பரோட்டா சூரி கதை எழுதி, நடித்த ‘மாமன்’ பட இசை வெளியீட்டு விழா செய்திகள்!

பரோட்டா சூரி கதை எழுதி, நடித்த ‘மாமன்’ பட இசை வெளியீட்டு விழா செய்திகள்!

டிகர் பரோட்டா சூரி கதை எழுதி நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார். எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகை சுவாசிகா பேசுகையில்,” படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் சிறப்பாக நடித்தால் நன்றாக நடித்திருக்கிறாய் என்ற பாராட்டை அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். இது எனக்கு உற்சாகத்தை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் பாசிட்டிவ் வைப்( Vibe) புடன் இருந்தனர்.இந்த திரைப்படத்தில் குடும்பத்தில் உள்ள உறவுகளை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தை பார்க்கும் போது எனக்கும் ஒரு சகோதரர் இருக்கிறார். அவரை நாம் தவறவிட்ட தருணங்களை நினைவுபடுத்துகிறது. தமிழகத்தை போல் தாய்மாமன்களுக்கான கலாச்சார ரீதியிலான முக்கியத்துவம் கேரளாவில் இல்லை என்றாலும் ,கேரளாவிலும் தாய் மாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் மனதில் பயம் இருக்கும். மரியாதை இருக்கும். எனக்கும் தாய் மாமன் இருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் இந்த படம் பார்க்கும்போது ஒரு நெருக்கம் ஏற்படும்.
படப்பிடிப்பு தளத்தில் மொழி பிரச்சனையை எதிர்கொள்வதற்காக உதவி இயக்குநர்கள் உதவி செய்தார்கள். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ லப்பர் பந்து ‘படத்திற்குப் பிறகு ‘ மாமன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். படத்தைப் பற்றிய ரசிகர்களின் கருத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசுகையில்,”இரண்டு நிமிட ட்ரெய்லரை பார்த்தோம். அதில் இந்த சின்ன பையனுக்கு இவர்தான் மாமன் என்ற நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்தினார். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.விலங்கு வெப் சீரிஸை பார்த்துவிட்டு தமிழில் வெளியாகி இருக்கும் சிறப்பான இணைய தொடர் மட்டுமல்ல பெஸ்ட் கன்டென்ட். அந்தத் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடைய இயக்கத்தில் உருவாகும் படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இசையமைப்பாளர் ஹேஷாம் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். மிகவும் குறுகிய காலத்திற்குள் பாடல்களை அவர் உருவாக்கினார். அனைத்தையும் பொறுப்புடன் பணியாற்றினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நான் மிகவும் மதிக்கும் பல திறமைசாலிகள் இங்கு இருக்கிறார்கள். திங்க் மியூசிக் சந்தோஷின் வார்த்தைகள் இந்த படக்குழுவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்திருக்கிறது. ” என்றார்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசுகையில், ” என் இசையில் தமிழில் வெளியாகும் முதல் திரைப்படம் ‘மாமன்’. இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் ஜூம் மீட்டிங்கில் தான் சந்தித்து கதையை சொல்லத் தொடங்கினார். அந்தத் தருணத்தில் நான் வேறொரு படத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதன் பிறகு அன்று இரவு கதையை முழுவதுமாக சொன்னார். படத்தின் கதையை இடைவேளை வரை சொல்லும் போதே என் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்கு நாம் இசையமைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன்.பொதுவாக ஒரு கதையை முழுவதுமாக கேட்ட பிறகு அதனை என் மனைவியிடம் சொல்லி, விவாதித்து, அடுத்த நாள் காலையில் தான் இசையமைப்ப ஒப்புக் கொள்வதா? வேண்டாமா? என்பதை தீர்மானிப்பேன். படத்தின் இரண்டாம் பாதியை கேட்டுவிட்டு உடனடியாக இயக்குநரிடம் இப்படத்திற்கு நான் இசை அமைக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்போது அவரிடம் நான் இதுவரை கேட்ட கதைகளிலே இது மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. எனக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்றேன்.இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது என் மனைவியும் கண்ணீர் வடித்தார். இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.

ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில்,”மாமன் திரைப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவை அளவு கடந்து நேசிக்கும் கலைஞர்களைத்தான் இங்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டதாக பலரும் இங்கு சொன்னார்கள். இதற்கு காரணமாக இருந்த எடிட்டர் கணேஷ் சிவா அவர்களுக்கும், இசையமைப்பாளர் ஹேஷாமிற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் ட்ரெய்லர் மே முதல் தேதி அன்று வெளியானது. இந்த திரைப்படம் 16ஆம் தேதி தானே வெளியாகிறது. அதற்குள் படத்தைப் பற்றிய விசயங்கள் தெரிந்து விடுமோ..! என கவலை அடைந்தேன். ஆனால் இதை யாரிடமும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அந்த ரெண்டு நிமிடத்திற்குள் என்ன சொல்ல வேண்டும் அதனை சரியாக சொல்லியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் ராஜ்கிரண் பேசுகையில்,”இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமிதமாக நினைக்கிறேன். இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சூரியும், அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவும் ,அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுவாசிகாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், ஜெயபிரகாஷ், நான் என பலர் இருக்கிறோம். எல்லோரும் அவங்களுடைய பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்குநர் பிரசாந்த் அழகாக கையாண்டார். இந்த விழாவை சிறப்பிக்க வருகை தந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி ” என்றார்.

நடிகர் சூரி பேசுகையில்,”இப்படத்தின் கதையை நான் எழுதி இருந்தாலும் எனது பெயர் வரவேண்டாம் என இயக்குநரிடம் சொல்லி இருந்தேன். ஆனாலும் இப்படத்தின் கதை என எனது பெயர் இடம் பிடித்திருக்கிறது. இதற்கு காரணமான திங்க் மியூசிக் சந்தோஷிற்கு நன்றி. ஒரு படம் பிடித்து விட்டால் அதைப்பற்றி திரையுலகம் முழுவதும் சொல்லி கொண்டாடும் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி. நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம். இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி’. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்தப் படத்தின் கதை உருவானதும் இங்கிருந்து தான். நான் இந்த படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களை தான் சொல்லி இருக்கிறேன்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னை சந்தித்து இரண்டு கதைகளை சொன்னார். இரண்டும் நன்றாக இருந்தது. இருந்தாலும் தயாரிப்பாளர் குமார், ‘உங்களிடம் இருக்கும் கதையை சொல்லுங்கள். அதை பிரசாந்த் திரைக்கதையாக மாற்றி இயக்குவார் ‘ என சொன்னார். நான் முதலில் தயங்கினேன். பிறகு இந்த படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். குடும்பத்தில் அம்மா அப்பா தாத்தா பாட்டி அண்ணன் தங்கை என எத்தனையோ உறவுகள் இருந்தாலும் ஸ்பெஷலான உறவு என்றால்.. அது தாய் மாமன் உறவு தான். தாய்க்குப் பிறகு தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஒரு உறவு என்றால் அது தாய் மாமன் தான்.‌ தாய் மாமனை பற்றி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு சின்ன பையனுக்கும் அவனுடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை சொல்லி இருக்கிறோம். இந்த கதையை இயக்குநர் வெற்றிமாறனிடம் ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறேன். அவரும் நன்றாக இருக்கிறது என சொன்னார். இந்த கதையை கேட்டதும் பிரசாந்த் பாண்டிராஜ், ‘அண்ணே இந்த கதை என்னுடைய குடும்பத்திலும் நடந்திருக்கிறது’ என்றார்.‌இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையானதாக இருக்கிறது என சொல்லி இப்படத்தை இயக்கத் தொடங்கினார். இந்தப் படத்திற்கு முக்கியமான நடிகரே அந்த சின்னப் பையன் தான். அவர் யார்? என்று இயக்குநரிடம் கேட்டேன். அந்த கதாபாத்திரத்திற்காக தயாரிப்பாளர் மூன்று குழந்தை நட்சத்திரங்கள் நட்சத்திரங்களை பரிந்துரைத்தார். நான் ஒரு பத்து குழந்தை நட்சத்திரங்களை பரிந்துரைத்தேன். காரில் பயணிக்கும் போது எதிரில் தென்படும் குழந்தைகள் எல்லாம் போனில் போட்டோ எடுக்க தொடங்கினேன். படப்பிடிப்பும் தொடங்கியது. அதன் பிறகு இயக்குநர் மாஸ்டர் பிரகீத் சிவனை அறிமுகப்படுத்தினார். அவர் இயக்குநரின் மகன் என்பது அதன் பிறகு தான் தெரியும். அந்த பையனும் மிகச் சிறப்பாக நடித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவனின் சேட்டைகளை அனைவரும் ரசித்தோம். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் குடும்பத்தை மே 16ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு சென்று பார்க்க போகிறீர்கள். பல குடும்பங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் நடக்கும். ” என்றார்.

error: Content is protected !!