இந்தியாவில் 85 சதவீதம் கரண்ட் வசதி வந்துடுச்சு1 – உலக வங்கி பாராட்டு!

இந்தியாவில் 85 சதவீதம் கரண்ட் வசதி வந்துடுச்சு1 – உலக வங்கி  பாராட்டு!

கடந்த 2015-ம் ஆண்டில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையின் போது ஆயிரம் நாட்களுக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களும் மின் இணைப்பு பெறும் என பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து கடந்த 28-ம் தேதி இந்த இலக்கை அடைந்து விட்டதாகவும், நாட்டின் அனைத்து கிராமங்களும் மின் இணைப்பை பெற்றுவிட்டதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.உடனே இது பாஜக அரசின் சாதனை என அக்கட்சியினர் கொண்டாடி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான பிரதமரின் பதிவுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. “97 சதவிகித கிராமங்கள் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே மின்சார வசதியை பெற்றுவிட்டது. வெறும் 3 சதவிதம் கிராமங்கள் மட்டுமே கடந்த மூன்றாண்டுகளில் மின் இணைப்பை பெற்றுள்ளது” என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா வின் 85 சதவீத மக்களுக்கு மின் விநியோக வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசு மின்மயமாக்கல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதே இதற்கு காரணம் என உலக வங்கி பாராட்டியுள்ளது.

உலக வங்கி இந்த வாரம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் விவரப்படி ‘‘கடந்த 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை இந்தியாவின் ஒவ்வொரு வருடமும் சுமார் 3 கோடி மக்களுக்கு மின் விநியோக வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதன் மூலம் தற்போது இந்தியாவின் 85 சதவீத மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்க வசதிகள் உள்ளன’’ என தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் ஆய்வறிக்கையை தயாரித்த தலைமை எரிசக்தி பொருளாதார நிபுணர் விவியன் பாஸ்டர் இது குறித்து விவரித்த போது, “இந்தியாவின் 125 கோடி மக்கள் தொகையில் மீதமுள்ள 15 சதவீதம் பேருக்கு மின் விநியோகம் வழங்குவதில் பல சவால்கள் உள்ளன. ஒதுக்குப்புறமான, சாலை வசதி இல்லாத கடினமான இடங்களில் வாழும் மக்களுக்கு மின் விநியோகம் வழங்குவது எளிதான காரியம் இல்லை. இருப்பினும் இந்திய அரசால் நிர்ணயித்தப்படி வரும் 2030ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் மின் விநியோக வசதி செய்து தர முடியும்.இந்த விஷயத்தில் மற்ற நாடுகளை இந்தியா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

வருடத்தில் 3 கோடி மக்களுக்கு மின் விநியோக வசதி செய்து தருவது சாதாரண விஷயமல்ல. இந்தியா இதில் தனி சிறப்புடன் விளங்குகிறது. இருப்பினும் மின்மயமாக்கல் பணிகளில் இந்தியா வேகமாக செயல்படவில்லை. வங்க தேசம் மற்றும் கென்யாவில் இதை விட வேகமாக மின்மயமாக்க பணிகள் நடைபெற்றன. தற்போது இந்தியா மின்மயமாக்கல் திட்டத்தின் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியாவின் முயற்சிகள் தொடர்ந்தால் வரும் 2020ம் ஆண்டுக்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு மின்சார வசதி கிடைக்கும்’ என விவியன் பாஸ்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் விநியோகம் கிடைத்து விட்டது என பிரதமர் மோடி அறிவித்த நிலையில் உலக வங்கியின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில் இந்திய அரசு கூறியதை விட அதிகமான எண்ணிக்கையில் மக்கள் பலனடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலக வங்கி நடத்திய ஆய்வில் வீடு விடாக சென்று தகவல் சேகரிக்கப்பட்டது. அந்த வகையில் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களில் வாழும் மக்களையும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்தியதால் ஆய்வரிக்கையில் எண்ணிக்கை உயர்ந்ததற்கு காரணம் என விவியன் பாஸ்டர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Posts