சீதக்காதி -திரை விமர்சனம்!

சீதக்காதி -திரை விமர்சனம்!

தற்போது கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஒரு சினிமா என்ற படைப்பை வியாபார பொருளாக்கி  வீணாக்கும் போக்கு வருவதற்கு முன்னால் நம்மில் பலரின்  வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டும்தான். அதிலும் நம் நாடு சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், அத்தகைய வேட்கையை தூண்டுவதில் நாடகத்தின் பங்கே அதிகமாக இருந்தது. ஆனால் பின்னாளில் ஆரம்ப வரிகளில் சொன்ன சினிமா என்னும் படைப்பு வந்து இந்த நாடக கலையும் கலைஞர்களையும் அழித்து ஒழிந்து போக  வைத்து விட்டது என்று சொல்வது மிகையல்ல.  இப்படியான  சூழ்நிலை யில் கலைக்கும் கலைஞனுக்கும் ஒரு போதும் அழிவே கிடையாது. இந்த அழுத்தமான ஒற்றை வரி சாராம்சத்தை நாம் எதிர்பாராத ஒரு கமர்சியல் கதையுடன் கூடிய படமாய் நம் முன் கண் முன் காட்டியிருக்கிறார் பாலாஜி தரணிதரன்.

அதாவது அய்யா ஆதிமூலம் எனும் பெரும் நாடக கலைஞன் தன் நடிப்பால் அய்யா எனும் மரியாதையை சம்பாதித்தவன் நாடக கலையை கண்முன் கண்டு வறுமையில் உழண்டு நடிக்கும் போதே இறக்கிறார்.  செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பதை பொய்த்து ஒரு மகா கலைஞன் செத்தும் கொடுப்பதும் தான் இந்தப்படம்.

ஒரு படம் என்ன செய்ய வேண்டும். ஒரு கதை சொல்ல வேண்டும். அந்தச் கதைக்கான சூழலை நம்ப வைக்க வேண்டும், அதற்குள் ரசிகனாகிய உங்களை இணக்க வேண்டும், இடையிடையே சிரிக்க, குதூகலிக்க வைக்க வேண்டும். அதையெலாம் தாண்டி நம் அறிவை உரசி யோசிக்க வைக்கும் போது அது நல்ல படமாகி விடுகிறது. இத்தனையையும் ஒரு கமர்ஷியல் படத்திற்குள் கோர்வையான திரைக்தையாக்கி தந்திருக்கிறார் பாலாஜி.

முதலில் இப்படி ஒரு கதையை எடுக்க துணிந்த பாலாஜிக்கும், இதில் நடிக்க அதிலும் லேண்ட் மார்க்கான 25வது படம் என்னும் இடம் தந்த விஜய் சேதுபதிக்கும் ஸ்பெஷல் பூங்கொத்து.

டைட்டில் போட்டத்தில் இருந்து முதல் இருபது நிமிடங்களும் அய்யா ஆதிமூலத்தில் ஆளுமை தான். அந்த ஆளுமையின் ஆன்மா தான் பிம்பாதி கதைக்கு அச்சாரம். அதை உணர்ந்து தன்னால் முடிந்த அத்தனை உழைப்யையும் தந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேருமே பெரும் நடிப்பைத் தந்திருக்கிறார்கள் .

அறிமுக ஹீரோ ராஜ்குமார், பின்பாதியில் தயாரிப்பாளர் நடிகராக வரும் வைபவ் அண்ணன் ஆகிய இருவரும் அட்டகாச நடிப்பை தந்திருக்கிறார்கள். அவர்களின் நடிப்புதான் ஆதிமூலத்தின் இருப்பை உறுதி செய்கிறது.

சினிமாவுக்காக எடுக்கப்படும் காட்சிகள் எந்தப் படத்திலும் இத்தனை குதூகலமாய் வந்ததில்லை. தியேட்டர் சிரிப்பலையில் களேபரம் ஆகிறது. கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம் கூட்டியிருக்கிறது. குறிப்பாக இந்த இசைதான் வெற்று ஃபிரேம்களில் ஆதிமூலத்தை பதிவு செய்கிறது.

ஒளிப்பதிவு கச்சிதம். இப்படியான ஒரு சிந்தனையே ஆச்சர்யப்படுத்துகிறது. கூடவே இதில் கலை பற்றியும் அதன் வியாபாரம் பற்றியும் ஓப்பனாக பேசியிருப்பதும் அருமை. பாலாஜி தரணிதரன் மிகப்பெரும் ஆளுமையாவார்.

ஆனாலும் இறுதியாய் சில நெருடல்கள். ஆரம்ப ஆதிமுலத்தின் காட்சிகள் தான் பின்பாதியின் பலம் அதை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம். குருவி தலையில் பனங்காய் என்பார் கள் இங்கே மலையை தூக்கி வைத்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி ஆதிமூலத்தின் பலம் தாங்காமல தடுமாறுகிறார். கிழக்குரல் நடுக்கம் வயோதிகம் என இந்தியன் கமல் ஞாபகத்தில் குறுக்கிடுகிறார். கிளைமாக்ஸ் கோர்ட் காட்சி சிறு பிள்ளை விளையாட்டு போல் அம்மெச்சூர் தனமாய் இருப்பது படத்தின் மீது பாதிப்பு. அதே சமயம் இவையனைத்தும் கடந்து படம் பல இடங்களில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.

தமிழில் இப்படியான படம் பார்ப்பது மகிழ்வை தருகிறது.

சீதக்காதி பார்த்தே தீரவேண்டிய படம்.

செத்தும் கொடுக்கும் பொக்கிஷம் இந்த சீதக்காதி.

மார்க் 3.5 / 5

error: Content is protected !!