2000 ரூபாய் நோட்டுக்கும் நாள் குறிச்சாச்சு – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு!
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே நம் நாட்டில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர பட உள்ளதாகவும், அதே சமயம் புழங்கிக் கொண்டிருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வைரல் ஆனது. 2018-2019 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய ரூ.2000 நோட்களை அச்சடிக்க முடிவெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்ததற்கு பிறகு ரூ.1000 மற்றும் ரூ.2000 நோட்கள் பற்றிய செய்திகள் அதிகமாக பகிரப்பட்டன. ஆனால் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB Fact Check) ‘உண்மை கண்டறியும்’ பிரிவு, “சமூக வலைதளங்களில் வெளியான தகவல் உண்மையில்லை. உறுதிப்படுத்தப்படாதா, தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம்.” என்று தெரிவித்திருந்தது. மேலும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் இன்று இந்தியாவில் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆட்சியி பிரதமர் மோடி தலைமை பொறுப்பேற்ற பிறகு எடுத்த நடவடிக்கையிலே மக்களால் எப்போதும் மறக்க முடியாத நடவடிக்கை 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பே. இதனால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்பட்டனர். அப்போதுதான், 2 ஆயிரம் தாள்கள் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு முதலே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் போதியளவில் புழக்கத்தில் இல்லாமல் காணப்பட்டது. மேலும். இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிப்பதை 2019ம் ஆண்டே நிறுத்திவிட்டதாக கூறினர். இந்த சூழலில்தான் ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,” ஆர்.பி.ஐ. சட்டவிதிப்படி 24 (1)ன் படி, 2016ம் ஆண்டு ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டது. இந்த ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் 2018 – 2019ம் ஆண்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே ரூபாய் 2 ஆயிரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். – மே 23 ஆம் தேதி முதல் பொது மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும். பொது மக்கள் ஒரே சமயத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். – ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை பொது மக்களிடம் வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


