்க்கிறான். அந்த நாய் ஒருநால் காணாமல் போக, தனது நண்பர்களுடன் சேர்ந்து கைலாஷ் அந்த நாயை தேடுகிறார். அதே சமயம் அந்நாயை கார்ப்பரேஷன் ஊழியர்கள் கொன்று புதைக்க திட்டம் போடுகிறார்கள். இந்நிலையில் நாய் கிடைத்ததா? என்பதை சொல்வதோடு, சிறுவர்களின் தேடல் பயணம் மூலம் மனிதர்கள் மீது மட்டும் அல்ல பூமியில் வாழும் அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு செலுத்த வேண்டும், என்ற புத்தர்தனமான கருத்தை வலியுறுத்துவது தான் ‘ஷாட் பூட் த்ரீ’.
சினேகா மற்றும் வெங்கட் பிரபு மிடில் கிளாஸ் பேரண்ட் ரோலில் பர்பெக்டாக பொருந்தியிருப்பதோடு லிமிட்டான் ஆக்ட் மூலம் அந்த ரோலில் வாழ்ந்து அசத்தி இருக்கிறார்கள். கைலாஷ் ஹீட், வேதாந்த், பூவையார் மூன்று சிறுவர்களும், சிறுமி பிரணித்தியும் தங்களது இயல்பான வாழ்வியலை நடிப்பாக வெளிக்காட்டி ரசிகர்களை கவர்கிறார்கள். ஏழை வீட்டு பிள்ளையாக இருந்தாலும், நாட்டு நடப்பை நன்கு அறிந்து வைத்திருக்கும் பூவையாரின் வேடமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் சிறப்பு. பாடகியாவதற்கு ஆசைப்படும் பிரணிதியின் நடிப்பில் மட்டும் அல்ல குரலிலும் முதிர்ச்சி தெரிகிறது.யோகிபாபு என்பவர் இருக்கிறார் ஆனால் அவரிடம் எதிர்ப்பார்த்த நகைசுவை வழக்கம் போல் மிஸ்ஸிங்..
வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் பின்னணி இசை சுமார் ரகம் தான் மிகவும் சராசரி இசையாக நம்மை கடந்து செல்கிறது. அதிலும் தேவையில்லாத சத்தங்களை நிரப்பி சில இடங்களில் காண வேண்டிய காட்சிகளை காணவிடாமல் செய்யும் வித்தையை செய்திருக்கிறார். மனிதர்களைத் தாண்டிய உயிரினம் மீது இரக்கம் காட்டுவது, அறியா சிறுவர்களின் தேடல் பயணம் போன்றவற்றை படு கேஷூவலாக காட்சிப்படுத்தியிருக்கும் டைரக்டர் இப்படத்தில் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயையும் நடிக்க வைக்க ட்ரை பண்ணியிருக்கிறார். மேக்ஸ் என்ற வேடத்தில் நடித்திருக்கும் அந்த நாயும் சிறுவர்களைப் போல் படத்தில் முக்கியமான கேரக்டராக இருந்தாலும், அந்நாய் ரசிகர்களை கொஞ்சம் கூட கவரவில்லை. அதற்கான காட்சிகளும் படத்தில் இல்லை என்பதும் சோகம்.
வேலை..வேலை…என்று இருக்கும் பெற்றோர்கள், எது கேட்டாலும் கிடைக்கும் ஆனால் பெற்றோர்களின் அரவனைப்பு மட்டும் கிடைக்காமல் ஏங்கும் பிள்ளைகள், அவர்கள் மூலம் சொல்லப்படும் விலங்குகள் மீதான இரக்கம் மற்றும் அக்கறை என படத்தில் பல விசயங்களை சொல்லியிருக்கும் டைரக்டர் அருணாச்சலம் வைத்தியநாதன், முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான படமாக மட்டும் இன்றி, சில இடங்களில் மேலோட்டமாக பெற்றோர்களுக்கு பாடம் எடுத்து படத்தை கமர்ஷியலாக நகர்த்தியிருந்தாலும், பார்க்கும்போது யாதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கவில்லை.
மொத்ததில் – நம் நேரத்தை வைத்து ஷாட் பூட் த்ரி சொல்லி இருக்கிறார்கள்
மார்க் 2/5


