தமிழ்த்தெய்வ வணக்கமே தமிழ்த்தாய் பாடல் ஆனது!
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் பிழையொடு பாடுவதையும் எழுதுவதையும் அடிக்கடி காண்கிறோம். ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலன்றி அனைவரும் சேர்ந்து பாடுவதே பரிந்துரைக்கத்தக்கது. இந்தக் குழப்பத்தில் பதிப்பக நூல்களும் தப்பவில்லை. முதலில் இப்பாடலைத் ‘தமிழ்த்தெய்வ வணக்கம்’ என்கிறார் சுந்தரனார் (நூலில் காண்க). தாயும் தெய்வமும் ஒன்று என்பதனால் தமிழ்த்தெய்வம் தமிழ்த்தாய் ஆனதில் நமக்கு உடன்பாடே. பாடச்சொன்னால் தயங்குவதும் தடுமாறுவதும் சொல்லோ அடியோ பிறழ்வதும் இவ்வாழ்த்துப் பாவினில் எப்படியோ நிகழ்ந்தபடியுள்ளன.
வாழ்த்துச் செய்யுள்களில் நமக்கு ஐயந்திரிபற்ற கல்வி இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவர்க்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மனப்பாடமாகத் தெரிய வேண்டும். பள்ளியில் நாம் முதலில் கற்பன மொழி வாழ்த்துப் பாடலையும் நாட்டுப்பண்ணையும்தாம். பள்ளிப் பிள்ளைகள்கூட இவற்றைப் பழுதின்றிப் பாடி விடுவார்கள். வளர்ந்தவர்கள்தாம் வாழ்த்துச் செய்யுள்களை இடைமறந்து நிற்கின்றனர்.
‘மனோன்மணீயம்’ என்ற பெயர் முதற்கொண்டு இங்கே பல இடங்களில் இருவாறு ஆளப்பட்டுள்ளது. வாழ்த்துப் பாடலிலும் அடிக்குழப்பம் உண்டு. மனோன் மணீயம்’ என்பதுதான் அந்நூலின் பெயர். மனோன்மணி என்பவள் நாடகக் காப்பியத்தில் வரும் முதன்மைப் பெண். அவள் பெயரால் ஆகிய காப்பியம் மனோன்மணீயம். ணீ நெடில் வரவேண்டும். மனோன்மணியம் என்று சுந்தரனார் எந்த நூலையும் எழுதவில்லை. மனோன்மணீயம் என்ற நூலைத்தான் எழுதினார். அதனால் ‘மனோன்மணீயம்’ பெ சுந்தரனார் என்று அறியப்பட்டார். ஆனால், இங்கே சுந்தரனார் பெயரில் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ணீ நெடிலுக்கு மாற்றாக ணி குறில் வந்துள்ளது. இது எப்படி நடந்தது ? என்னைக் கேட்டால் ’பெ. சுந்தரனார் பல்கலைக்கழகம்’ என்னும் பெயரே போதுமானது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதச் சொன்னால் இங்கே யாரார்க்குப் பிழையில்லாமல் எழுதத் தெரியும் என்று நினைக்கிறீர்கள் ?
நீராரும் கடலுடுத்த / நீராருங் கடலுடுத்த – எப்படி எழுதுவது ?
நிலமடந்தைக் கெழிலொழுகும் / நிலமடந்தைக்கு எழிலொழுகும் – பிரித்து எழுதுவதா, சேர்த்து எழுதுவதா ?
கண்டமிதில் / கண்டமதில் – (இதில், அதில்) எது வரும் ?
தரித்தநறும் திலகமுமே / தரித்தநறுந் திலகமுமே – எது சரி ?
எழுதப் போகையில் இவ்விடங்களில் ஐயங்கள் வரும்.
நீராருங் கடலுடுத்த,
நிலமடந்தைக் கெழிலொழுகும்,
கண்டமிதில்,
தரித்தநறுந் திலகமுமே
ஆகியன பிழையற்ற பயன்பாடுகள்.
அவ்வாறே பாடவும் வேண்டும். வாழ்த்துதுமே என்னுமிடத்தில் சிலர் ‘வாழ்த்தும்’ என்று எழுதிவிடுவார்கள். அங்கே மிகவும் கூர்ந்து ‘வாழ்த்துதுமே’ என்று எழுதவேண்டும்.
மனோன்மணீயத்தின் புகழ்பெற்ற பதிப்பான முனைவர் சி. பாலசுப்பிரமணியன் பதிப்பித்த நூலில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
என்று அடிமாறி அச்சாகியுள்ளது. பிற்பாடு பல நூல்களில்
உள்ளவையும் பாடப்படுபவையும்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே !
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற...
என்றே உள்ளன.
‘தெக்கணம்’ என்று தொடங்கும் அடிதான் முதலில் வரலாகும், பிறகுதான் ‘தக்கசிறு’ என்ற அடிவரும்” என்று பலரும் குழப்பமடைய இப்பதிப்பே காரணமாக இருக்கலாம். சுந்தரனார் எவ்வாறு எழுதினார் என்பது தெரியவில்லை. தலைப்படியை நோக்கவேண்டும். செய்யுள்களில் இவ்வாறு அடிமாற்றி அமைந்தாலும் உரிய பொருளைக்கொள்வார்கள். அதற்கேற்ற பொருள்கோள் முறைகள் உள்ளன.
‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற அடிதான் முதலில் வரலாகும். அதனை அடுத்தே “தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே ! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற…” என்று செல்வது பொருத்தம்தான். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பொருளுணர்ந்து முழுதாய்க் கற்றுக்கொண்டு ஒப்பிக்கும்படி ஆதல் நம் அனைவர் கடனே.
இன்னொரு இன்றியமையாத செய்தியையும் நாம் அறிதல் வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள யாப்பின் வகை : பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா. அப்படியென்றால் என்ன என்றறிய யாப்பிலக்கணம் தெரியவேண்டும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பாவகையில் இது கலிப்பா. கலிப்பா இனங்களில் இது கொச்சகக் கலிப்பா. பல தாழிசை பயின்று வருவதால் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.
– கவிஞர் மகுடேசுவரன்