சிக்கிமில் திடீர் மேகவெடிப்பு & வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்!- வீடியோ

சிக்கிமில் திடீர் மேகவெடிப்பு & வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்!- வீடியோ

ம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம்மில் உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் இன்று காலை மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கியதில் 23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள லேசன் பள்ளத்தாக்கில் உருவாகும் டீஸ்டா ஆற்றில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக கேங்டாக் மாவட்டத்தில் சுமார் 30 கிலோமீட்டருக்கும் மேலான தூரத்திற்கு கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. தெற்கு லோனார்க் ஏரியில் ஏற்பட்ட இந்த மேகவெடிப்பு காரணமாக, ஏரியின் கரைகள் உடைந்து தண்ணீர் டீஸ்டா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலுடார் கிராமத்தில் நதியின் மீது கட்டப்பட்டிருந்த இணைப்பு பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குவாஹாட்டி ராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ”சிக்கிம் மாநிலத்தின் லான்சன் பள்ளத்தாக்கில் இன்று காலை டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ வாகனங்கள் மூழ்கின. 23 ராணுவ வீரர்கள் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்டம் அருகே பர்டாங் எனும் பகுதியில் ராணுவ வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சுங்தங் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் நீர்மட்டம் 15 முதல் 20 அடிக்கு உயர்ந்தது. இதில்தான் ராணுவ வாகனங்கள் மூழ்கியுள்ளன. சில வாகனங்கள் சேற்றில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேகவெடிப்பு நிகழ்ந்தவுடன் சிக்கிம் முழுவதும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திடீர் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்வர் பிரேம் சிங் தமங் பாதிப்புகளை ஆய்வு செய்தார். இவை ஒருபுறம் இருக்க ராணுவ வீரர்களைத் தேடும் பணியும் நடந்து வருகிறது.

சிக்கிம் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்காக மாநில அரசு அவசர தொடர்பு எண்களை அறிவித்துள்ளது. 03592-202461/201145 காங்டாக்-03592-284444 நாம்சி- 03595-263734 மங்கன்- 03592-234538 பாக்யாங்- 03592-291936 சோரங்- 8016747244 கியால்சிங்-03595-250888 என ஒவ்வொரு பகுதிக்கும் பிரத்யேக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர சுற்றுலாப் பயணிகளுக்கு என -7001911393 ( முதன்மை அலுவலர்) (துணை இயக்குநர்)- 8101426284 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேகவெடிப்பு என்பது, சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்ப்பதுதான் மேகவெடிப்பு. இந்த அதீத மழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு முதலியன நிகழ்கிறது. கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த நிலச்சரிவில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts