ரன் பேபி ரன் – விமர்சனம்!

ரன் பேபி ரன் – விமர்சனம்!

பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள் இருக்கிறது. இவைகள் ஒவ்வொன்றுக்கும் மெனகெடல் கொஞ்சம் அதிகம் தேவை.. அதிலும் கிரைம் பாணியிலான சினிமா பண்ண அப்படத்தை உருவாக்கும் ஒட்டு மொத்த டீமும் அதிக சிரத்தை எடுத்தால்தான் ரசிகனைக் கவர முடியும்.. அதை எல்லாம் புரியாமல் அல்லது சட்டை செய்யாமல் நானும் ஆக்டர்தான் என்ற கோஷத்தில் ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.பாலாஜி வழங்கி இருக்கும் படம்தான் ‘ரன் பேபி ரன்’

அதாவது மேரேஜ் பிக்ஸ் ஆன பேங்க் ஒன்றில் ஒர்க் செய்யும் ஆர். ஜே பாலாஜியின் காரில், எங்கிருந்தோ ஓடி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை கொல்ல வரும் நபர்களிடம் இருந்து காத்துக்கொள்ள ஏறி விடுகிறாள். பாலாஜியும் ஐஸ்வர்யாவை தன் வீட்டில் தங்க வைக்கிறார். எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யா பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பிணத்தை டிஸ்போஸ் செய்ய ஒரு பெட்டியில் பிணத்தை அடைத்து செஞ்சியை நோக்கி பயணம் செய்கிறார். போலீஸ் கெடுபிடியால் பெட்டியை பயணம் செய்த வேனில் விட்டு செல்கிறார். வேன் டிரைவர் பெட்டியை திறந்து பார்த்து பிணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பிணத்தை எரித்து விடுகிறார். போலீஸ் நெருங்கி வரும் போது டிரைவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது, கொலை செய்யபட்ட பெண் யார் என தேடும் போது மெடிக்கல் காலேஜ்களில் நடக்கும் பெரியளவிலான ஒரு குற்றப்பின்னணியை கண்டறிகிறார் என்ற ரேஞ்சில் போகிறது கதை.

சிரிப்பு நடிகராகவே இதுவரை நமக்கு பழக்கமாகி வந்த பாலாஜி செய்வதறியாது குழம்புவது, பயப்படுவது, அதிர்ச்சியடைவது, தற்கொலைக்கு முயல்வது என தனக்கு தெரியாத பாதையில் பயணிக்கும் பாவம் அப்பட்டமாக தெரிகிறது.. பெரும்பாலான காட்சிகளை வெறித்த பார்வையால் மட்டுமே சமாளிக்க முயலும் அவர் ரோல் நாடக பாணியிலேயே இருப்பதால் எடுபடவே இல்லை. குறைந்த காட்சிகளே வந்து பிணமாகி விடும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி, இஷா தல்வார், ராதிகா, ஜோ மல்லூரி, ஸ்மிருதி வெங்கட், பகவதி பெருமாள், ஹரீஷ் பேரடி, விவேக் பிரசன்னா, ராதிகா சரத்குமார், ஜார்ஜ் மரியன் எனப் பல நடிகர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

தீம் பாடல் தவிர பெரிதாக பாடல்கள் எதுவும் இல்லை என்றாலும் பின்னணி இசையில் கலக்கும் சாம்.சி.எஸ். இந்த ரன் பேபி ரன்னில் சொதப்பிட்டார் என்று சொல்லியே ஆக வேண்டும்.

மோலிவுட்டைச் சேர்ந்த டைரக்டர் ஜியன் கிருஷ்ணகுமார், முழு திரில்லர் திரைக்கதையை கையாண்ட விதத்தில் கொஞ்சம் கூட அக்கறைக் காட்டவில்லை. படம் முழுக்க லாஜிக் இல்லாத காட்சிகள் ஓடிடிக்கு பழக்கமான ரசிகனுக்கு ஒட்டவே இல்லை.. நான் பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்த மார்க் போடும் ஒரு டீமில் இப்போது இருக்கும் ஒரு தம்பி ‘தன்னை ஒரு சாமானியன் என அடிக்கடி கூறிக்கொள்ளும் பாலாஜி, இரண்டாம் பாதியில் மட்டும் எப்படி புலனாய்வு புலியாகிறார், காவல்துறை ஏன் இவ்வளவு சுமாரான ஐடியாக்களை மட்டுமே யோசிக்கிறது, ஒரு காவலரை ஒரே நாளில் பணி மாற்றம் செய்யும் அளவுக்குப் பலம் பொருந்திய வில்லன் க்ரூப், ஏன் சாதாரண பாலாஜியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது எனப் படம் முழுவதுமே கேள்விகள் எழுந்துகிட்டே இருக்குதே!- உங்களுக்குமா சார்? -என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை

மொத்தத்தில் ரன் பேபி ரன் – ஓடவே மாட்டீயா?

மார்க் 2.25.5

error: Content is protected !!