சங்கு சக்கரம் – விமர்சனம் -ஹா.ஹா..ஹா!

சங்கு சக்கரம் – விமர்சனம் -ஹா.ஹா..ஹா!

தற்போது சினிமா, டி.வி.க்களில் மட்டுமே தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் பேய் உண்மையில் இருக்கா இல்லையா? யாராச்சும் பாத்து இருக்காங்களா? பேய் எப்படி இருக்கும்? பேய் என்ன செய்யும்? இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் இன்று வரை முழுமையான பதில் கிடையாது. அதே சமயம் “நான் நேத்து கடவுளை பார்த்தேன் !”, என்று யாரிடமாவது சொன்னால் “போதையில் உளறாதடா!!” என்று கேலி செய்வார்கள். அதுவே “நான் பேயை பார்த்தேன்..’ என்றால் பீதியுடன் பேதியாகும் ப்ரண்ட்ஸ் அதிகம் என்றால் மிகையல்ல. இதனால்தான் ஹாலிவுட் தொடங்கி நம்ம கோலிவுட்டிலும் அம்புட்டு ஏன்.. நம்ம சின்னத்திரையில் வரும் பல்வேறு சேனல்களிலும் எக்கச்சக்கமான பேய்கள் பல்வேறு அலப்பறைகள் செய்து தங்கள் புழைப்பை பார்த்து நம் நேரத்தையும், வருவாயையும் சுரண்டிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அண்மையில் வெளியாகி நம் முகத்தில் புன்னகையை வரவைக்கும் பேய் கதைதான் ’ சங்கு சக்கரம்’

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய திரைப்படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனமும், கே.சதீஷின் சினிமாவாலா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள்தான் மெயின் கேரக்டர்கள். மோனிகா, தீபா, ஜெனிபர், நிஷேஷ், தேஜோ, ஆதித்யா, அஜெஷ், ஆதர்ஷ், இவர்களுடன் ‘புன்னகைப் பூ’ கீதா, திலீப் சுப்பராயன், பிரதீப், ஜெர்மி ரோஸ்கி, ராக்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பல வருஷங்களாக மூடிக் கிடக்கும் ஒரு பங்களாவில் ஒரு தாய் பேயும், மகள் பேயும் ’வாழ்ந்து” வருகிறார்கள். அதை தெரியாமல பல்வேறு காரணங்களுக்காக அந்த பூத் பங்களாவுக்குள் வந்து சேர்ந்த சுட்டிக் குழந்தைகள் சிலருக்கும், மேற்படி பேய்களுக்கும் நடக்கும் அன்புப் போராட்டம்தான் ‘சங்கு சக்கரம்’படத்தின் திரைக்கதை. பேய்ப் படங்கள் எப்படி இருக்குமோ அதைதான் செய்திருக்கிறார் இயக்குநர் மாரிசன். ஆனால் தமிழில் பேய்க்கு பயப்படாத குழந்தைகளையும் , அந்த பேய்களுக்குக் கொடுக்கப்படும் பில்டப்பும், தாய், மகள் இடையேயான பாசப் போராட்டமும், பேய்கள் கடைசியாக குழந்தைகளைக் காப்பாற்ற துடிப்பதுமாக ரொம்ப ஜாலியாக படத்தை தந்திருக்கிறார்கள்

குழந்தைகள் யாருமே நடிக்க வில்லை. இயல்பாக வந்து, தன்னிச்சையாக பேசி,, அடேங்கப்பா சொல்ல வைக்கிறார்கள். அதே சமயம் அந்த மகள் பேயாக நடித்த குழந்தை பேபி மோனிகா தனி அப்ளாஸ் வாங்குகிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட மாஸ்டராக எக்கச் சக்கமான படங்ளில் பணியாற்றி வாங்கிய ‘வாவ்’ என்ற ஒற்றை சொல்லை.இந்த ஒரு படத்தில் நடித்து வாங்கி விட்டார்.

இப்போதெல்லாம் எந்த படத்திலும் லாஜிக் ஒட்டுவதில்லை என்ற நிலையில் இது போன்ற பேய்ப் படங்களில் ’அதை’ எதிர் பார்ப்பது ரொம்ப தப்பு என்று குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் உணரும் விதத்தில்,வீட்டிலுள்ள குழந்தை குட்டீஸ்களோடு தியேட்டர் போய் பார்த்து மகிழத்தக்க திரைப்படம் ‘சங்கு சக்கரம்’.

மார்க் 5 / 3