June 4, 2023

யாதும் ஊரே யாவரும் கேளிர்- விமர்சனம்!

கிடைத்த வாய்ப்பில் எல்லாம் சமத்துவம், உரிமை எல்லாம் பேசும் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடன் அசிஸ்டெண்டாக இருந்த வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கியுள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். தயாராகி சில பல ஆண்டுகளாக ரிலீஸாக வழிதெரியாமல் இருந்த படத்தை சக்தி ஃபிலிம்ஸ் சக்திவேல் தயவில் இன்று ரிலீஸ் செய்து விட்டார்கள். இந்த படத்தின் மூலம் இலங்கைப் போர் அதனால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அகதிகளின் சோக வாழ்வை சொல்ல முயன்றிருக்கிறார்..ஆனால் விசு பட பாணியில் டயலாக்-கை வைத்தே படம் முழுவதையும் ஒப்பேற்றி விட்டதால் பாஸ் மார்க் வாங்க தவறிவிட்டது ..!

படத்தின் கதை என்னவென்றால் இலங்கை இறுதி யுத்தத்தின் போது நடந்த ராக்கெட் தாக்குதலில் அப்பா. அம்மாவை இழந்த சிறுவன் புனிதனை சர்ச் ஃபாதர் ஒருவர் மீட்டு லண்டனுக்கு அனுப்புகிறார். ஆனால் வழியிலேயே இலங்கை இராணுவம் சிறுவனை யும் மற்றவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது. அங்கு ஒருவழியாக விடுதலையாகி கள்ள தோணியில் கேரளா செல்கிறான். அங்கே உள்ள இசை கருவிகள் செய்யும் கடையில் வேலை செய்கிறான். கூடவே லண்டன் இசைப்பளியில் போட்டியில் ஆன் லைன் மூலமாக கலந்து கொள்கிறான். அதில் அவனால் பங்கேற்க முடிந்ததா? இதற்கிடையில் தன்னை சுட்டுக்கொல்ல துரத்தும் போலீஸ் அதிகாரியிடமிருந்து கிருபாவால் உயிர் பிழைக்க முடிந்ததா என்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதே இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர்..!

ஈழ போரின் ஈன ஒலியுடன், நாடறவனாக இசையுலகில் சாதிக்க துடிக்கும் பெருங்கனவு, காதலன் போர்வையில் வருகிறார் விஜய் சேதுபதி. ஆனால், எடுத்துக் கொண்ட கேரக்டரின் வெயிட்டை புரிந்து கொள்ளாமல அசட்டையாக தன் ரோலை செய்து பெயில் ஆகி விட்டார்.. டயலாக்கில் கூட கவனம் செலுத்தாமல் முன்னரே சொன்னது போல் மேடை நாடக பாணியில் தன் பங்களிப்பை வழங்கி சொதப்பி விட்டார்.. நாயகி மேகா ஆகாஷ் லவ்வைக் கூட செயற்கையாக வெளிப்படுத்துவதுதான் சோகம் . மறைந்த நடிகர் விவேக் போர்சன் எடுபடவில்லை..வில்லனாக வரும் மகிழ் திருமேனி, ஆரம்பத்தில் அமர்களமாக தொடங்கி கிளைமாக்சில் காற்ரு போன பலூனாகி விடுகிறார். மேலும் பவா செல்லதுரை, மோகன் ராஜா, ரித்விகா, ரகு ஆதித்யா, கரு.பழனியப்பன், சின்னி ஜெயந்த், இமான் அண்ணாச்சி, வித்யா பிரதீப் என ஏகப்பட்டபேர் தென்பட்டு மறைந்து விடுகிறார்கள்..

நம் தமிழ்நாட்டில் மொத்தம் 108 இலங்கைத் தமிழர் முகாம்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவரும் 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது புலம்பெயர்ந்து தமிழகம் வந்தவர்கள். இதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருபவர்களும் உள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பாக சில உதவிகள் கிடைத்து வருகின்றன. ஆனால், இந்திய சட்டத்தின் பார்வையில் இவர்கள் அனைவருமே சட்டவிரோத குடியேறிகள். அவர்களுக்கு பாஸ்போர்ட் அல்லது விசா என்பதே கிடையாது. ஐ.நா-வின் குடியுரிமைச் சட்டத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை. ஆகவே, அகதிகளுக்குக் குடியுரிமை அளிப்பதில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவிகளைச் செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் மட்டும் 70 ஆயிரம் அகதிகள் உள்ளனர். இவர்கள் அரசின் நேரடிக் கணக்குக்குள் வருபவர்கள். வெளியில் தனியாகத் தங்கி உள்ளவர்களைக் கணக்கிட்டால் 30 ஆயிரத்துக்குள் வருவார்கள். அப்படிப் பார்த்தால், ஒரு லட்சம் பேர் வரையில் தமிழ்நாட்டில் உள்ளனர். இப்படியான சூழ்நிலையில் இங்குள்ள அகதிகள் முகாம்களில் இலங்கை மக்கள் இரக்கமின்றி நடத்தப்படுவதாகவும், அகதி அடையாள அட்டைகளை வாங்குவதே படு சிரமம் என்பதுடன் இவ்வொரு அகதி வாழ்க்கை முழுவதும் பின்தொடரும் ‘கியூ’ பிரான்ச் தொந்தரவுகளைச் சொல்லி அனுதாபம் தேட முயன்றிருக்கிறார் டைரக்டர்..ஆனால் எடுத்துக் கொண்ட விஷயங்களை சொல்லும் திரைக் கதைப் பாணியை ஜனநாதனிடன் கற்றுக் கொள்ள தவறி விட்டதால் டைம் வேஸ்ட் ஆனதே மிச்சம்

மார்க் 2.5/5