ராக்கெட் டிரைவர் – விமர்சனம்!
கற்பனைக்கு அப்பால் அதாவது இயல்புக்கு மாறான உலகைக் காட்டும்போது, அவற்றில் ஆக்ஷன், அட்வெஞ்சர், காமெடி, ரொமான்ஸ், த்ரில்லர் வகைமையைக் கலந்து வரும் பல்வேறு திரைப்படங்க்கள் புதுவித அனுபவத்தைத் தரும். மேற்குலகில் இருந்து வரும் இந்த வகைமைப் படைப்புகள் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெறுவதுண்டு.
அப்போதெல்லாம், இது போன்ற கற்பனைகள் தமிழிலேயே உதிக்க எது தடையாக இருக்கிறது என்ற கேள்வியே அதிகமாக முன்வைக்கப்படும். சமீபகாலமாக அந்த தடை உடைந்திருக்கிறது; தமிழிலும் தரமான பேண்டஸி கதை திரைப்படங்கள் வெளியாகின்றன.
அந்த வகையில் நம் நாட்டின் ரியல் ராக்கெட் ராஜாவான அப்துல் கலாமை ஒரு கேரக்டராக இணைத்து அறிவியல் மற்றும் தத்துவத்தை கோர்த்து ஒரு புது முயற்சியை முயன்றுள்ளார் டைரக்டர் ஸ்ரீராம். அப்படி அப்துல் கலாமை சிறுவயது இளைஞராக காட்டுவதாக கதை அமைத்துவிட்டு அவரை ஹீரோ விஷ்வத் பல இடங்களில் திட்டித் தீர்ப்பதை பார்த்தால் கடுப்புதான் வருகிறது .
ஆட்டோ டிரைவர் பிரபா (விஸ்வத்) தனியாக சாலையில் ஆட்டோ ஓட்டி செல்லும்போது ரோட்டோரத்தில் அப்பாவி சிறுவன் ஒருவன் நிற்கிறான். அவன் மீது பரிதாபப்பட்டு ஓசியில் அவன் செல்லும் இடமான பல்கலைக் கழகத்திற்கு அழைத்து செல்கிறான். அங்கு சென்ற பிறகு பல்கலைக்கழகத்தில் இல்லாத ஒரு அதிகாரி பெயரைச் சொல்லி அவரைப் பார்க்க வேண்டுமென கேட்கிறான். “உன் பெயர் என்ன!” என்று அங்கிருக்கும் நபர் கேட்க அப்துல் கலாம் என்கிறான். அதைக் கேட்டவுடன் பிரபா அதிர்ச்சி அடைகிறான். டைம் லைன் மிஷின் மூலம் மறைந்த அப்துல் கலாமே இளம் வயதில் வந்ததாக காட்சிகள் நகர்கிறது அதன் பிறகு நடக்கும் கதைதான் இப்படம்.
பிரபா என்ற கேரக்டரில் ஹீரோவாக வரும் விஷ்வத், அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார். பிரபா மீது அக்கறை காட்டும் தோழியாக நடித்திருக்கும் சுனைனாவுக்கு கொஞ்சம் கூட நடிக்க ஸ்கோப் இல்லை.இரண்டு முறை டிபன் சாப்பிடுகிறார், ஒருமுறை டீ குடிக்கிறார் அவ்வளவுதான் அவருக்கான பங்க்களிப்பு. அப்துல் கலாமாக வரும் நாகாவிஷால் அப்பாவித்தனமாக பேசி அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றாலும் வயதில் பெரியவரான காத்தாடி ராமமூர்த்தியை வாடா போடா என்று அழைப்பதெல்லாம் முகத்தை சுளிக்க வைக்கிறது
மியூசிக் டைரக்டர் கெளஷிக் கிரிஷ், கேமராமேன் ரெஜிமெல் சூர்யா தாமஸ், எடிட்டர் இனியவன் பாண்டியன் ஆகியோர் டைரக்டர் சொன்னதை வழங்கி பெயில் மார்க் வாங்காமல் தப்பித்து விடுகிறார்கள் . படத்தில் வேறு முக்கிய கதாபாத்திரம் எதுவும் இல்லை. குறைந்த பட்ஜெட் என்று சொல்லி காட்சிகளை ரொம்பவே நாடகத்தனமாக அமைத்திருக்கிறார்கள்.
ஸ்ரீராம் ஆனந்த சங்கர் படத்தை இயக்கியுள்ளார். இன்னும் கூட காட்சிகளை இன்ட்ரஸ்டிங்காக அமைத்திருக்கலாம்.
மொத்தத்தில் இந்த ராக்கெட் டிரைவர் – புஸ்.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
மார்க் 2/5