ரியோ ஒலிம்பிக்கில் இந்தியர்களின் மானம் காத்த மங்கை – சாக்ஷி

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியர்களின் மானம் காத்த மங்கை – சாக்ஷி

ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்த ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் புதன்கிழமை ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்து புதிய வரலாறு படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக் 2016-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும் பெற்றுள்ளார்.அதேபோல், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக, யோகேஷ்வர் தத் மற்றும் சுஷில் குமார் ஆகியோர் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்றவர்கள் ஆவர்.

olimbic aug 18

2002-ல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்‌ஷி கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தோஹாவில் 2014-ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இவரது திறமையை அங்கீகரிக்கும் மற்றும் இந்தியாவுக்கே முதன் முதலாக வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்த சாக்ஷி மாலிக்கை கவுரவிக்கும் வகையில் அரியானா அரசு ரூ. 2.5 கோடி பரிசு வழங்கி, அரசு வேலையும் வழங்கி கவுரவித்துள்ளது.

சாக்‌ஷி குறித்து தெரிந்துக் கொள்ளவேண்டிய 5 தகவல்கள்:-
1) சாக்‌ஷி மாலிக் அரியானா மாநிலம் ரோத்தாக்கில் 1992-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ம் தேதி பிறந்தவர்.
2) தன்னுடைய 12-வது வயதில் மல்யுத்தப் போட்டியை கையில் எடுத்தார், ஈஸ்வர் தாகியாவிடம் பயிற்சி பெற்றார். அவர் விளையாட்டை தன்னுடைய வாழ்க்கையாக கையில் எடுத்த போது உள்ளூர்வாசிகளிடம் இருந்து பல்வேறு எதிர்ப்புகளை எதிர்கொண்டார்.
3) கடந்த மே மாதம் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் லான் ஜங்கையும் வீழ்த்தி வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றார்.
4) 2002-ல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்‌ஷியின் முந்தைய சாதனை:- கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றதும், தோஹாவில் 2014-ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றதும் ஆகும்.
5) ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சாக்‌ஷி.