ஜொலிக்கும் ஏஐ…தவிக்கும் இளைஞர்கள்:மாநாட்டின் முகத்திரையைக் கிழித்த காங்கிரஸின் அதிரடி!

ஜொலிக்கும் ஏஐ…தவிக்கும் இளைஞர்கள்:மாநாட்டின் முகத்திரையைக் கிழித்த காங்கிரஸின் அதிரடி!

புது டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டின் (AI Impact Summit) வாயிலில் இளைஞர் காங்கிரஸார் முன்னெடுத்த ‘சட்டை இல்லாத போராட்டம்’ தற்போது நாடு தழுவிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தொழில்நுட்ப ஜாம்பவான்கள் கூடியிருக்கும் ஒரு சர்வதேச அரங்கில் இத்தகைய போராட்டம் இந்தியாவின் பிம்பத்தைச் சிதைத்துவிட்டதாக ஒரு தரப்பினர் விமர்சித்தாலும், இந்தப் போராட்டத்தின் பின்னால் இருக்கும் நியாயமான கேள்விகளைக் கவனிப்பது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியமானது.

பிம்பம் முக்கியமா? வாழ்வாதாரம் முக்கியமா?

உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க இத்தகைய மாநாடுகள் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மின்னொளியில் ஜொலிக்கும் இந்த மாநாட்டின் மறுபக்கம், சாமானிய மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் மறைக்கப்படுகின்றன. உயர்தர தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசப்படும் அதே வேளையில், நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்த கவலைகளை உரக்கச் சொல்லவே இத்தகைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ‘சட்டை இல்லாத போராட்டம்’ என்பது வெறும் ஆடைத் துறப்பு அல்ல; அது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட இழந்து நிற்கும் நிலையை உலகுக்கு உணர்த்தும் ஒரு குறியீடு.

ஜனநாயகத்தில் போராட்டங்களின் பங்கு

சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் பிம்பம் என்பது அதன் ஜிடிபி (GDP) வளர்ச்சியை வைத்து மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை; அந்த நாடு தனது குடிமக்களுக்கு எவ்வளவு தூரம் கருத்துச் சுதந்திரத்தையும், போராட்ட உரிமையையும் வழங்குகிறது என்பதையும் பொறுத்தே அமைகிறது. ஒரு பெரும் தொழில்நுட்பக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சியினர் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வது, இந்தியாவின் ஜனநாயகம் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதையே காட்டுகிறது. பிரச்சனைகளை மறைத்து ஒரு ‘பளபளப்பான’ பிம்பத்தை உருவாக்குவதை விட, குறைகளைச் சுட்டிக்காட்டி அதைச் சரிசெய்யக் கோருவதே தேச நலனுக்கு உகந்தது.

பாஜகவின் அராஜகம்:

சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள இந்தப் போராட்டத்தின் நியாயமான பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்த இளைஞர்களின் ஆதங்கத்தை ஒரு ஆக்கப்பூர்வமான விவாதமாக மாற்ற முனைவதற்குப் பதிலாக, ஆளுங்கட்சியினர் தடியடி மற்றும் அராஜகத்தின் மூலம் அதை ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. அதிகார பலத்தைக் கொண்டு மாற்றுக்கருத்துடையோரின் குரலை நசுக்கப் பார்ப்பது, இந்தப் போராட்டத்தின் வீரியத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அமைதி வழியில் தங்கள் உரிமையைக் கேட்கும் போராட்டக்காரர்கள் மீது ஏவப்படும் இத்தகைய வன்முறைகள், ஒரு முதிர்ந்த அரசியலுக்கு அழகல்ல என்பதோடு, இது அரசின் பலவீனத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அரசின் கவனத்திற்கு…

செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அந்த முன்னேற்றம் நாட்டின் கடைக்கோடி மனிதனின் கவலைகளைத் தீர்க்கும் வகையில் அமைய வேண்டும். இளைஞர் காங்கிரஸின் இந்தப் போராட்டம், அதிவேகமாக வளரும் தொழில்நுட்பத்திற்கும், அதே வேகத்தில் தேக்கமடைந்து வரும் வேலைவாய்ப்புச் சந்தைக்கும் இடையே உள்ள இடைவெளியை அரசுக்கு நினைவூட்டுகிறது.

பிம்பத்தைச் சிதைப்பதாகக் குற்றம் சாட்டுவதை விட, போராட்டக்காரர்களின் சட்டையை உரித்த அந்த வறுமைக்கும், விரக்திக்கும் தீர்வு காண்பதே ஒரு பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!