முடக்கு வாதம்: ஒரு விரிவான பார்வை (ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்)!
தற்போது, 30 முதல் 60 வயதிற்குட்பட்ட மக்களிடையே முடக்கு வாத நோய் (ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் – Rheumatoid Arthritis) அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. பலரும் இதை வெறும் எலும்புத் தேய்மானம் (Osteoarthritis) என்று தவறாகப் புரிந்துகொண்டு, சிகிச்சை எடுக்காமல் காலம் கடத்தி வருவதைக் காண முடிகிறது.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் vs. ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்
- ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (Osteoarthritis) பெரும்பாலும் முதுமையினால் ஏற்படும் எலும்புத் தேய்மான நோய் ஆகும். இதில், உடலின் எடையைத் தாங்கும் மூட்டுகளான கால் முழங்கால், கணுக்கால் போன்ற இடங்களில் வலி அதிகமாக இருக்கும்.
- ஆனால், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் (Rheumatoid Arthritis) என்பது இளையோர், மத்திய வயதினர், முதியோர் எனப் பாரபட்சமின்றி எந்த வயதினரையும் தாக்கும் ஒரு நோயாகும்.
ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்: ஒரு தன்னுடல் தாக்க நோய் (Autoimmune Disease)
நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம், நமது எலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டுகளையே தனது எதிரிகளாகப் பாவித்து, அவற்றைத் தாக்கி அழிக்க முற்படும் போது இந்த நோய் ஏற்படுகிறது. இவ்வாறு நமது நோய் எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராக வேலை செய்து அதன் மூலம் வரும் நோய்களை தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune Diseases) என்று அழைக்கிறோம்.
தன்னெதிர்ப்பு நோய்களின் பட்டியலில் ரூமட்டாய்டும் இணைகிறது. பிற தன்னெதிர்ப்பு நோய்கள் சில:
- சோரியாசிஸ் (Psoriasis)
- தன்னெதிர்ப்பு தைராய்டு நோய் (Autoimmune Thyroid Disease)
- லூபஸ் (Lupus)
- விட்டிலிகோ (Vitiligo)
- டைப் 1 நீரிழிவு நோய் (Type 1 Diabetes)
ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் அறிகுறிகள்
இந்த நோயின் தனித்தன்மை என்னவென்றால்:
- சிறு சிறு எலும்பு மூட்டுகள் இருக்கும் கை மற்றும் கால் விரல்களில் அதிக வலி இருக்கும்.
- அதிகாலையில் இந்த எலும்பு மூட்டுகள் அனைத்தும் இறுகிக்கொள்ளும். பிறகு மெல்ல மெல்ல இலகுவாகும்.
- வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு ரண வேதனையைத் தரும்.
- அன்றாட வாழ்க்கையைச் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு வேதனையைத் தரும் நோயாக இது இருக்கிறது.
மேற்கண்ட அறிகுறிகளைத் தொடர்ந்து பல நாட்கள் ஒருவர் கொண்டிருந்தால், உடனடியாக முடக்குவாத சிறப்பு நிபுணரை (Rheumatologist) சந்திப்பது மிகச் சிறந்தது.

முடக்குவாத நிபுணர் யார்?
எம்.டி. (MD) படித்து முடித்து, இது போன்ற வலி தரும் முடக்குவாத நோய்க்கு சிகிச்சை அளிப்பது பற்றியே மேலும் இரண்டு வருடம் சிறப்புப் பயிற்சி பெறுவதே டி.எம். (DM – Rheumatology) படிப்பாகும். இத்தகைய படிப்பைப் படித்து முடித்த நிபுணரை ரூமட்டாலஜிஸ்ட் (Rheumatologist) என்று அழைக்கிறோம்.
- சென்னை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி போன்ற அனைத்து நகரங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ரூமட்டாலஜிக்குத் தனிப் பிரிவு உண்டு. அங்கு சென்று சிகிச்சை பெறலாம்.
- தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் பெரும்பான்மையாக ரூமட்டாலஜிக்கு என்று தனி துறை உண்டு.
ஏன் முடக்கு வாதத்திற்கு முறையான சிகிச்சை எடுக்க வேண்டும்?
முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் என்ன ஆகும்? ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் பாதித்த ஒருவரின் எலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டின் ஜவ்வுகளை மெல்ல மெல்ல அரித்துத் தின்றுவிடும். மூட்டுகளில் இரண்டு எலும்புகளை உராய்வில் இருந்து பாதுகாக்கும் திரவ அமைப்பைச் சிதைத்து, மெல்ல மெல்ல எலும்புகள் சிதிலமடையும். கொஞ்சம் கொஞ்சமாக கை, கால், கழுத்து என்று ஒவ்வொரு மூட்டாகவும் தன் வேலையைக் காட்டி, நிரந்தரமான பாதிப்பை உருவாக்கி, கை விரல்களை வளைத்தல், ஊனமாக்கி முடமாக்குதல் வரை அனைத்தையும் செய்ய வல்லது இந்தக் கொடிய நோய்.
தாமதத்திற்கான காரணங்கள்
நம்மில் பலரும் இந்த நோய் இருப்பதை கண்டறியவதற்குள்ளேயே சில வருடங்களைக் கடத்தியிருப்பர். இதற்கான காரணம்:
- வலி நிவாரணிகள்: வலி நிவாரணிகளை உட்கொண்டாலே இந்த நோய் தரும் கடும் வலியில் இருந்து தப்பித்து விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது அறிகுறியை மட்டுமே சரி செய்யும். ஆனால், உள்ளே மூட்டுகளைப் பாதிக்கும் நோயைச் சரி செய்ததாக ஆகாது.
- ஸ்டீராய்டு மாத்திரைகள்: இன்னும் பலர் தொடர்ந்து மருந்தகங்களில் ஒரு வலி நிவாரணி + ஒரு ஸ்டீராய்டு மாத்திரை என்று தினமும் உட்கொண்டு வருவார்கள். இவர்களுக்கும் வலி மட்டுமே கேட்குமே அன்றி, நோய் முற்றி முடக்கப்போவதைத் தடுக்க இயலாது.
- மாற்று மருத்துவ முறைகள்: இன்னும் பலர் மாற்று மருத்துவ முறைகள், நவீன மருத்துவம் என்று மாறி மாறி வலம் வருவார்கள். எங்காவது இந்த முடக்கு வாதம் தரும் பிணியை நிரந்தரமாக நிறுத்தி முற்றிலுமாக ஒழித்து விடமாட்டார்களா என்ற ஏக்கமே இதற்குக் காரணம்.
ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்: குணப்படுத்த முடியுமா?
ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் மக்களுக்கு நான் கூறும் செய்தி சற்று வருத்தத்தைத் தரலாம். ஆயினும் உண்மை இதுவே: இதுவரையில் எந்த தன்னெதிர்ப்பு வியாதியையும் முழுமையாகக் குணப்படுத்தும் சிகிச்சை முறை அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால், முடக்கு வாதத்தின் பிணியைக் கட்டுப்படுத்தி, அது மூட்டுகளைச் சிதைக்கும் வேகத்தை மட்டுப்படுத்தி, மூட்டுகளை நிரந்தரமாக அழிப்பதில் இருந்து முடிந்தவரை தடுத்து, ஒருவர் முடமாவதைத் தடுக்கும் மருந்துகள் நவீன அறிவியல் மருத்துவத்தில் உண்டு. இத்தகைய மருந்துகளை டி.எம்.ஏ.ஆர்.டி.க்கள் (DMARDs – Disease Modifying Anti-Rheumatic Drugs) என்று அழைக்கிறோம். அதாவது, நோயின் போக்கை மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்ற மருந்துகள் என்று பொருள்.
முக்கிய DMARDs மருந்துகள்:
- மீத்தோட்ரெக்சேட் (Methotrexate)
- சல்ஃபாசாலசின் (Sulfasalazine)
- லெஃப்லூனமைடு (Leflunomide)
- ஹைட்ராக்சி குளோரோகுயின் (Hydroxychloroquine)
இவற்றுடன், பிணியைக் குறைக்க வலி நிவாரணிகளையும் மருத்துவர் அவ்வப்போது பரிந்துரைப்பார்.
நோயின் தன்மை: ஏற்ற இறக்கங்கள்
தன்னெதிர்ப்பு வியாதிகள் அனைத்துமே அதன் போக்கில் “வேக்சிங் அண்ட் வேனிங்” (Waxing & Waning) என்ற நிலையிலேயே மாறி மாறி இருக்கும். அதாவது, சில நாட்கள் நோய் அறிகுறி மிகவும் குறைவாக இருக்கும். நோய் சரியாகிவிட்டது என்று நம்பும் அளவுக்கு அறிகுறிகளே இல்லாமல் போய்விடும். ஆனால், மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு முன்பை விட அதிகமான வலியைத் தந்து மனவலிமையையும் உடல் வலிமையையும் சோதிக்கும்.
ஆம், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் தரும் வலி பலமான மனதைக்கூட தவறான எண்ணங்களுக்குத் தூண்டும் அளவு வலிமை கொண்டது. இதை குடும்ப உறுப்பினர்கள் உணர்ந்து அவர்களை அரவணைக்க வேண்டும். தனிமையில் அவர்களை விடவே கூடாது. தேவைப்பட்டால் மன நல மருத்துவ ஆலோசனையும் தர வேண்டியிருக்கும் என்பதையும் பதிவு செய்கிறேன்.
சிகிச்சை வழிமுறைகள் மற்றும் வாழ்நாள் கண்காணிப்பு
ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸுக்கு எதிராகச் செயல்படும் என்று நிரூபணமான DMARDs களை மருத்துவப் பரிந்துரையில், அவரது மேற்பார்வையில் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்து எடுக்க வேண்டியிருக்கும். மாத்திரைகளின் அளவுகள் நோயின் நிலைக்கு ஏற்ப கூடும், குறையும். மேலும், மேற்கூறிய மருந்துகளுக்கு அவைகளுக்கே உரிய பக்க விளைவுகளும் உண்டு. அவற்றை முறையாகக் கண்டறிந்து மருந்துகளை மாற்றியமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு முறையாக மருத்துவரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சந்திக்க வேண்டும்.
ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸைப் பொருத்தவரை, முறையான நவீன மருத்துவத்தை மருத்துவ நிபுணரின் கண்காணிப்பில் தொடர்ந்து எடுப்பது நீண்டநாள் நன்மைக்கு உதவும். மருத்துவர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதும் நல்லதல்ல. மருத்துவ முறைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதும் பயன்தராது.
ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் மற்றும் வாழ்க்கை முறை
- ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் பாதிக்கப்பட்ட ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை.
- தாம்பத்யத்திலும், மகப்பேறிலும் சிக்கல் இல்லை.
- மேலும், முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நபர்கள் சராசரி நபர்கள் போலவே நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ முடியும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
- இனிப்பு சுவை தரும் அனைத்தும்
- கோதுமை
- மைதா
- வெஜிடபுள் எண்ணெய்கள்
- எண்ணெயில் பொரித்த பண்டங்கள்
- தானியங்களை முடிந்த அளவு தவிர்ப்பது (சிறந்த பலன் தரும்)
- வெளிப் பண்டங்கள் (கடைகளில் வாங்கப்படும் உணவுகள்)
- வீட்டில் சமைக்கப்படாத உணவுகள்
- மது / புகை
- செயற்கை நிறமிகள்/செயற்கை சுவைமிகள்/குளிர்பானங்கள்
- பீன்ஸ் / கடலை / கொட்டை வகைகள்
சேர்க்க வேண்டிய உணவுகள்:
- நெய்
- செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்
- மாமிசம்
- காய்கறிகள்
- முட்டைகள்
- மீன் வகைகள்
- தானியங்கள் சேர்க்க வேண்டுமென்றால் அளவாக அரிசி மட்டும் எடுப்பது சிறந்தது. கோதுமை/மைதா முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
- பால்/பனீர் (சைவ உணவாளர்களுக்கு)
இயன்முறை சிகிச்சை (Physiotherapy)
மேலும், முடக்கு வாதத்தினால் ஏற்படும் முடக்கத்தைச் சரிசெய்ய தினமும் நோயாளிகள் தங்களுக்குத் தாங்களே செய்துகொள்ளும் இயன்முறை சிகிச்சை அவசியம். இவற்றை இயன்முறை சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெற்று தினமும் செய்து வர வேண்டும். இது மூட்டுகள் இறுக்கமாவதைத் தடுக்கும். தளர்வுடன் இருந்து நன்றாகப் பணி செய்ய உதவும்.
மேற்கூறிய உணவு முறை மாற்றத்தையும் புகுத்தி, முறையான சிகிச்சை எடுத்து, மூட்டுகளின் நலனைப் பேணிக்காத்திட வேண்டி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். பிணியற்ற வாழ்வை ரூமட்டாய்டு மக்களுக்குப் பிரார்த்திக்கிறேன்.



