மர்மமும் சென்டிமென்ட்டும் கலந்த ‘ரூம் பாய்’: இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு!

மர்மமும் சென்டிமென்ட்டும் கலந்த ‘ரூம் பாய்’: இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு!

திரைப்படக் கல்லூரி மாணவரான ஜெகன் ராயன், சுமார் 25 ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இயக்குநராகக் கால்பதிக்கும் திரைப்படம் “ரூம் பாய்”. ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரின் மகனான சி.நிகில் நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏலகிரியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் பாயாகப் பணிபுரியும் நாயகன், அங்கு நடக்கும் மர்ம மரணம் மற்றும் மாயமான ஒரு கண்காணிப்பாளர் எனச் சங்கிலித் தொடர் சம்பவங்களுக்கு இடையே எப்படிச் சிக்கிக்கொள்கிறான் என்பதே இப்படத்தின் கதைக்கருவாகும்.

தயாரிப்பாளர்களைக் காக்கப் போராடும் சங்கம்:

இவ்விழாவில் கலந்துகொண்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழ் குமரன், சின்ன படங்களுக்குத் திரையரங்குகளில் முன்னுரிமை கிடைப்பதற்கான புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், “ஆந்திராவில் நடிகர்கள் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் அந்த நிலைமை இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர வேறு யாரும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், 70 சதவீதச் சம்பளம் ஹீரோக்களுக்கே செல்வதால் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலநிலை குறித்தும் அவர் சாடினார். இப்படத்தின் தலைப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஆதரவு அளித்ததற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

கலைப்புலி தாணுவின் வாழ்த்து:

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில், “தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார், அந்த உழைப்பு திரையில் சிறப்பாகத் தெரிகிறது” என்று பாராட்டினார். பாடல்களும் சண்டைக்காட்சிகளும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சங்கச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “இனி பெரிய ஹீரோக்களாக இருந்தாலும் அட்வான்ஸ் வாங்கினால் தயாரிப்பாளருக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற முக்கிய முடிவு சங்கக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது” என்று திரையுலகச் சிக்கல்களைச் சீரமைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.

25 ஆண்டுகாலக் கனவு:

இயக்குநர் ஜெகன் ராயன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகையில், “சினிமா ஒரு கடல், அதில் மூழ்கிப் போகிறவர்கள் பலர். ஆனால் 25 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு இன்று எனது கனவு நனவாகியுள்ளது. தனது நிலத்தை அடமானம் வைத்துப் படம் எடுக்க வந்த என்னை நம்பி, தனது மகனை வைத்துப் படம் எடுக்கச் சொன்னதோடு, முழு சுதந்திரம் அளித்த தயாரிப்பாளருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

2004-ல் சவுண்ட் இன்ஜினியரிங்கிற்காக மாநில விருது பெற்ற இவர், தற்போது இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். குடும்ப சென்டிமென்ட் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த இந்தப் பயணம் நிச்சயம் வெற்றி பெறும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.