குண்டாவதைக் குறைக்க வந்த மருந்து…குடிப்பழக்கத்தையும் ஒழிக்கும் ‘ஒசெம்பிக்’ மாயாஜாலம்!
அண்மைக் காலமாக இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. உடல் பருமானால் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, உடல் எடையைக் குறைக்க பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என பலரும் முயற்சித்து வருகின்றனர். இதற்காகத் தீவிரமாக டயட் இருந்தும், உடற்பயிற்சி செய்தும் உடல் எடையைக் குறைத்து வருகின்றனர். ஆனால், இதற்கு நீண்ட மாதங்கள் எடுத்துக் கொள்ளும். சட்டென எல்லாம் உடல் எடையைக் குறைத்துக் கொள்ள முடியாது. இதற்காகச் சீரான உடற்பயிற்சியும், டயட்டும் முக்கியமானது.
அந்த வகையில், உடல் எடையைக் குறைப்பதற்காகத் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருப்பது உடல் எடையைக் குறைக்கப் பலரால் பயன்படுத்தும் ‘ஒசெம்பிக்’ (Ozempic) போன்ற மருந்துகள்தான். ஆம், இந்த மருந்தை எடுத்துக் கொள்பவர்கள் மத்தியில் ஒரு விசித்திரமான மாற்றம் தெரிவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொள்பவர்களுக்கு மது அருந்தும் ஆசையே மெல்ல மெல்ல குறைந்து வருகிறதாம்!

மூளையில் நடக்கும் அந்த மேஜிக்!
உடல் எடையைக் குறைக்கப் போடப்படும் இந்த ஊசி, எப்படி மதுப் பழக்கத்தைக் குறைக்கிறது? இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான மருத்துவக் காரணம் இருக்கிறது. பொதுவாக நாம் மது அருந்தும்போதோ அல்லது பிடித்த உணவைச் சாப்பிடும்போதோ நம் மூளையில் ‘டோபமைன்’ (Dopamine) என்ற வேதிப்பொருள் சுரக்கும். இதுதான் நமக்கு ஒருவித மகிழ்ச்சியையும், “இன்னும் கொஞ்சம் வேணும்” என்கிற ஆசையையும் தூண்டும்.
இந்த ஒசெம்பிக் மருந்துகள் மூளையில் உள்ள அந்த ‘ரிவார்டு’ (Reward System) பகுதியைச் சற்றே கட்டுப்படுத்துகின்றன. இதனால் மது அருந்தினாலும் அந்தப் பழைய உற்சாகம் கிடைப்பதில்லை. “ஏன் தேவையில்லாமல் குடிக்க வேண்டும்?” என்கிற சலிப்பு தானாகவே வந்துவிடுகிறது.
ஏற்கனவே உள்ள மருந்துகள் என்ன செய்கின்றன?
மதுப் பழக்கத்தை நிறுத்த ஏற்கனவே அமெரிக்காவின் எஃப்.டி.ஏ (FDA) மூன்று மருந்துகளை அங்கீகரித்துள்ளது. அவை:
-
டைசல்ஃபிராம் (Disulfiram): இதைப் போட்டுக் கொண்டு குடித்தால் வாந்தி, தலைவலி என உடம்பை ஒரு வழி பண்ணிவிடும். பயத்திலேயே குடிப்பதை நிறுத்திவிடுவார்கள்.
-
நால்ட்ரெக்ஸோன் (Naltrexone): இது போதை தரும் சுகத்தை மூளை உணர விடாமல் தடுக்கும்.
-
அகாம்பிரோசேட் (Acamprosate): குடிப்பதை நிறுத்திய பின் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
ஆனால், இந்த மருந்துகளை விட ‘ஒசெம்பிக்’ போன்ற புதிய வகை மருந்துகள், இயல்பாகவே குடிக்கும் ஆசையைக் கிள்ளியெறிவதால் மக்கள் இதன் பக்கம் அதிகம் திரும்புகின்றனர்.
எச்சரிக்கை அவசியம்!
எடை குறைகிறது, குடிப்பழக்கம் போகிறது என்பதற்காக யாராவது சொல்லக் கேட்டு நீங்களாகவே இந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. இது அடிப்படையில் சர்க்கரை நோயாளிகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சில பக்கவிளைவுகளும் உண்டு என்பதால், முறையான மருத்துவ ஆலோசனை இன்றி ஊசி போட்டுக் கொள்வது ஆபத்தானது.
எது எப்படியோ, உடல் எடையைக் குறைக்க வந்த ஒரு மருந்து, பல குடும்பங்களைச் சீரழிக்கும் மதுப் பழக்கத்திற்கும் மருந்தாக அமைந்தால் அது மருத்துவ உலகின் மிகப்பெரிய வரப்பிரசாதம்தான்!
டாக்டர். செந்தில் வசந்த்


