சக்தி திருமகன்- விமர்சனம்!

சக்தி திருமகன்- விமர்சனம்!

ந்த சக்தி திருமகன் வெறும் பொழுதுபோக்கு சினிமா அல்ல:சிந்தனையைத் தூண்டும் திரைப்படம்; சிலரின் நலனுக்காக அமைக்கப்பட்ட அரசியல் அமைப்பை கேள்வி கேட்கும் சக்தி வாய்ந்த செய்தியை முன் வைக்கும் திரைப்படம். அடிக்கடி நிகழும் பால் விலை உயர்வு முதல் பெரிய நிதி மோசடிகள் வரை, அனைத்திற்குப் பின்னால் உள்ள ரகசியங்களை ஒரு பரபரப்பான கதை மூலம் வெளிப்படுத்தி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சினிமா .! அதிலும் கெக்கெபிக்கெ காமெடி, டூயட் மாதிரியான இழுவைகள் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் போவது ப்ளஸ். அதே சமயம் முதல் பாகத்தில் பரபரவென்று போன திரைக்கதை இண்டர்வெல்லுக்கு பின் பழி வாங்கும் போக்கிற்கு மாறி ஆயாசத்தை ஏற்படுத்தி விடுகிறது..!

அதாவது பிரபல தொழிலதிபராகவும், அரசியல் ஆலோசகராகவும் இருக்கும் அரசியல் சாணக்கியர் அபயங்கர் (கண்ணன்) வீட்டில் வேலைக்காரராக வளர்ந்ததால், அவர் வீட்டிற்குச் சின்ன சின்ன வேலைகளையும் செய்தபடி செகரட்டரியேட்டில் ஆல் இன் ஆல் தரகராக இருக்கிறார் கிட்டு (விஜய் ஆண்டனி). மினிஸ்டர்கள், அதிகாரிகள் தொடங்கி, அரசு அலுவலகங்களில் இருக்கும் அடித்தட்டு ஊழியர்கள் வரை, சகல கட்டமைப்பையும் அறிந்த கிட்டு, லஞ்சம், கமிஷன் போன்றவற்றை வாங்கிக்கொண்டு தேவையானவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுக்கிறார். சில எளியவர்களுக்குப் பணம் வாங்காமல் உதவியும் செய்கிறார். இந்நிலையில், 200 கோடி ரூபாய் கமிஷன் பணத்திற்காக, மிகப்பெரிய அரசியல் மற்றும் பண விளையாட்டை விளையாடுகிறார் கிட்டு. இதில் மறைமுகமாகப் பாதிக்கப்படுகிறார் அபயங்கர். இதனால் தேசிய, மாநில அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என மொத்த அதிகாரமும் கிட்டுவைத் திரும்பிப் பார்க்கிறது. அபயங்கருக்கும் எதிரியாகிறார். இதிலிருந்து கிட்டு மீண்டாரா, அவரின் பின்னணி என்ன, இந்த அரசியல் தரகர் வேலைகளை எதற்குச் செய்கிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருப்பதுதான்சக்தித் திருமகன்’ படக் கதை.

நாயகனாக விஜய் ஆண்டனி வழக்கம் போல் டைரக்டர் சொன்னதை அப்படியே ரிப்பீட் செய்துள்ளார். வாகை சந்திரசேகர் கேரக்டர் லவ்லி. வில்லனாக நடித்திருக்கும் சுனில் கிர்பலானி, சமகால அரசியல் நிகழ்வுகளையும், அதன் பின்னணியில் இருக்கும் வியாபாரத்தையும் பிரதிபலிக்கும் ரோலில் நடித்திருக்கிறார். அவரது திமிரான பேச்சும், உடல் மொழியும் அடடே சொல்ல வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் திருப்தி ரவீந்திராவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். செல் முருகன், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத், ரியா ஜித்து, வாகை சந்திரசேகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரமும், நடிப்பும் நிறைவு.

கேமராமேன் ஷெல்லி ஆர்.கேலிஸ்ட் ஒளிப்பதிவு பிரமாதம். விஜய் ஆண்டனியின் பின்னணி இசை பல இடங்களில் மாஸ் ஏற்றுகிறது. தேவையான இடங்களில் படபடப்பையும் கூட்டுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் அருண் பிரபு, சமகால அரசியல் மற்றும் மறைமுக அரசியல் வியாபாரத்தை அப்பட்டமாக சொல்லியிருக்கிறார். வசனங்கள், தமிழகம் மற்றும் இந்திய அரசியலை காட்சிப்படுத்திய விதம், மத்திய அமைச்சர்கள் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என அனைத்திலும் பல்வேறு குறியீடுகளை வைத்து உண்மைகளை உரக்கச் சொல்லியிருக்கிறார். அதிலும் “சின்ன கல்தான் பெரிய தேரைக் கவிழ்த்து விடுகிறது,“இங்கே நல்லதயே குறுக்கு வழியில் தான் செய்ய வேண்டி இருக்கு,I am your political advisor ..not a property keeper.”,”அரசியல்ல சம்பாதிக்கிறது ஈஸி.. ஆனா சம்பாதிச்சத எல்லாம் பார்த்துகிறதுக்கு ஒரு நல்ல பினாமி கிடைக்கிறது தான் ரொம்ப கஷ்டம்,எல்லாத்துலயும் decision நான் தான் எடுக்கிறேன்.. ஆனா situation கிரியேட் பண்றது தான் யாருன்னு தெரியல

“என் வீட்ல காஃபி பவுடர் சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தவன் ,இப்போ மர்டர் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டானா?” போன்ற வசனங்கள் கைத்தட்ட தூண்டுகிறது. குறிப்பாக பகுத்தறிவு சிந்தனையுடையவராக வரும் வாகை சந்திரசேகர் கேரக்டர் பேசும் வசனங்கள் பலே சொல்ல வைக்கிறது.

மைனஸ் என்று பார்த்தால் ஆரம்பத்தில் சொன்னது போல் இடைவேளைக்கு பிறகான படத்தைதான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் சம்பவங்கள் மூலமாக நகர்ந்த கதை, இரண்டாம் பாதியில் வெறுமனே பெரிய பெரிய சமாச்சாரங்களை பெரிய வசனங்கள் மூலமாக கடத்துகிறார்கள். அதிலும் கிரிப்டோ கரன்சி, பண பரிமாற்றம் , ஹேக் செய்து கணக்குகளை முடக்குவது போன்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் புரியவில்லை. மேலும் பல வசனங்கள் ஆங்கிலத்திலேயே வருவதால் அந்த காட்சிகளும் என்ன சொல்ல வருகிறது என்பதில் தெளிவில்லை.

இதை எல்லாம் தாண்டி அரசியல் புரோக்கர் என்ற புதுக் கதைக்களத்தை டைரக்டர் அருண் பிரபு கையாண்டிருக்கும் விதத்திற்காகவும், கிடைத்த கேரக்டரின் வலுவை உணர்ந்து விஜய் ஆண்டனி நடித்திருக்கும் பாணிக்காக மட்டுமின்றி அரசு மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க வேண்டும் என்று உரத்த குரலில் சொல்லி இருப்பதற்காகவே காண வேண்டிய திரைப்படமிது

மார்க் 3.5/5

error: Content is protected !!