பிச்சைக்காரன் – விமர்சனம்!
விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, எடிட் செய்து நடித்துள்ள, பிச்சைக்காரன் 2 படத்திலும் ஊழல் தொடர்பாக விரிவாக பேசப்பட்டுள்ளது. இந்த படம் ரிலீஸான நாளில்தான், 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆக விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படங்கள் வெளியாகிய இரண்டு வருடங்களிலும், மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாக இல்லாவிட்டாலும், சுவாரஸ்யமான சம்பவமாக பேசப்படுகிறது. பிச்சைக்காரன் 3 ஆம் பாகம் வெளியானால், அப்போது அரசிடம் இருந்து என்ன அறிவிப்பு வரப்போகிறது என்று நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்பது தனிக் கதை..!
பிச்சைக்காரனில் அம்மா சென்டிமெண்ட்டை வைத்து ஹிட் ஆன நிலையில் பார்ட் டூ-வில் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு கதை பண்ணி இருக்கிறார். அதாவது இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் விஜய் ஆண்டனியின் சொத்துக்களை கொள்ளையடிக்க நினைக்கும் இவரது நண்பர்களான ஜான் விஜய், தேவ் கில், ஹரிஷ் பேரோடி விஜய் ஆண்டனியை கொலை செய்துவிட்டு அவரது மூளையை அகற்றி விட்டு பிச்சைக்காரனாக இருக்கும் இன்னொரு விஜய் ஆண்டனியின் மூளையை பணக்கார விஜய் ஆண்டனியின் தலைக்குள் வைத்து அறுவை சிகிச்சை செய்து விடுகின்றனர். இப்போது பிச்சைக்கார மூளை வைத்திருக்கும் பணக்கார விஜய் ஆண்டனி தாங்கள் சொல்லுகின்ற பேச்சை கேட்டு அவரது சொத்துக்களை தங்களுக்கே கொடுத்து விடுவார் என்று எண்ணிய நேரத்தில் அவர் ஒரு பிச்சைக்காரன் மட்டுமில்லை அவர் ஒரு கொலைகாரன் என்ற உண்மையும் இவர்களுக்குத் தெரிய வருகிறது. இதை அடுத்து அதிர்ச்சி அடையும் கொலைகார நண்பர்கள் சுதாரிப்பதற்குள் பிச்சைக்கார விஜய் ஆண்டனி இவர்களைப் போட்டுத் தள்ளி விடுகிறார். இதையடுத்து பணக்காரராகவே மாறும் பிச்சைக்கார விஜய் ஆண்டனி அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி முடிவுகள் என்ன? காணாமல் போன தன் தங்கையை கண்டுபிடித்தாரா இல்லையா? என்பதே பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்டோரி..
ஒரு இசை அமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் எப்போதோ ஜெயித்து விட்ட விஜய் ஆண்டனி நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருப்பது இப்படத்தில்தான்.. அதிலும் ஆக்சன் காட்சிகள் அடடே சொல்ல வைக்கிறார். ஹீரோயின் காவியா தப்பார் வழக்கமான நாயகியாக வந்து சென்று இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் நண்பர்களாக வரும் ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ்கில் ஆகியோர் அவரவருக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி முக்கிய வேடத்தில் வரும் ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் அனுபவ நடிப்பின் மூலம் மிளிர்கின்றனர். வழக்கமாக பல படங்களில் வருவது போல் இந்தப் படத்திலும் யோகி பாபு இருக்கிறார். சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகளிலேயே வந்தாலும் மனதில் பதிகிறார் மன்சூர் அலிகான்.
அது போல் ஜூனியர் விஜய் ஆண்டனியும், சின்ன வயசு தங்கையும் க்யூட்.
.கேமராமேன் ஓம் நாராயணனின் ஒர்க் அவ்வளவாக திருப்தி இல்லை. இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசையில் பின்னி இருக்கிறார் குறிப்பாக பிச்சைக்காரன் முதல் பாகத்தில் இருந்த அதே பின்னணி இசை பாடலையும் ஆங்காங்கே ஒலிக்கச் செய்து இன்வால்மெண்ட் பண்ண வைத்து விட்டார்.
ஆனால் இயக்குனராக கொஞ்சம் சறுக்கி விட்டார் என தோன்றுகிறது. ஒரு நல்ல கருத்தை முன்னிறுத்தி திரைக்கதை அமைத்திருந்தாலும், பெரிதாக சுவாரஸ்யம் இல்லை. கதையை பொறுத்தவரை MGR காலத்து கதைதான் என்றாலும் டெக்னாலஜியை இடையில் நுழைத்து புதிதாக முயற்சி செய்துள்ளார் ஆனால் ஒட்டவில்லை. குறிப்பாக , VFX காட்சிகள் படு மோசமாகவே இருந்தது, கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் பிச்சைக்காரன் 2- ஒரு முறைப் பார்க்கலாம்
மார்க் 3/5